ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கான வர்த்தகத் திட்டத்தை செதுக்குவது எப்படி?
ஒரு புதிய தொழிலைத் தொடங்க அடித்தளமாக உள்ள வணிகத் திட்டத்தை உருவாக்க வழிகாட்டுகிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.
ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது ஓர் உற்சாகமான சாகசமாக இருக்கலாம். ஆனால், இது சாதாரண விஷயமல்ல. இதில் வெற்றி பெற உறுதியான அடித்தளத்தை அமைப்பது முக்கியம். ஒரு விரிவான வணிகத் திட்டத்தை உருவாக்குவதே இதன் தொடக்கப் படிநிலை.
ஸ்டார்ட்-அப் தொழிலுக்கான வணிகத் திட்டத்தை உருவாக்குவது ஓர் உற்சாகமான, சவாலான பணியாகும். நீங்கள் தொழில் முனைவோர் ஆவதற்கு உறுதியான அடித்தளத்தை உறுதி செய்ய பல்வேறு கூறுகளை கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஸ்டார்ட்-அப் தொழிலுக்கான வர்த்தகத் திட்டத்தை பரிசீலிக்கும் முன்பு திட்டத்தைத் தயாரித்தல் என்பது ஏன் முக்கியம் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், இதுதான் உங்கள் தொழிலின் வெற்றியைத் தீர்மானிக்கின்றது.
தொழிலுக்கான உங்களது யோசனை என்பது எம்மாதிரியான சந்தையை இலக்காகக் கொண்டது, போட்டி, நிதி கணிப்புகள் மற்றும் வளர்ச்சி உத்திகள் ஆகியவற்றை கோடிட்டுக் காட்டும் ஒரு மூல வரைவாகவும் ஆவணமாகம் வணிகத் திட்டம் செயல்படுகிறது. இது வழிகாட்டுதலை வழங்குகிறது. தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.
மேலும், நிதி தேடும்போது அல்லது வணிகக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது வணிகத் திட்டம் என்பது அவசியம் தேவைப்படும் ஒன்றாகும்.
ஒட்டுமொத்த வணிகத் திட்டத்தின் முக்கியக் கூறுகளை தொகுத்து அளித்தல்
ஒட்டுமொத்த வணிகத் திட்டத்தையும் சுருக்கி வரைதல் என்பது வணிகத் திட்ட வரைதலின் கடைசி பகுதி என்றாலும், இதற்குத்தான் அதிக முக்கியத்துவம் உள்ளது. இது உங்கள் முழுத் திட்டத்தின் கண்ணோட்டத்தையும் வழங்கும் வகையில் சுருக்கமாகவும், அழுத்தமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
இந்தப் பகுதியில் உங்கள் பணித்திட்டத்தின் முக்கியக் கூறுகளை சொல்கிறது. உங்கள் பணியின் தன்மை என்ன என்பதைப் பற்றிய அறிக்கை, தனித்துவமான மதிப்பு முன்மொழிவு, குறிவைக்கும் சந்தை மற்றும் சந்தைப் போட்டியில் உங்கள் வணிகத்திற்கான சாதக அம்சங்கள் போன்ற முக்கியக் கூறுகளை எடுத்துக்காட்டுகிறது. வணிகத் திட்டம் என்னவென்பதை சுருக்கமாக தொகுத்து அளிப்பதன் மூலம், உங்கள் வணிகத்தைப் பற்றிய தெளிவான புரிதலைத் தரவேண்டும்.
உங்கள் நிறுவன அடையாளத்தை வெளியிடுதல்
நிறுவனத்தின் விளக்கப் பிரிவில், உங்கள் ஸ்டார்ட்-அப் தொழிலின் விவரங்களை விரிவாக வழங்க வேண்டும். உங்கள் வணிகத்தின் தன்மை, அதன் சட்ட அமைப்பு மற்றும் நிறுவனம் அல்லது தொழில் நடத்தப்படும் இருப்பிடம் ஆகியவற்றை விளக்கலாம்.
உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விவரிக்கவும், அவற்றின் தனித்துவம் மற்றும் நீங்கள் இலக்கு வைப்போரின் தேவைகளை அவை எவ்வாறு பூர்த்தி செய்கின்றன என்பதை வலியுறுத்தவும் வேண்டும். நீங்கள் குறிவைக்கும் சந்தைப் பிரிவு பற்றி குறிப்பிடுங்கள். உங்கள் வணிகத்தை எவ்வாறு நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளீர்கள் என்பதைப் பற்றிய தகவலைச் சேருங்கள். கூடுதலாக, முக்கிய குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது தொடர்புடைய நிபுணத்துவத்தை முன்னிலைப்படுத்துங்கள்.
ஆழமான சந்தை ஆய்வு
நீங்கள் களமிறங்கும் ஸ்டார்ட்-அப் தொழில் துறையின் நிலப்பரப்பைப் புரிந்துகொள்வதற்கும் சாத்தியமான வாய்ப்புகள் மற்றும் சவால்களைக் கண்டறிவதற்கும் முழுமையான சந்தைப் பகுப்பாய்வை மேற்கொள்வது அவசியம். நீங்கள் குறிவைக்கும் சந்தைப் பகுதியின் மக்கள்தொகை, அம்மக்களது விருப்பத் தேர்வுகள், நுகர்வோர் நடத்தை, வாங்குவதற்காக பொருட்களைத் தேர்வு செய்யும் நடத்தை உள்ளிட்டவற்றை ஆராய வேண்டும்.
இந்தப் பகுப்பாய்வு உங்கள் தொழில் தொடக்கத்தைத் திறம்பட நிலைநிறுத்தவும், உங்களை வேறுபடுத்திக் கொள்வதற்கான உத்திகளை உருவாக்கவும் உதவும். சந்தைப் போக்குகள், வளர்ச்சிக்கான சாத்தியம் மற்றும் உங்கள் வணிகத்தைப் பாதிக்கும் காரணிகள் முதலியவற்ற உற்று நோக்குங்கள்.
வெற்றி அணியை நிறுவல்
இந்தப் பிரிவில் உங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பு எப்படி இருக்கும் என்பதை விளக்குங்கள். அதன் முக்கிய உறுப்பினர்கள் பற்றி கவனம் மேற்கொள்ள வேண்டும். முக்கிய உறுப்பினர்களின் பங்கு என்ன, பொறுப்புகள் என்ன, சம்பந்தப்பட்ட தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் பற்றிய கண்ணோட்டத்தை அளிக்கவும்.
திறன்களில் ஏதேனும் இடைவெளிகள் இருந்தால், அதை எப்படி நிவர்த்தி செய்தீர்கள் என்பதை விளக்குங்கள். கூடுதலாக, உங்கள் ஆலோசனைக் குழு அல்லது வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்கக் கூடிய வழிகாட்டிகளை விவரிக்கவும். ஒரு ஸ்டார்ட்-அப்பின் வெற்றியில் நிர்வாகக் குழு முக்கியப் பங்கு வகிக்கிறது. முதலீட்டாளர்கள் இந்த அம்சத்தில்தான் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.
நீங்கள் வழங்கும் சேவைகள் பற்றி எடுத்தியம்புதல்
உங்கள் ஸ்டார்ட்அப் வழங்கும் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விவரித்து, அவற்றின் தனித்துவமான அம்சங்கள், நன்மைகளை வலியுறுத்துங்கள். உங்கள் சேவை ஒரு சிக்கலை எவ்வாறு தீர்க்கின்றன அல்லது சந்தையில் ஒரு குறிப்பிட்ட தேவையை எப்படிப் பூர்த்தி செய்கின்றன என்பதை விளக்குங்கள்.
உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளுடன் தொடர்புடைய அறிவுசார் சொத்து, காப்புரிமைகள் அல்லது வர்த்தக முத்திரைகளை முன்னிலைப்படுத்தவும். உங்களின் போட்டித்தன்மையை வெளிப்படுத்துங்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டார்ட்-அப்பை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதை விளக்கவும். விலைத் தகவலை வழங்கவும். அத்துடன், உங்கள் தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் அல்லது சேவைகள் விரிவாக்கத் திட்டங்களை கோடிட்டுக் காட்டுங்கள்.
நீங்கள் குறிவைக்கும் சந்தையுடன் தொடர்பு கொள்ளுதல்
உங்கள் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை உத்திகள், உங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை எப்படி விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிடுகிறீர்கள் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. நீங்கள் குறிவைக்கும் இலக்குப் பார்வையாளர்கள் யார் என்பதை வரையறுங்கள். அவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை தெரிந்துகொள்ள நீங்கள் குறிவைக்கும் வாடிக்கையாளர்களிலிருந்து ஒரு சிறந்த ‘மாதிரி’ வாடிக்கையாளரை மனத்திரையில் இருத்தி, அவரைப் பற்றி விரிவாக விளக்குங்கள்.
அதாவது, அந்த வாடிக்கையாளருக்கு ஒரு பிரச்சனை இருந்ததாகவும், அந்தப் பிரச்சனை தங்கள் தயாரிப்பினால் எப்படி சரியானது என்பதை அவரே விளக்குமாறு ஒரு மாதிரி வாடிக்கையாளர் பற்றிய பிம்பத்தை உருவாக்க வேண்டும்.
பயனுள்ள மார்க்கெட்டிங் சேனல்களைக் கண்டறிந்து, டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரங்கள், சமூக ஊடக ஈடுபாடு, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் பாரம்பரிய விளம்பர முறைகள் போன்ற உங்கள் விளம்பர உத்திகளை விவரிக்கவும். விற்பனை முன்னறிவிப்பைச் சேர்த்து, உங்கள் விநியோக சேனல்கள் மற்றும் வாடிக்கையாளர் கையகப்படுத்தும் உத்திகளைப் பற்றி விவாதிக்கவும்.
எண்கள் பின்னால் உள்ள கதை
உங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள், முதலீட்டு ஆதரவுகள், லாபக் கணிப்புகள் பற்றிய தகவல்கள் உங்கள் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றது. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்ட வருவாய், செலவுகள் மற்றும் பணப்புழக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான நிதித் திட்டத்தை உருவாக்குங்கள்.
யதார்த்தமான அனுமானங்களைப் பயன்படுத்துங்கள். எதிர்பாராத சவால்களுக்கான தற்செயல் திட்டங்களைச் சேர்க்கவும். முதலீட்டாளர்கள் இந்தக் கணிப்புகளை கவனமாக மதிப்பாய்வு செய்து, வளர்ச்சி சாத்தியம் மற்றும் முதலீட்டின் மீதான வருமானத்தை மதிப்பிடுகின்றனர். துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்கு தொழில்முறை ஆலோசனையைப் பெறவும் அல்லது கணக்காளரிடம் ஆலோசனை பெறவும்.
உங்கள் தொழிலுக்கான நிதியளிப்புகள்
நீங்கள் நிதியுதவி தேடுகிறீர்களானால், இந்தப் பிரிவு முக்கியமானது. உங்களுக்குத் தேவைப்படும் நிதியின் அளவைக் குறிப்பிடவும். அந்த நிதியை எவ்வாறு ஒதுக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்பதைப் பற்றிய விவரத்தை வழங்கவும். முதலீடு எவ்வாறு வளர்ச்சியைத் தூண்டுகிறது, செயல்பாடுகளை மேம்படுத்துகிறது அல்லது புதிய தயாரிப்புகளை உருவாக்குகிறது என்பதை விளக்குங்கள்.
நிதிக் கோரிக்கைக்கான காலக்கெடுவையும், முதலீட்டில் அடையக்கூடிய மைல்கற்களையும் விவரிக்கவும். உங்கள் கோரிக்கைக்கு வலுசேர்க்குமாறு உறுதியான நிதியாதாரக் கணிப்புகள் மற்றும் வர்த்தகத்திற்கு அதன் அவசியத்தையும் வலியுறுத்தவும்.
உங்கள் வணிகத் திட்டத்தை மேம்படுத்துதல்
முக்கியக் குழு உறுப்பினர்களின் பயோடேட்டாக்கள், சந்தை ஆராய்ச்சித் தரவு, தயாரிப்பு முன்மாதிரிகள் அல்லது சட்ட ஆவணங்கள் போன்ற உங்கள் வணிகத் திட்டத்தை ஆதரிக்கும் கூடுதல் தகவல்கள் பிற்சேர்க்கைகள் பிரிவில் சேர்த்து விடுங்கள். பொருத்தமான தலைப்புகள் மற்றும் துணைத் தலைப்புகளைப் பயன்படுத்தி, பிற்சேர்க்கைகளை தெளிவாக எளிதில் அணுகக் கூடிய வகையில் ஒழுங்கமைக்கவும்.
ஆக்கம்: சானியா கான் | தமிழில்: ஜெய்
Edited by Induja Raghunathan