மக்கும் தன்மை கொண்ட சானிட்டரி பேட்களை வீட்டிலேயே தயாரிக்கும் ’பேட்வுமன்’
கோவாவைச் சேர்ந்த ஜெய்ஸ்ரீ பர்வார் பைன் மர பேப்பரினால் ஆன சானிட்டரி பேட்களை தயாரிக்கிறார். இவை மக்கும் தன்மை கொண்டவை.
இந்தியாவில் இன்றளவும் மாதவிலக்கு தொடர்பான சமூகக் கட்டுப்பாடுகள் காணப்படுகிறது. மாதவிடாய் சுகாதாரத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. எனினும் பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடன் இணைந்து மாதவிடாய் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண மாநில அரசாங்கங்கள் முயற்சிகள் மேற்கொள்வது சிறந்த முன்னெடுப்பாகும்.
கோவாவைச் சேர்ந்த ஜெய்ஸ்ரீ பர்வார் இதில் பங்களிக்கிறார். இவர் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து மக்கும் தன்மை கொண்ட சானிட்டரி பேட்களை தயாரித்து வருகிறார்.
மக்கும் தன்மை கொண்ட சானிட்டரி பேட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவை குறைந்த விலையில் வழங்கப்படவேண்டும் என்பதே நோக்கம்.
கோவாவின் பஞ்சிம் பகுதியில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள பிகோலின் தாலுகாவைச் சேர்ந்த முல்காவ் கிராமத்தில் ’சஹேலி’ என்கிற, பெண்கள் அடங்கிய சுய உதவிக் குழுவை ஜெய்ஸ்ரீ வழிநடத்துகிறார். இந்தக் குழு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான, மக்கும் தன்மை கொண்ட சானிட்டரி நேப்கின்களை தயாரிப்பதற்காக 2015ம் ஆண்டு ஒரு நிறுவனத்தைத் தொடங்கியது.
இந்த சானிட்டரி பேட்கள் தயாரிப்பில் சிலிக்கான் பேப்பர், பட்டர் பேப்பர், நெய்யப்படாத துணி, காட்டன் போன்றவை பயன்படுத்தப்பட்டாலும் பைன் மரத்தினாலான பேப்பர் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனம் நான்கு இயந்திரங்களைக் கொண்டு ஒரு நாளைக்கு 100 பேட்களை தயாரிக்கிறது. இதுவரை சஹேலி 2,000-க்கும் அதிகமான பேட்களைத் தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளது.
சகி (Sakhi) என்றழைக்கப்படும் இந்த நேப்கின்கள் சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளது. ஆன்லைன் மூலம் மற்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஜெய்ஸ்ரீ என்டிடிவி உடனான உரையாடலில் கூறும்போது,
“உள்நாட்டில் இருந்து அதிகளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் ஆன்லைன் தேவை அதிகமாக உள்ளது,” என்றார்.
அவர் மேலும் கூறும்போது,
“வழக்கமான சானிட்டரி பேட்கள் பயன்பாட்டிற்குப் பிறகு எளிதாக மக்காது என்பதே அடிப்படை பிரச்சனை. ஆனால் நாங்கள் தயாரிக்கும் பேட்கள் பைன் மர பேப்பரால் ஆனவை. எனவே பயன்பாட்டிற்குப் பிறகு பேட்களை மண்ணில் புதைத்துவிட்டால் எட்டு நாட்களுக்குள் அவை மக்கிவிடும்,” என்றார்.
உந்துதல்
பெண்களுக்காக மலிவு விலையில், மக்கும் தன்மை கொண்ட பேட்களை தயாரித்த, இந்தியாவின் ’பேட்மேன்’ என்றழைக்கப்படும் சமூக ஆர்வலரான அருணாச்சலம் முருகானந்தம் ஜெய்ஸ்ரீக்கு உந்துதலளித்துள்ளார்.
T2 online உடனான உரையாடலில் ஜெய்ஸ்ரீ கூறும்போது,
“சில ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு பொதுவான நண்பர் ஒருவர் மூலம் திரு. முருகானந்தன் அவர்கள் எனக்கு அறிமுகமானார். அவரை சந்தித்த பிறகு முதலில் எனது கிராமத்திலும் பின்னர் நம் நாட்டிலும் காணப்படும் சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் பங்களிக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். அதன் பிறகு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தேன். கிராமத்தைச் சேர்ந்த 10 பெண்களை ஒரு குழுவாக ஒன்றிணைத்தேன். அவர்கள் முதலில் தயக்கம் காட்டினாலும் பின்னர் என்னுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்,” என்றார்.
ஆனால் ஜெய்ஸ்ரீயின் இந்தப் பயணம் எளிதாக இருக்கவில்லை. அவரது முயற்சிக்கு ஆரம்பத்தில் அதிக வரவேற்பு கிடைக்கவில்லை.
ஜெய்ஸ்ரீ கிராமங்களில் நடந்த கண்காட்சிகளில் ஸ்டால் அமைத்தபோது சானிட்டரி பேட்களைக் கண்டதும் மக்கள் தங்களது பார்வையை திருப்பிக்கொண்டனர். ஆனால் இது குறித்த புரிதல் இருந்தவர்கள் வந்து வாங்கிச் சென்றனர் என ’இந்தியன் வுமன் ப்ளாக்’ குறிப்பிட்டுள்ளது.
தயாரிப்பு
“பல்வேறு சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பில் நான் இருக்கிறேன். ஒரு முறை சுற்றுச்சூழலுக்கு உகந்த சானிட்டரி பேட்கள் தயாரிப்பில் ஈடுபடுவதில் யாருக்கு ஆர்வம் இருக்கிறது என கேட்கப்பட்டது. அந்தப் பணியை நான் ஏற்றுக்கொண்டேன். இதற்கான முக்கிய மூலப்பொருள் பைன் மர பேப்பர். இந்த பேடை மண்ணில் புதைத்து வைத்தால் எட்டு நாட்களுக்குள் மக்கிவிடும்,” என ’இந்தியன் வுமன் ப்ளாக்’ உடனான உரையாடலில் ஜெய்ஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்ஸ்ரீயின் வீட்டிலேயே மொத்த தயாரிப்பு செயல்முறைகளும் மேற்கொள்ளப்படுகிறது. மக்கும் தன்மை கொண்ட சானிட்டரி பேட் தயாரிப்பு மூலம் இவர் தனது கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறார். ஒவ்வொரு குழுவிலும் 10 பெண்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் நன்கொடையாக வழங்குகின்றனர். சுயமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த பேட்கள் அமேசான் தளத்தில் ஆன்லைனில் கிடைக்கிறது. வருங்காலத்தில் இந்தத் தயாரிப்பு அனைவரையும் சென்றடையவேண்டும் என்பதற்காக இந்தியா முழுவதும் ஸ்டோர்கள் திறக்க விரும்புகிறார் ஜெய்ஸ்ரீ.
கட்டுரை: THINK CHANGE INDIA