ஹோம் மேக்கர் டு கேமர் - 44 வயதில் பிஜிஎம்ஐ விளையாடி வருமானம் ஈட்டும் பெண் கேமிங் யூடியூப்பர்!
கொரோனா லாக்டவுன் காலம் மில்லியன் கணக்கான மக்களுக்கு துயரத்தை தந்தது. அதவேளை சிலருக்கு அது மகத்தான வாய்ப்பாக மாறியது. அவர்களில் ரீது ஸ்லாத்தியாவும் ஒருவர். ஜம்மூவைச் சேர்ந்த இல்லத்தரசி, தொற்றுகாலத்தின் போது தொழில்முறை விளையாட்டாளராக மாறி, இப்போது ரூ.1 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார்.
ஒரு இல்லத்தரசி அதிகாலையே எழுந்து குடும்பத்திலுள்ளவர்களின் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து, 24 மணி நேரமும் வீட்டு பணி செய்வதே வாழ்க்கையாக கொண்டிருக்க வேண்டும் என்று இச்சமூகம் கட்டமைத்துள்ளது. இந்த கட்டமைப்புகளை உடைத்து வெளிவரும் பெண்களை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். ஏனெனில், அப்போது தான் அவரின் தடம்பற்றி நடக்க மற்றொரு பெண் எழுவார். ரீது ஸ்லாத்தியா அப்படியொருவர் தான்.
40-களில் ஒரு பெண் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் கட்டமைப்பை உடைத்து, ஆன்லைன் கேம் விளையாடி அதில் வருமானமும் ஈட்டும் தொழில்முறை கேமராக, ஆன்லைன் உலகில் 'ப்ளாக்பேர்டு' எனும் பெயரில் சுதந்திரமாய் பறந்து கொண்டிருக்கிறார் ரீது ஸ்லாத்தியா.
ஜம்மூவைச் சேர்ந்த ரீது ஸ்லாத்தியா, அவருடைய 44 வயதில் ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் தளமான ரூட்டரில் 3.5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டு ஆண்டிற்கு ரூ.1.2 லட்சம் வரை வருமானம் ஈட்டிவருகிறார்.
சமீபத்திய ஆண்டுகளில் ஆன்லைன் கேமிங் இந்தியாவில் பிரபலமான தொழிலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக கோவிட் தொற்றுகாலத்தின் போது, நாட்டில் வேகமாக வளர்ந்த கேமிங் துறையால் ஏராளமான தொழில்முறை விளையாட்டாளர்கள் உருவாகினர். கூகுள் நிறுவனத்துடன் இணைந்து லுமிகாய் நடத்திய 'ஸ்டேட் ஆஃப் இந்தியா கேமிங்' ஆய்வின் அறிக்கையில், இந்தியாவில் கேமர்களில் 41% பேர் பெண்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இல்லத்தரசி முதல் விளையாட்டாளர் வரை...
ஜம்மூவை சேர்ந்த ரீது ஸ்லாத்தியா, 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். கல்லுாரிக்கு சென்று படிக்க வேண்டும் என்று ரீது விரும்பினாலும், அவருடைய பெற்றோர்களுக்கு அதில் விருப்பமில்லை. 20 வயதிலே அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். பெற்றோர்களின் முடிவுகளை என்றும் அவர் ஆமோதித்தில்லை.
இளம் வயதிலே திருமணம், குழந்தைகள் என மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தாலும், ரீதுவிற்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. அன்பான கணவன், ஒரு மகன், வீட்டுப் பணிகள் என ரொட்டீன் வாழ்க்கைக்குள் வாழ அவரை பழக்கப்படுத்தி வைத்திருந்தார். சுயமாக சம்பாதித்து, மனதிற்கு விருப்பமான பணிகளை செய்து நிதி சுதரந்தித்துடன் வாழ வேண்டும் என்றெல்லாம் ரீது ஒருநாளும் சிந்தித்தில்லை. ஆனால், காலங்கள் ஓட மனநிலை ஒரே மாதிரியே இருக்காது அல்லவா.
அவரது மகன் வளர்ந்து மொபைல் கேம்களை விளையாடத் தொடங்கியபோது, ரீதுவின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. கேரம், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளுக்கு மகனின் கேம் பாட்னர் ரீது தான். அவரது மகன் கெளரவ் வளர, வளர அவனுக்கு நல்ல தாயாக மட்டுமின்றி, நல்ல கேமிங் பார்ட்னராகவும் இருந்து வந்தார்.
"எனக்கு ஒரே மகன், சிறு வயதிலிருந்தே, தாய்-மகன் என்ற பந்தத்தை தாண்டி நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வருகிறோம். சொல்லபோனால் நாங்கள் இருவரும் கேமிங் பாட்னர். கேரம் மற்றும் பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகள் தொடங்கி, கேண்டி க்ரஷ் மற்றும் ஆன்லைன் லுடோ போன்ற டிஜிட்டல் கேம்கள் வரை இருவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடி மகிழ்வோம்," எனும் ரீதுவின் விளையாட்டு மீதான ஆர்வம் அவரின் மகனிடமிருந்து தான் வந்துள்ளது.
வீட்டிற்கு வெளியே சென்று இருவரும் விளையாடிய நிலையில், கொரோனா தொற்றுக்காலம் இருவரையும் வீட்டுக்குள் முடக்கியது. நான்கு சுவருக்குள் மாட்டிக் கொண்ட மக்கள் லுாடோ போன்ற டிஜிட்டல் கேம்களின் வழி வெறுமையை நீக்கினர். சாரசரி மனிதர்களே இந்நிலை தான் இருந்தனர். இதில் விளையாட்டு பாட்னர்களான ரீது மற்றும் அவரது மகனும் டிஜிட்டல் கேம்கள் பலவற்றை விளையாடத் தொடங்கினர்.
தொற்றுகாலத்தின் போது, அவருடைய மகன் முதன்முறையாக பப்ஜியின் மொபலை் பதிப்பான பிஜிஎம்ஐ இணயைதள விளையாட்டை விளையாடுவதைப் பார்த்துள்ளார். ரீதுவுற்கும் அவ்விளையாட்டை விளையாட வேண்டும் என்று ஆசை பிறந்தது. ஒரு சில முறை விளையாடிய நிலையில் விளையாட்டின்மீது ஆர்வம் பெருக்கெடுத்து, கேம் விளையாடுவதற்காகவே தனி போனை வாங்கியுள்ளார்.
இதற்கிடையில் தான், கேம் விளையாடுவதை ஆன்லைனில் நேரலையில் ஒளிப்பரப்பும் கேமிங் லைவ் ஸ்ட்ரீமிங் உலகத்தை கண்டுபிடித்தார்.
"கேம் விளையாடுவதை நேரலையில் என் மகன் ஸ்டீரிமிங் செய்யும் போது மக்களுடன் பேசுவதை பார்த்தேன். அதை பார்த்திலிருந்து எனக்கும் என் விளையாட்டை லைவ் ஸ்டீரிமிங் செய்ய வேண்டும் என்று தோன்றியது. லைவ் ஸ்டீரிமிங் செய்யும் முன் மற்றவர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று பார்த்தேன். என் வயதிலிருக்கும் யாரும் கேம் விளையாடி லைவ் ஸ்டீரிமிங் செய்யவில்லை. அதனால், நான் லைவ் ஸ்டீரிம் செய்தால் என் கேமை யார் பார்ப்பார்கள் என்று சந்தேகம் வந்தது.”
ஆனால், என் மகன் அளித்த ஆதரவினாலும், ஊக்கத்தினாலும், லைவ் ஸ்டீரிம் செய்தேன். முதல் லைவ் ஸ்டீரிமில் பார்வையாளர்கள் கனெக்ட்டாகி சில நிமிடங்களிலே வெளியேறிவிடுவார்கள். தொடக்கத்தில் அது கஷ்டமாக இருந்தது," என்று நினைவு கூர்ந்து பகிர்ந்தார்.
வருமானம் ஒரு புறம்... வசைச்சொற்கள் மறுப்புறம்...
தொடக்கத்தில் ரீதுவின் லைவ் ஸ்டீரிமிங்கில் பங்கெடுத்துக் கொள்ள யாரும் விரும்பவில்லை. காலப்போக்கில், அவர் தனது சக விளையாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நிறைய பாராட்டுகளைப் பெறத் தொடங்கினார். இன்றோ அவர் லைவ்ஸ்ட்ரீமைத் தொடங்குவதற்கு தாமதமாக வந்தாலும், மக்கள் அவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்குகிறார்கள்.
ரீதுவை ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் தளமான ரூட்டரில் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். பிஜிஎம்ஐ தவிர்த்து, க்ளாஷ் ஆஃப் கேங்ஸ், ஃப்ரீ ஃபையர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளையும் விளையாடுகிறார். ரூட்டரில் கேமை லைவ் ஸ்டீரிமிங் செய்வதுடன், கேமிங் யூடியூப் சேனலில் கேம் விளையாடும் வீடியோக்களை பதிவிடுகிறார். யூடியூப்பில் 3.9 லட்ச பாலோயர்களை கொண்டுள்ளார். மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விளையாட்டுகளை விளையாடுவதுடன், கேமிங் பிளாட்ஃபார்ம் மூலம் மாதம் ரூ.15,000 முதல் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
"கேம் விளையாடுவதால் சம்பாதிக்கவும் முடிகிறது. முதன் முதலில் வருமானம் ஈட்டிய போது, அளவற்ற சந்தோஷத்தை அடைந்தேன். அன்றைய நாள் என் குடும்பத்தை ஒரு நல்ல டின்னர் சாப்பிட அழைத்துச் சென்றேன். அது ஒரு அற்புதமான உணர்வு,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கேம் விளையாடி வருமானம் ஈட்டி மகிழ்ந்தாலும், 44 வயதான பெண் விளையாட்டாளராக அவருடைய இந்த பயணம் எளிதானது அல்ல.
ஏனெனில், அவர் ஒவ்வொரு முறை லைவ் ஸ்டீரிமிங் செய்யும் போதும், மக்களிடமிருந்து, 'உங்கள் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டீர்களா? இது விளையாட்டு விளையாடும் வயது அல்ல' போன்ற கமெண்ட்களை பெறுகிறார். தொடக்கத்தில், இக்கேள்விகள் ரீதுவை சங்கடத்திற்கு ஆளாக்கினாலும், அதை கண்டுக் கொள்ளாமல் கடந்து செல்ல கற்றுக் கொண்டுள்ளார்.
"ஒருவர் அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் செயலை செய்கிறார்கள் என்றால், மற்றவர்கள் அதை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? இதில் சவால்கள் இருந்தபோதிலும், குடும்பத்தினர் அளிக்கும் ஆதரவு என்னை ஊக்கப்படுத்துகிறது. குடும்பத்தினரது ஆதரவு இருந்தாலே போதும், பெண்கள் அவர்களது கனவினை அடைந்துவிட முடியும்," என்று கூறிமுடித்தார் ரீது.
ஆன்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஜெயஸ்ரீ
'இழந்தது காலை மட்டுமே, நம்பிக்கையை அல்ல' - கனவுகளை அடைய ‘கறிதோசை’ கடை நடத்தும் வீணா!