‘நீங்களே பேரம் பேசி குறைந்த விலையில் பொருளை வாங்கலாம்’ - சென்னை நண்பர்கள் தொடங்கிய ஆன்லைன் தளம்!
ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதற்கு முன் பல விற்பனையாளர்களிடம் இருந்து விலைப்பட்டியலை வாங்கிவிட்டு, குறைவான விலையில் தருபவரிடம் ஏலம் முறையில் வாங்க உதவும் ஆன்லைன் தளம் ‘Jinglebid'.
ஒருவர் ஒரு பொருளை வாங்கவேண்டுமானால் என்ன செய்வார்? நேரடியாகக் கடைக்குச் சென்று வாங்குவார். ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியானது பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைக்க உதவுகிறது.
இது ஒருபுறம் இருக்க, பொருட்களை ஏலத்தில் விட்டு யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்குக் கொடுக்கும் முறையும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இதை அப்படியே தலைகீழாக செய்தால் எப்படி இருக்கும்?
இப்படி கற்பனை செய்து பாருங்கள். விற்பனையாளருக்கு பதிலாக நுகர்வோர் ஏலம் விடலாம். நுகர்வோர் தங்களுக்குத் தேவையான பொருளைப் பற்றி தெரியப்படுத்தலாம். பல விற்பனையாளர்கள் அந்த பொருளுக்கான தங்களது விலையைத் தெரிவிக்கலாம். இப்படி பல விற்பனையாளர்கள் முன்வந்து விலையைப் பகிர்ந்துகொள்வார்கள். யார் குறைந்த விலைக்குக் கொடுக்க முன்வருகிறார்களோ அவர்களிடம் நுகர்வோர் வாங்கிக்கொள்ளலாம். அதாங்க பல கடைகளுக்குச் சென்று பேரம் பேசி குறைந்த விலையில் விற்பவரிடம் பொருளை வாங்குவது... அதையே ஆன்லைனில் இனி நீங்கள் செய்யலாம்.
இந்தப் புதுமையான சிந்தனை உதித்ததால் ஒரு புதுமையான வணிக முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒரு பொருளை என்னென்ன முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு நுகர்வோர் தேர்வு செய்வார்கள்?
- பொருள் தரமானதாக இருக்கவேண்டும்.
- அதிக சாய்ஸ் இருக்கவேண்டும்.
- குறைந்த விலையில் இருக்கவேண்டும்.
- கடை அருகிலேயே இருந்தால் சிறந்தது.
இந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வணிக முயற்சியை உருவாக்கியுள்ளனர் சென்னைச் சேர்ந்த நண்பர்கள். வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் இருவரின் தேவைகளும் பூர்த்தி செய்து, இரு தரப்பினரும் பலனடையும் வகையில் ஒரு தளத்தை உருவாக்கியுள்ளனர் இந்தத் தொழில்முனைவோர்.
JingleBid தளம்
கிருஷ்ணன், சுதர்சன் இருவரும் இணைந்து JingleBid நிறுவனத்தை நிறுவியுள்ளனர். கிருஷ்ணன் இதற்கு முன்பே பல ஸ்டார்ட் அப் முயற்சிகளில் ஈடுபட்டவர். இந்த வணிக முயற்சிகள் அனைத்துமே முக்கியப் பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கியுள்ளது.
சுதர்சன், கிருஷ்ணனுடன் இணைந்து பல நிறுவங்களை நிறுவியுள்ளார். இவரும் புதுமையான சிந்தனைகள் கொண்டவர். இந்திய சந்தை தேவைகளை சிறப்பாகப் புரிந்துகொண்டுள்ளார்.
ஒருமுறை சுதர்சனுக்கு ஒரு புதுமையான யோசனை வந்துள்ளது.
ஏலம் விடும் முறையின் ரிவர்ஸ் இது. அதாவது வாடிக்கையாளர்கள் ஏலம் விட்டு விற்பனையாளர்களில் குறைந்த விலையில் பொருட்களைக் கொடுப்பவர்களிடம் வாங்கினால் எப்படி இருக்கும்? இதுபோன்ற ஒரு தளத்தை உருவாக்கலாம் என்று சிந்தித்தார். உடனே கிருஷ்ணனுடன் இதுகுறித்து கலந்து பேசினார். இதை இன்னும் ஆழமாக கலந்தாலோசிக்க விரும்பினார் கிருஷ்ணன்.
இது நடந்து இரண்டு மாதங்கள் கடந்திருக்கும். கிருஷ்ணன் ஃப்ரிட்ஜ் வாங்குவதற்காக ஷாப்பிங் சென்றிருந்தார். ஒவ்வொரு கடையாக சென்று விலை கேட்டுள்ளார். குறைந்த விலை நிர்ணயித்த கடையில் ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். அப்போது சுதர்சனின் யோசனையைப் பற்றி மீண்டும் சிந்தித்தார்.
இப்படி உருவானதுதான் JingleBid. 2020ம் ஆண்டு மே மாதம் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தியர்களின் பிரத்யேகத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியர்களால் இந்தியர்களுக்காகவே உருவாக்கப்பட்ட தளம்.
இணை நிறுவனர்கள்
கிருஷ்ணன், சுதர்சன் இருவரின் முயற்சியில் மேலும் இருவர் இணை நிறுவனர்களாக இணைந்துகொண்டனர். வெங்கடேஷ் கண்ணன்: இணை நிறுவனர் மற்றும் சிஎஃப்ஓ – இவர் ஆர்வமும் அனுபவமும் நிறைந்தவர். பல ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளார்.
ஸ்ரீவஸ் அனந்தராமன்: இணை நிறுவனர் மற்றும் சிஓஓ – இவர் ஐஐடி மற்றும் ஐஐஎம் முன்னாள் மாணவர். ஆபரேஷன்ஸ் மற்றும் பிராசஸ் ஆட்டோமேஷனில் வலுவான பின்னணி கொண்டவர்.
Jinglebid-ல் இருவரும் இணைந்து நிதி மற்றும் செயல்பாடுகளை வலுப்படுத்தினார்கள். நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் பெரும் பங்கு வகித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் கட்டுப்பாடு, வாடிக்கையாளர்களின் தேவைகளை உள்ளூர் வர்த்தகர்கள் பூர்த்தி செய்ய JingleBid தளம் உதவுகிறது.
எதை விற்பனை செய்யலாம்? எப்படி விற்பனை செய்யலாம்? என்ன விலைக்கு விற்கலாம்? இவை விற்பனையாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியது அவசியம். அதேபோல், வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பும் பொருட்களுக்கு அதிக சாய்ஸ் தேவைப்படும். இவர்கள் ஆன்லைனில் வாங்கினாலும் உள்ளூரில் உள்ள நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து வாங்கவே விரும்புவார்கள்.
அனைத்தும் டிஜிட்டல்மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை தளங்கள் தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. வாடிக்கையாளர்கள் என்ன வாங்கவேண்டும் என்பதை இவர்களே தீர்மானித்து விடுகிறார்கள். அவற்றையே விற்பனையும் செய்கிறார்கள், என்கிறார்கள் நிறுவனர்கள்.
JingleBid அறிமுகம் முதல் வாடிக்கையாளர்கள் இணைந்தது வரை….
JingleBid இந்தச் சூழலை மாற்றி விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் கட்டுப்பாட்டை வழங்குகிறது. 14 முக்கியப் பிரிவுகள் மற்றும் 135 துணைப் பிரிவுகளின்கீழ் இந்தத் தளம் பொருட்களை விற்பனை செய்கின்றன. 35000-க்கும் அதிகமான பயனர்களும் 1,200-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களும் இந்தத் தளத்தில் இணைந்துள்ளதாக நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.
நிறுவனர்கள் இந்த வணிக யோசனைக்கு செயல்வடிவம் கொடுத்ததும் அதற்கான செயலியை உருவாக்கினார்கள்.
“எங்கள் ஆப் ரெடி ஆனதும் அறிமுகப்படுத்தி அதை எங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸில் பகிர்ந்துகொண்டோம். JingleBid குழு அல்லாத வேறோரு குழுவைச் சேர்ந்த ஒருவர் அதன் மூலம் ஃப்ரிட்ஜ் வாங்க விரும்பி, எங்களை அணுகினார். அவரது பகுதிக்கு அருகில் இருந்த கடையில் குறைந்த விலையில் ஏற்பாடு செய்தோம். அதேபோல் எங்களைப் பற்றி ஒருவர் மற்றொரு குழுவில் பகிர்ந்துள்ளார். அதிலிருந்து ஒருவர் எங்கள் சேவையைப் பயன்படுத்தினார். இப்படி எங்கள் பயனர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது,” என்கின்றனர் நிறுவனர்கள்.
முதலீடு மற்றும் நிதி
JingleBid நிறுவனம் கிட்டத்தட்ட இந்த வணிகத்தில் 65,000 டாலர் முதலீடு செய்துள்ளது. பெரும்பாலும் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங், வணிக செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக செலவுகள் போன்றவற்றிற்குஇது பயன்படுத்தப்பட்டது.
Fourten Investments மூலம் 1,00,000 டாலர் ஏஞ்சல் நிதி திரட்டப்பட்டுள்ளதாக ஜின்கிள்பிட் நிறுவனர்கள் தெரிவித்தனர். இந்த நிதிச்சுற்றில் பெங்களூருவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான nuVentures பங்கேற்றது.
தனித்துவமான அம்சங்கள்
JingleBid மற்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் போன்றே வாடிக்கையாளர்களையும், விற்பனையாளர்களையும் ஒன்றிணைக்கிறது. இருப்பினும் சில குறிப்பிட்ட அம்சங்கள் இந்தத் தளத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
மற்ற தளங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் பொருளைத் தேர்வு செய்து ஆர்டர் செய்வார்கள். ஆனால் JingleBid தளத்தில் பொருளைத் தேர்வு செய்யும் பயனர் அதற்கான ஏலத்தைத் தொடங்கலாம். பயனரின் பகுதிக்கு அருகிலேயே இருக்கக்கூடிய விற்பனையாளர்களுக்கு இந்தக் கோரிக்கை செல்லும். விற்பனையாளர்கள் தங்கள் விலையை நிகழ்நேர அடிப்படையில் தளத்தில் பதிவிடலாம். பயனர் இதை உடனே பார்க்கமுடியும்.
இந்த சமயத்தில் பயனருக்கு விற்பனையாளர் யார் என்பது தெரியாது. அவர்கள் கொடுத்துள்ள விலையை மட்டுமே பட்டியலாகப் பார்க்கமுடியும். விற்பனையாளர் ஒருவர், தான் கொடுத்த விலையைக் காட்டிலும் குறைவாக மற்றவர்கள் கொடுத்திருப்பதை பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உடனே அவர் தன்னுடைய விலையைக் குறைக்க விரும்பலாம். அப்படி விரும்பினால் மீண்டும் விலையை மாற்றலாம்.
பயனர் பல்வேறு விற்பனையாளர்களின் இறுதி விலைப் பட்டியல்ப் பார்த்து முடிவு செய்ததும் டீல் முடிந்தது. ஆன்லைனில் பணத்தை அவர் தளத்தின் மூலம் செலுத்திவிடுவார். இந்த சமயத்தில்தான் பொருளை விற்பனை செய்வோரும் வாங்குவோரும் ஒருவரோடொருவர் அறிமுகமாவார்கள். இரு தரப்பினரின் தகவல்களும் பரிமாறிக்கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து பயனருக்கு பொருள் அனுப்பிவைக்கப்படும்.
பயனர் தேடும் பொருள் செயலியில் பட்டியலிடப்படவில்லை என்று வைத்துக்கொள்வோம். உடனே பயனர் அதற்கான கோரிக்கையை முன்வைக்கலாம். அதைத் தொடர்ந்து மேலே சொன்ன இதே செயல்முறை பின்பற்றப்பட்டு பயனருக்கு விருப்பமான பொருள், விருப்பமான விலையில் வந்து சேர்ந்துவிடும். பிறகென்ன? மகிழ்ச்சிதானே, என்கின்றனர் நிறுவனர்கள்.
சவால்கள் மற்றும் வணிக மாதிரி
இந்நிறுவனம் அதன் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு புரியவைப்பதில் சிரமங்களை சந்தித்துள்ளது என்று அதுவே பெரிய சவாலாக இருந்ததாக பகிர்ந்தனர்.
“புதிய முயற்சி என்பதால் அனைத்தும் சரியாக செயல்படவேண்டும் என்கிற பொறுப்புணர்வு எங்களுக்கு அதிகம் இருந்தது,” என்கின்றனர்.
இந்தத் தளம் கீழ்கண்ட வகைகளில் வருவாய் ஈட்டுகிறது:
- ஒவ்வொரு லீட் அனுப்பும்போதும் கட்டணம் வசூலிக்கப்படும்.
- விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்ய விரும்பும் லீட்களுக்கு சப்ஸ்கிரைப் செய்துகொள்வார்கள்.
- லீட்களுக்கான கமிஷன் தொகை கிடைக்கும்.
- தளத்தில் உள்ள விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டப்படும்.
- பிராண்டை சிறப்பாக வெளிப்படுத்தி வருவாய் ஈட்டப்படும்.
தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிலையில் அடுத்த 18 மாதங்களில் 6 மாநிலங்களில் செயல்பட வருங்கால திட்டங்கள் இருப்பதாக நிறுவனர்கள் தெரிவித்தனர்.
ஆப் டவுன்லோட் செய்ய: Jinglebid