'தமிழக ஆலையில் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி' - ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால்!
இந்த மாதம் இ-ஸ்கூட்டர் அறிமுகம் செய்ய வாய்ப்பு!
கால் டாக்சி நிறுவனமான ஓலாவின் மின் வாகனப் பிரிவான ஓலா எலெக்ட்ரிக், சில மாதங்கள் முன்பு உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையை தமிழகத்தில் அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
ரூ.2400 கோடி முதலீட்டில் இந்த ஆலையானது அமைக்கப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலை ஆண்டுக்கு இரண்டு மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும் என்றும், 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் ஓலா எலெக்ட்ரிக் தனது அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தது.
இந்த நிலையில், விரைவில் தமிழ்நாட்டில் உள்ள தனது தொழிற்சாலையில் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியைத் தொடங்கவுள்ளதாக ஓலா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார். டுவிட்டரில்,
“கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். ஸ்கூட்டர் தயாரிப்பு விரைவில் தொடங்கப்படும். காத்திருப்புப் பட்டியலில் உங்கள் பெயரை இணைத்து புரட்சிக்கு வித்திடுங்கள்," என்று நெகிழ்வுடன் இது தொடர்பாக பகிர்ந்திருந்தார்.
இந்த ட்வீட்டுடன் கூடவே, தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் வீடியோவாக பகிர்ந்திருந்தார்.
முன்னதாக கடந்த மாதம், ஓலாவின் மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலையின் முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக பாவிஷ் கூறியிருந்தார். உற்பத்தி தொடங்கவிருக்கும் நிலையில், ஓலா நிறுவனம் தனது இ-ஸ்கூட்டரின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை இன்னும் வெளியிடவில்லை என்றாலும்,
400 நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜிங் பாயிண்டுகளை அமைக்கும் விதமாக 'ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்' அமைக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், இந்த ஜூலை மாதம் இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும், இந்த நிதியாண்டில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் உள்ளிட்ட சர்வதேசச் சந்தைகளுக்கு வாகனத்தை எடுத்துச் செல்வது குறித்து ஓலா எலெக்ட்ரிக் பணிகளை துவங்கியுள்ளது என அந்த நிறுவனத்தின் உயர் நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடு ஓலாவின் இயக்கம் மிகவும் நிலையான, அணுகக்கூடிய மற்றும் இணைக்கப்பட்ட எதிர்காலத்திற்கு நகரும் உலகளாவிய பார்வைக்கு ஏற்ப உள்ளது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு ஓலா எலெக்ட்ரிக், ஆம்ஸ்டர்டாமை தளமாகக் கொண்ட எடெர்கோ பி.வி.யையும் பெரும் தொகைக்கு வாங்கியது. எடெர்கோவின் கையகப்படுத்தல் மின்சார இயக்கம் இடத்தில் அதன் பொறியியல் மற்றும் வடிவமைப்பு திறன்களை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது குறிப்பிடத்தக்கது.