ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி?
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல விரும்பும் மக்கள் ‘இ-பாஸ்’ பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இணையவழியில் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய கோடை வாசஸ்தலமாக உள்ளது நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல். சீசன் காலங்களில் மட்டுமல்லாது ஆஃப் சீசன் காலங்களிலும் தங்களது பொழுதை இனிதாக செலவிடும் வகையில் குடும்பத்தினர், நண்பர்களுடன் மக்கள் இங்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த சூழலில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல விரும்பும் மக்கள் ‘இ-பாஸ்’ பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இணையவழியில் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள். தமிழ்நாட்டில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இப்படி கோடை காலங்களில் அவர்களின் வருகை அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம்,
ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும், அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து, ‘இ-பாஸ்’ பெற்று, அதன் அடிப்படையில் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும், என்று உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, கோடை விடுமுறையை கழிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வரும் சுற்றுலாப் பயணிகள் முறையான இ-பாஸ் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும்.
மேலும், இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் ‘epass.tnega.org’ என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து மே 6, 2024 முதல் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும்.
மேலும், இந்த நடைமுறை வாகனங்களை முறைப்படுத்தி சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து செல்ல வழிவகுக்கும். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த நடைமுறையினை வரும் ஜூன் 30, 2024 வரை பின்பற்றுவார்கள். இ-பாஸ் வழங்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும், அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
இந்த இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. பொதுமக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வந்து செல்ல எந்த தடையும் இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி?
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள epass.tnega.org இணையதளத்தின் மூலம் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? என்பதை படிப்படியாக பார்ப்போம்.
இந்த தளத்தில் உள் நுழைந்ததும் ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’, இந்தியாவுக்கு வெளியில் இருந்து அல்லது இந்தியாவுக்கு உள்ளே என இரண்டு ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. அதில் பயனர்கள் தங்களுக்கானதை தேர்வு செய்ய வேண்டும்.
இந்தியாவுக்கு உள்ளே என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் அதில் பயனர்கள் தங்களது மொபைல் போன் எண்ணை உள்ளிட வேண்டும். தொடர்ந்து அதன் கீழ் உள்ள Captcha-வை உள்ளிட வேண்டும். அதன் பிறகு பயனர்களின் மொபைல் போன் எண்ணுக்கு ‘ஓடிபி’ (ஒண் டைம் பாஸ்வேர்டு) வருகிறது. அதனை உள்ளிட வேண்டும். இது 15 நிமிடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் (Validity). அந்த ஓடிபி எண்ணை கொடுத்து ‘லாக்-இன்’ செய்ய வேண்டும்.
அதில் நீங்கள் செல்ல விரும்பும் இடம் குறித்து கேட்கப்படுகிறது. நீலகிரி, கொடைக்கானல், உள்ளூர் பாஸ் மற்றும் முந்தைய பாஸ்கள் போன்ற விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக நீலகிரி என்பதை தேர்வு செய்தால் ‘TN ePass Application’ என்ற படிவம் வருகிறது.
அதில் விண்ணப்பதாரர் பெயர், வருகையின் காரணம், வாகன பதிவு எண், மொத்த பயணிகளின் எண்ணிக்கை, வாகன உற்பத்தி வருடம், வாகன வகை (பேருந்து, கார், மினி பஸ், வேன், இருசக்கர வாகனம் அல்லது இதர வாகனம் போன்ற ஆப்ஷன்கள் இதில் உள்ளன), எரிபொருள் வகை (பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, ஹைபிரிட் போன்ற விவரம்), உள் நுழையும் நாள், வெளியேறும் நாள், மாநிலம், மாவட்டம், முகவரி, தங்கும் இடம் தெரியும் அல்லது தெரியாது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு சமர்பிக்க (சப்மிட்) கொடுக்க வேண்டும்.
அதை செய்ததும் பிளாஸ்டிக் தடை, குப்பை வீசுவது, சாலையோரம் உணவு சமைப்பது அல்லது உணவு உண்ணவோ கூடாது, வேகம் தவிர்க்கவும், வாகனங்கள் சோதனை சாவடிகளில் நிறுத்துவது அவசியம், வன உயிர்களுக்கு உணவு அளிக்க கூடாது என சில விதிமுறைகள் தெரிவிக்கப்படுகிறது. அதனை உறுதி செய்ததும் இ-பாஸ் ஜெனரேட் ஆகிறது. அதனை டவுன்லோட் செய்து கொண்டு பயன்படுத்தலாம். குறிப்பாக பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில், சாஃப்ட் டிரிங் பாட்டில் எடுத்து வரக் கூடாது. மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸில் சம்பந்தப்பட்ட பயனர் எங்கிருந்து வருகிறார், எங்கு செல்கிறார், பயணிக்கும் வாகன எண், பாஸ் வேலிடிட்டி, பாஸ் என, பெயர், மொபைல் போன் என, வாகன வகை, எரிபொருள் வகை, மொத்த பயணிகள் விவரம், பயணத்துக்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. உள்ளூர் மக்கள் உள்ளூர் பாஸ் பெற தங்களது வாகன எண்ணை தெரிவித்து பாஸ் பெறலாம். இதனை சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சியர் வழங்கி உள்ளதாக இ-பாஸில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுத்து இதே நடைமுறையை பின்பற்றி இ-பாஸ் பெறலாம். இந்த பாஸ் மூன்று வண்ணங்களில் வழங்கப்படுவதாக தகவல். சுற்றுலா நிமித்தமாக செல்லும் பயணிகளுக்கு ஊதா நிற டேக் கொண்ட பாஸ் வழங்கப்படுகிறது.
Edited by Induja Raghunathan