இந்தியர்களுக்கு விசா இலவசம்- இருகரம் கூப்பி வரவேற்கும் இலங்கை, தாய்லாந்து!
இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்காக தாய்லாந்து அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்காக தாய்லாந்து அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்து நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அந்த இரு நாடுகளை சேர்ந்தவர்களும் விசா கட்டணம் இல்லாமல் தாய்லாந்துக்கு வரலாம் என தெரியவந்துள்ளது. இந்த வசதி அடுத்த ஆண்டு மே மாதம் வரை (மே, 2024), அதாவது, ஆறு மாதங்களுக்கு இருக்கும்.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாட்டிற்கு வரவழைக்க தாய்லாந்து பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. சீன குடிமக்கள் தாய்லாந்து செல்வதற்கு விசா தேவையில்லை என ஏற்கனவே அறிவித்த தாய்லாந்து அரசு, சமீபத்தில் இந்தியர்களுக்கும் அதே வசதிகளை வழங்கியுள்ளது.
30 நாட்கள் வரை விசா தேவையில்லை:
இந்திய சுற்றுலாப் பயணிகள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தாய்லாந்தை சுற்றிப்பார்க்கலாம் என அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் தைவானில் இருந்து அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவிற்கும் சிறப்பு சலுகை:
சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து கடந்த மாதம் அறிவித்திருந்தது. சமீபத்தில் இந்தியாவும், தைவானும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
காரணம் என்ன?
தாய்லாந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நான்காவது இடத்தில் உள்ளனர். மலேசியா, சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு இதுவரை 12 லட்சம் சுற்றுலா பயணிகள் தாய்லாந்துக்கு வந்துள்ளனர். எனவே, தான் இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்லும் பயணிகளுக்கு பல்வேறு விமான நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்த ஆண்டு தாய்லாந்துக்கு 12 லட்சம் இந்தியர்கள் சென்றுள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு 1.4 கோடியாக இருந்த வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டு வரை 2.7 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு மொத்தம் 2.2 கோடி சுற்றுலா பயணிகள் தாய்லாந்து சென்றுள்ளனர். இதன் மூலமாக தாய்லாந்திற்கு 927.5 பில்லியன் பாட் ($25.67 பில்லியன்) வருவாய் ஈட்டியுள்ளது. மொத்தத்தில், இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் 2.8 கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க தாய்லாந்து இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், இருநாட்டு நல்லுறவு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் தாய்லாந்து - இந்தியா இடையே சாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவில் இருந்து மியான்மர் வழியாக தாய்லாந்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து அமைச்சர்கள் ஏப்ரல் 2002ல் ஒப்புதல் அளித்தனர். இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு தேசிய நெடுஞ்சாலை 1400 கிலோமீட்டர் நீளம் கொண்டது மற்றும் இது 2019 க்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எடுத்த அதிரடி முடிவு:
இலங்கை அரசின் பெரும் பகுதி வருமானம் சுற்றுலாவை நம்பியுள்ளது. கொரோனாவிற்கு பிறகு இலங்கை அரசின் பொருளாதார சூழ்நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது. எனவே, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நாட்டு புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது.
அதன் படி, சமீபத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு மார்ச் 31, 2024 வரை தொடரும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தினார். சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இலங்கை அரசின் இந்த முடிவால் 7 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் விசா செலவு மற்றும் நேரம் குறையும் என்பதால் அதிக அளவிலான பயணிகள் குவியக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.