Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

லட்சத்தீவைப் பற்றி அதிகம் தேடும் மக்கள் - தீவுக்கு செல்வது எப்படி, செலவு என்ன?

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி கேரளா சென்றிருந்தார். அப்போது லட்சத்தீவுக்கும் அவர் சென்றிருந்தார். இந்திய தேசத்தின் யூனியன் பிரதேசமாக இந்த பகுதி உள்ளது. லட்சத்தீவின் அழகை ரசித்த பிரதமர் மோடி, அது சார்ந்த படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அது பரவலாக பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்று பேசு பொருளானது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்தது. 

அடுத்த சில மணி நேரங்களில் மாலத்தீவை சேர்ந்த மூன்று இணை அமைச்சர்கள் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்தனர். அதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அதோடு இந்திய நெட்டிசன்கள் ‘மாலத்தீவை புறக்கணிப்போம்’ என சொல்லி #BoycottMaldives என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். சில பிரபலங்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். 

Modi in lakshadweep

மாலத்தீவு பிரச்சனை என்ன?

மாலத்தீவின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு சுற்றுலாவை சார்ந்து உள்ளது. அதிலும் இந்தியர்கள் அதிகம் விரும்பி செல்லும் 'ட்ரீம் டூர்' டெஸ்டினேஷனாக மாலத்தீவு இருந்தது. கொரோனா பரவலுக்கு பிறகு இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் மாலத்தீவு சென்று வருவதையும், அந்த பயணத்தின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதையும் வழக்கமாக வைத்திருந்தனர். ரஜினிகாந்த், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, நஸ்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் அங்கு சென்றுள்ளனர். 

இத்தகைய சூழலில் ‘மாலத்தீவை புறக்கணிப்போம்’ என்ற முழக்கம் வலுத்த காரணத்தால் முன்கூட்டியே அங்கு செல்ல திட்டமிட்டிருந்த இந்தியர்கள் தங்களது விமான டிக்கெட் மற்றும் விடுதி முன்பதிவை ரத்து செய்தனர். இதன் எண்ணிக்கை மட்டும் ஆயிரக்கணக்கில் நீண்டு மாலத்தீவை ஆட்டம் காண செய்தது. மாலத்தீவின் அதிகாரப்பூர்வ வலைதளம் ஹேக் செய்யப்பட்டது. நட்பு ரீதியாக கடந்த காலங்களில் மாலத்தீவுக்கு இந்தியா உதவி செய்துள்ளதும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 

மாலத்தீவு அமைச்சர்களின் அவதூறு செயலுக்கு இந்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசியல் அழுத்தம் காரணமாக அந்த மூன்று அமைச்சர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதே நேரத்தில், மாலத்தீவின் அதிபர் மொகமது முய்ஸு, சீனர்கள் அதிகம் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா நிமித்தமாக வரவேண்டும் எனத் தெரிவித்தார். 

மாலத்தீவு ஆட்சியாளர்களின் இந்த செயலுக்குக் காரணம் பிரதமரின் லட்சத்தீவு பயணம் தான். குறிப்பாக அவர் பகிர்ந்த படங்கள் அந்த தீவின் அழகை அப்படியே பிரதிபலித்து இருந்தது. அங்கு நீச்சல் சாகசம் மேற்கொண்ட படத்தையும் பிரதமர் பகிர்ந்திருந்தது தான் ஹைலைட்.

இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அந்த தீவு குறித்து சிலாகித்து பேசினர். அது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வெறுப்பை வெளிப்படுத்தி இருந்தனர் மாலத்தீவு ஆட்சியாளர்கள். இதன் பின்னணியில் தங்கள் நாட்டின் சுற்றுலாத் துறை சார்ந்த தொழில் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற அச்சமும் ஒரு காரணமாக சொல்லலாம்.

கூகுள் போன்ற தேடுபொறிகளில் உலக அளவில் லட்சத்தீவு குறித்து அதிகம் Search செய்யப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. 

Lk hotel

லட்சத்தீவுகள் பின்னணி?

இந்திய நாட்டின் யூனியன் பிரதேசங்களில் மிகவும் சிறியது என அறியப்படுகிறது லட்சத்தீவு. 33 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த தீவு அமைந்துள்ளது. 90,000 மக்கள் வசித்து வருவதாக தகவல். 36 தீவுகளை உள்ளடக்கிய பகுதி. இதில் சில தீவுகளில் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டியது அவசியம். நுழைவு சீட்டு கட்டாயம் பெற வேண்டும். https://epermit.utl.gov.in/ என்ற தளத்தில் மின்னணு முறையில் மட்டுமே தற்போது நுழைவு சீட்டு விண்ணப்பித்து பெற முடியும். இங்கு பயணம் செய்ய விரும்புபவர்கள் இந்த தளத்தில் பயனர் கணக்கு தொடங்கி விண்ணப்பிக்கலாம். மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், பெயர் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து கணக்கை தொடங்கலாம்.

தொடர்ந்து லட்சத்தீவுகளில் எந்த பகுதிக்கு செல்ல வேண்டும், பயண விவரம் மற்றும் அதில் கேட்கப்படும் இன்னும் பிற விவரங்களை அப்லோட் செய்து நுழைவு சீட்டை பெறலாம். நுழைவு சீட்டு மின்னஞ்சலில் பயனர்களுக்கு கிடைக்கும். இதற்கு கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. லட்சத்தீவு சென்றதும் அங்கு இருக்கும் அதிகாரியிடம் அந்த நுழைவு சீட்டை சமர்பிக்க வேண்டும். 

Runway

விமானம் மற்றும் கப்பல் பயணம்

லட்சத்தீவு பகுதிக்கு நீர் மற்றும் வான் வழியாக மட்டுமே செல்ல முடியும். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மட்டும் தான் விமானம் மற்றும் கப்பல் சேவை கிடைக்கப்பெறுகிறது. லட்சத்தீவில் உள்ள ’அகத்தி டூ கொச்சி’க்கு விமானம் இயக்கப்படுகிறது. நாள் ஒன்று ஒருமுறை என ரவுண்ட் ட்ரிப் அடிக்கிறது அந்த விமானம். 70 பயணிகள் இதில் பயணிக்கலாம். பயணிகள் பெரிய அளவிலான பைகளை இதில் கொண்டு செல்வது கடினம். வரும் மார்ச் மாதம் வரையில் லட்சத்தீவுக்கான விமான பயண டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது. அதனால் அதற்கு பிறகான நாட்களில் வான் வழியாக செல்ல விரும்புபவர்கள் தங்கள் பயணத்தை முடிவு செய்யலாம். இதற்கான கட்டணம் சுமார் 5,000 ரூபாய் என தகவல். 

கொச்சியில் இருந்து 7 கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான பயண நேரம் சுமார் 14 முதல் 18 மணி நேரமாக உள்ளது. அதனால் பயணிகள் இரவு நேர பயணத்துக்கு திட்டமிடலாம். ஏசி உட்பட பல்வேறு பிரிவுகளில் டிக்கெட்களை இதில் பெறலாம். கப்பல் பயணத்துக்கான கட்டணம் 2,500 ரூபாயில் இருந்து தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தங்கும் விடுதிக்கான கட்டணம் மற்றும் உணவு செலவு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மினிகாய், கல்பேனி, கட்மட், பங்காரம், தின்னகரா போன்ற தீவுகள் இங்கு பிரசித்தி பெற்ற பகுதியாக உள்ளன. இந்த தீவு பகுதியில் அமைந்துள்ள விமான நிலையத்தை விரிவு செய்யும் திட்டங்கள் அரசு வசம் உள்ளது. அதன் பிறகு இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக லட்சத்தீவுக்கு செல்லலாம். 

Dream

அனைத்து திசையும் நீரால் சூழப்பட்ட இந்த தீவு பகுதியில் இயற்கை உடன் இணைந்து இனிதான நேரத்தை செலவிடலாம். வரும் நாட்களில் இந்தியாவில் உள்ள மிக முக்கிய சுற்றுலா மையமாக இந்த நெய்தல் நிலம் மாறும்.   


Edited by Induja Raghunathan