20 வயதில் விதவை; விடாமல் விரட்டிய வறுமை: இயற்கை விவசாயத்தில் உஷாராணி வென்றது எப்படி?
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கொண்டா உஷாராணி என்ற பெண்மணி இளம் வயதிலேயே கணவர் மரணம், வறுமை என பல கஷ்டங்களை கடந்திருந்தாலும், தற்போது தனது இயற்கை விவசாயம் மூலமாக 500 விவசாயிகளுக்கு உதவியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கொண்டா உஷாராணி என்ற பெண்மணி இளம் வயதிலேயே கணவர் மரணம், வறுமை என பல கஷ்டங்களை கடந்திருந்தாலும், தற்போது தனது இயற்கை விவசாயம் மூலமாக 500 விவசாயிகளுக்கு உதவியுள்ளார்.
பெரிதாக கல்வி அறிவு கிடையாது, 20 வயதிலேயே திடீரென கணவனை பறிகொடுத்த நிலையில், இரண்டு பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இயற்கை விவசாயத்தை கையில் எடுத்த கொண்டா உஷாராணி, இன்று ஆந்திர மாநிலத்தின் சிங்கப்பெண்ணாக உயர்ந்து நிற்கிறார்.
மறுக்கப்பட்ட கல்வி, பறிபோன வாழ்க்கை:
ஆந்திர மாநிலம் குண்டூரை மாவட்டத்தில் உள்ள நுடக்கி கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கொண்டா உஷாராணி, குடும்ப வறுமை காரணமாக 10ம் வகுப்புடன் பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டார். பின்னர், அந்த ஊரில் உள்ள பெண் குழந்தைகளைப் போலவே உஷாராணிக்கும் 17 வயதிலேயே திருமணம் நடந்துள்ளது.
திருமணமாகி மூன்று வருடங்களுக்குப் பிறகு இரண்டு மகன்களைப் பெற்றெடுத்த அவர், ஒரு விபத்தில் கணவனை பறிகொடுத்தார். குடும்பத்தின் பொருளாதாரச் சுமை ஒரே இரவில் உஷாராணியின் தோள்களில் விழுந்தது.
“ஆரம்பத்தில் வீடுகளில் வேலை செய்வது, அலுவலகங்களில் வாட்ச் வுமனாக பணியாற்றுவது போன்ற பல வேலைகளைச் செய்தேன். ஆனால், எனக்குத் தேவையான வருமானம் கிடைக்கவில்லை. அதன் பின்னர் தான் கிராமத்தில் எனது குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடிவெடுத்து, 2013ம் ஆண்டு முதல் முறையாக மஞ்சள் சாகுபடி செய்தேன்.”
விவசாயக் குடும்பத்திலேயே பிறந்திருந்தாலும், அனுபவ ரீதியாக விவசாயம் பற்றி உஷாராணிக்கு பெரிய அளவிலான அறிவு இல்லை. எனவே அதிக விளைச்சலைப் பெற பிற விவசாயிகளைப் போலவே ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லியை பயன்படுத்தியதால் 3 ஆண்டுகளிலேயே அவரது நிலம் கடுமையான விளைவுகளைச் சந்தித்துள்ளது.
இயற்கை விவசாயத்திற்கு மாற்றம்:
38 வயதான உஷாராணி தனது இயற்கை விவசாயத்திற்கான பயணம் குறித்து கூறுகையில்,
“எனக்கும் வயலில் வேலை பார்த்த மற்றவர்களுக்கும் சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டது. வயலுக்கு நாங்கள் தொடர்ந்து பயன்படுத்திய ரசாயானப் பொருட்கள் தான் அதற்கு காரணம் என்பதை உணர்ந்தேன். எனவே, 2016ம் ஆண்டு இயற்கை விவசாயம் சார்ந்த வகுப்புகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். அதன் பின்னர் எனது நிலத்திற்கு அருகேயுள்ள சில ஏக்கர் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினோம். இப்போது, ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடியும், ஒரு ஏக்கரில் மஞ்சள் சாகுபடியும் செய்கிறேன். வயல் ஓரங்களில் கொய்யா மரங்களை நட்டுள்ளேன்,” என்கிறார்.
கொண்டா உஷாராணிக்கு குண்டூரைச் சேர்ந்த அரசு வேளான் ஊழியரான சுபாஷ் பாலேகர் என்பவர் தான் வழிகாட்டியாக இருந்து இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொடுத்துள்ளார். தற்போது இயற்கை விவசாயத்தோடு, தனது நிலத்திற்குத் தேவையான சொந்த உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தயாரித்து வருகிறது. அதனை கிராமத்தில் உள்ள கடைகள் மூலமாக சக விவசாயிகளுக்கு விற்பனை செய்து கூடுதல் வருமானமும் ஈட்டி வருகிறார்.
"நான் தயாரிக்கும் உரங்களில் கால்நடைகளின் கழிவுகள், கோமியம், வேம்பு, உயிர் உரம் மற்றும் பிற இயற்கை பொருட்கள் மட்டுமே உள்ளன," என்கிறார்.
இயற்கை விவசாய பயிற்சியாளர்:
அனுபவம் வாய்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய நிபுணர்களின் நீண்ட நாள் ஆலோசனைகள் மூலம் இயற்கை விவசாயத்திற்கு மாறிய உஷாராணி, தான் கற்ற அனுபவங்களையும், பெற்ற பயிற்சிகளையும் கொண்டு சக விவசாயிகளுக்கு உதவி வருகிறார். இயற்கை உரங்களை தயாரிப்பது, விவசாயம் செய்வது மட்டுமின்றி உஷாராணி, சக விவசாயிகள் இயற்கை பண்ணை அமைக்க தேவையான உதவி மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
ரசாயான உரங்கள், பூச்சிக்கொல்லிகளால் நிலத்திற்கும் மக்களுக்கும் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லி, சக விவசாயிகளை இயற்கை விவசாயிகளாக மாற்றி வருகிறார். இதுவரை, ஆந்திர மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இயற்கை விவசாயம் பற்றி ஆலோசிப்பது, ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆன்லைன் சந்தையில் அசத்தல்:
ஆர்கானிக் உரங்கள், விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ஆன்லைனில் விற்க முடிவெடுத்த உஷாராணி, 2020ம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களின் உதவியுடன், ‘ஸ்ரீ வாசவி துர்கா ஆர்கானிக் புரோடெக்ட்’ என்ற இணையதளத்தை தொடங்கினார்.
“பெண்களுக்கு நிதி சுதந்திரம் அவசியம். நீங்கள் படிக்காவிட்டாலும், விவசாயம் மூலம் பணம் சம்பாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன. குறைந்த பட்சம் தற்போதைய மற்றும் வரவிருக்கும் தலைமுறையாவது மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ நிலையான வருமானத்தை ஈட்டுவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்கிறார்.
சில மாதங்களுக்கு முன், 'அறிவியலில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில், 'இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் சமுதாயத்திற்கு ரசாயனமற்ற உணவுகளை வழங்குதல்' என்ற தலைப்பில் உஷாராணி சமர்ப்பித்த விளக்கம் பாராட்டுக்களை குவித்துள்ளது.
தகவல் உதவி - தி பெட்டர் இந்தியா | தமிழில் - கனிமொழி
அன்று மும்பை சேரி வாழ்க்கை; இன்று மைக்ரோசாப்ட் வடிவமைப்பு மேலாளர் ஆன பெண்ணின் கதை!