'இழந்தது காலை மட்டுமே, நம்பிக்கையை அல்ல' - கனவுகளை அடைய ‘கறிதோசை’ கடை நடத்தும் வீணா!
17வயதில் ஏற்பட்ட விபத்தால் வீணா காலை இழந்தாலும், தன்னம்பிக்கை இழக்காமல் எம்பிஏ பட்டம் பெற்று பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்ததுடன், இன்று மகிழ்ச்சியான, வெற்றிகரமான தொழில்முனைவராக கறிதோசை எனும் தெருவோர உணவுக்கடையை நிறுவியுள்ளார்.
2013ம் ஆண்டின் ஒரு நாள், வீணா அம்பரீஷ் உடல் ஊனத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தார். அன்றைய நாள் அவரது வாழ்வின் திருப்புமுனை. ஏனெனில், அதற்கு முன்தினம் வரை வீட்டிலே முடங்கி, மனச்சோர்வின் உச்சியில் நாட்களை கடத்தி கொண்டிருந்தார். இவற்றிற்கெல்லாம் காரணம், அவரது வாழ்க்கையைப் புரட்டி போட்ட பேருந்து விபத்து. கோரமான விபத்தால் அவரது வலது காலை இழந்த நிலையில் 6 மாதக்காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பரத நாட்டியக் கலைஞராக அத்துறையில் சாதிக்கும் இலக்கினை நிர்ணயித்து பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு நேர்ந்த அவ்விபத்து அவரை முடக்கி தற்கொலை மனநிலைக்கு தள்ளியது. திருப்புமுனையான அந்தநாளின் நேர்முறையான விளைவால் இன்று நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் வாடிக்கையாளர்களை கொண்ட "கறிதோசை" எனும் தெருவோரக் கடையின் உரிமையாளராக்கியுள்ளது.
வாழ்கையை புரட்டிப்போட்ட பேருந்து விபத்து...
பெங்களூரைச் சேர்ந்த வீணா 2012ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு துரதிர்ஷ்டவசமான நாளில், பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
சாலையைக் கடக்கும் போது, மாநகர அரசுப் பேருந்து சிக்னலைத் தாண்டி அவரது வலது காலின் மேல் ஏறியது. அவரது வலது கால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 6 மாதங்கள் சிகிச்சை எடுத்துவந்தார். அவரது பாதத்தை மீட்டெடுக்க மருத்துவர்கள் பல வழிகளில் முயற்சித்தனர். மூன்று அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டனர். ஆனால், அனைத்தும் தோல்வியடைந்தன.
இறுதியாக, அவருக்கு ஒரு தோல் ஒட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இனி மீதியுள்ள காலம் அவர் அந்தகாலிலே வாழவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய போது வீணாவின் உலகம் இருண்டது. ஏனெனில், பரதநாட்டியத்தை முழுமூச்சாய் கற்று, மறுஆண்டு அரங்கேற்றம் செய்வதற்காக காத்திருந்தார்.
ஆட்டம் ஆடிய கால்களால் இனி நடனமாட முடியாது என்ற கவலை அவரை தற்கொலைக்கு முயற்சிக்கும் வரை கொண்டு சென்றது. மருத்துவமனையை விட்டு வீட்டுக்கு வந்தபின் வீணா 2 ஆண்டுகள் வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்துள்ளார்.
"பஸ் முதலில் என்மீது உரசியது. நான் இடறி கீழே விழுந்தேன். அதன் பிறகு, பேருந்தின் ஒரு டயர் என் வலது காலில் ஏறியது. அதிர்ஷ்டவசமாக, அன்று ஹீல்ஸ் அணிந்திருந்ததால் டயரின் அழுத்தம் செருப்பிற்கு சென்றது. அவ்வளவு தான் நினைவில் உள்ளது. அதன் பிறகு என்ன நடந்தது என்று கூட எனக்கு தெரியாது. வளரும் பருவத்தில் இருந்ததால், இடது தொடையிலிருந்து சதையை எடுத்து பாதத்தை மீண்டும் கட்டமைக்க மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால், மூன்று முறை முயற்சித்தும் பலனில்லை. அவர்கள் இறுதியாக தோலை மட்டும் ஒட்டவைத்தனர். அப்பகுதி மென்மையானது என்பதால், எப்போதும் வீட்டைவிட்டு வெளியே செல்லும் முன் பேன்டேஜ் கொண்டு அதை கட்ட வேண்டும்," என்று வீணா கூறுகிறார்.
வெறுமை சூழ் வாழ்க்கையில் அவரை சுற்றியிருந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் உற்று நோக்க தொடங்கினார். அவற்றையெல்லாம் பார்த்தபின் அவருக்கு வாழ்க்கையின்மீது சிறு பிடிமானம் கிடைத்தது. வாழ்க்கையை புன்னகையுடன் கடந்து செல்லும் முடிவை அவர் எடுக்க வைத்தார் உடல் ஊனமுற்ற ஒரு அம்மா. ஆம், கையில் குழந்தையுடன் அவரது நிலையை மறந்து வாழக் கற்றுக் கொண்டிருந்த அத்தாயின் வாழ்க்கையை கண்டு வீணாவுக்கு நம்பிக்கை கிடைத்தது.
வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய இருகால்களுமற்ற தாய்
"உடல் ஊனமுற்ற சான்றிதழைப் பெறுவதற்காக விக்டோரியா மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கு இரு கால்களும் இல்லாத ஒரு பெண் வெகு துாரம் குழந்தையுடன் தனியாக பயணித்து வந்திருந்தார். அவர் குழந்தைக்கு சோறு ஊட்டி, விளையாடிக் கொண்டு சந்தோஷமாக இருந்தார். அவருக்கு இரு கால்களும் இல்லை எனும் வருத்தமே இல்லை. அதை பார்த்த எனக்கு பிரம்மிப்பாக இருந்தது.
”அவருக்கு முன் என்னுடைய பிரச்னை ஒன்றுமேயில்லை என்று தோன்றியது. கைக்குழந்தையுடன் வீட்டு வேலைகள் உட்பட அவருக்கு வேண்டுவதை அவரே செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகையில், என்னால் ஏன் முடியாது? நான் விரும்பும் அனைத்தையும் செய்வதற்கு உடல் ஊனம் என்றும் தடையாக இருக்காது என்ற உறுதி அந்த சம்பவத்திற்கு பின் தான் வந்தது," என்றார் வீணா.
அன்று எடுத்த தீர்க்கமான முடிவால், 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்துக் கொண்டிருந்த வீணா, அறிவியல் நடைமுறை வகுப்புகளுக்கு நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதால் வணிகப் பாடத்திற்கு மாறினார். தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் பெற்றார். பெங்களூரு போன்ற நகரங்களில் கல்லூரிக்குச் செல்வது கடினமாக இருக்கும் என்பதால், புதுச்சேரியில் உள்ள அவரது பாட்டியின் வீட்டிற்குச் சென்று அங்கு பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.
இளங்கலை வணிக நிர்வாகப் பட்டமும், முதுகலை வணிக நிர்வாக பட்டமும் பெற்றார். படித்து முடித்து வங்கிகளில் பணிபுரிய துவங்கியவர், பின் ஒரு மென்பொருள் சோதனையாளராக ஐடி துறைக்கு மாறினார். ஆனால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக 3 முறை முதுகு தண்டுவடத்தில் மயக்க மருந்து செலுத்தியதால், தீரா முதுகு வலியை அளித்து நீண்ட நேரம் உட்கார்ந்து பணிப்புரிய சிரமத்தை அளித்தது.
எட்டு மணிநேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து பணிச் செய்வதுடன் 6 வயது மகன் மற்றும் 4 வயது மகளை கவனித்து கொள்வது கடினமாக இருந்துள்ளது. 9 முதல் 6 வரை அலுவலக வேலைகள் மற்றும் இரவு 9:30 மணிக்கு தொடங்கும் மீட்டிங் போன்கால்கள் அதிகாலை 1 முதல் 2 மணிவரை நீடித்துள்ளது. வேலை அளித்த மனஅழுத்தம், உடல் சோர்வு, மாதம் ஒரு முறையேனும் மருத்துவமனைக்கு செல்ல வைத்தது.
அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள எண்ணிய அவர் பணியைத் துறந்து சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவெடுத்தார். நீண்டநாட்களாக உணவுத்துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தையே வணிகமாக மாற்றினார். 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெங்களூருவில் ஒரு தோசைக் கடையை தொடங்கி, மதுரையின் அடையாளங்களில் ஒன்றான 'கறி தோசை'-யை கடையின் பெயராக்கினார்.
வெறும் 10 ரூபாய்க்கு சாதாரண தோசையில் தொடங்கி மட்டன் கறி தோசை, சிக்கன் கறி தோசை, இறால் கறி தோசை மற்றும் பலவிதமான தோசை வகைகளை பெங்களூர் மக்களுக்கு விருந்தளிக்க தொடங்கினார். அவரது தோசை வகைகளை ருசிக்க மக்கள் பொறுமையாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையினை அடைந்தது கறித்தோசை கடை.
குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் சுறுசுறுப்பான வேலையில் இருந்த வீணா, இப்போது பெங்களூரு தெருக்களில், பெரும் போட்டி நிறைந்த தெருவோர உணவு சந்தையில் போட்டிக் கொண்டிருக்கிறார்.
"எல்லாமே வலி தான்...!"
"சொந்த பிராண்டை உருவாக்கி ஏதாவது சாதிக்க விரும்பினேன். தினமும் எட்டு மணி நேரம் டெஸ்க் வேலையைச் செய்ய முடிந்தபோது, ஏன் நான்கு மணி நேரம் நிற்க முடியாது? தினமும் அதிகாலை 4:30 மணிக்கு என்னுடைய நாள் தொடங்கும். சிக்கன் கீமா, இறால் தொக்கு மற்றும் மட்டன் கீமாவில் செய்யப்பட்ட கறி தோசைகளை விற்கிறேன்.
”ஒரு சாதாரண தோசையின் விலை ரூ.10, மட்டன் கறித்தோசை ரூ.150. ஸ்டால் காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரை திறந்திருக்கும். ஷாப்பிங், சமைத்தல், பரிமாறுதல் என அனைத்தையும் நானே கவனித்து கொள்வேன். தினமும் கடையை திறந்து வைக்க மட்டும் என் கணவர் உதவி செய்வார்,” என்றார் தொழில் முனைவரான வீணா.
எனினும், இன்றும் நாளொன்றுக்கு 4 மணி நேரத்திற்கு மேலாக நிற்பதால் பல சவால்களை எதிர்கொள்கிறார். ஆனால், செய்யும் தொழிலால் மனம் மகிழ்வுறுவதால், வலிகள் மறக்கிறார்.
"வலிதான் எல்லாமே. வலியைப் பொறுத்துக் கொண்டு அதைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். உங்களைவிட மோசமான சூழ்நிலையில் வாழும் நபர்களைப் பார்த்து, உங்களுக்குக் கிடைத்த வாழ்க்கைக்காக நன்றி சொல்லுங்கள். அப்படித்தான் நான் வாழ்கிறேன்.”
போராட்டம் நடத்தாமல் நாம் எதையும் சாதிக்க முடியாது. வாழ்க்கை என்பது தடைகளைத் தாண்டுவதுதான். வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், முன்பை விட வலிமையாக இருங்கள், என்ற வீணா இதையே வாழ்வின் மந்திரமாக கொண்டுள்ளதாக கூறினார்.
தகவல் மற்றும் பட உதவி: The better India
இரு கைகள் இல்லை; தன்னம்பிக்‘கை’ ஆக இருந்த பாட்டி - வித்யாஸ்ரீயின் இன்ஸ்பிரேஷன் கதை!