அன்று மும்பை சேரி வாழ்க்கை; இன்று மைக்ரோசாப்ட் வடிவமைப்பு மேலாளர் ஆன பெண்ணின் கதை!
இந்தியாவில் ஏழ்மை நிலையில் வசிக்கும் மக்களுக்கு எதுவுமே போராடாமல் கிடைப்பதில்லை. கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய அடிப்படை தேவைகளில் தொடங்கி, அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கான போராட்டம் தினந்தோறும் நீடித்து வருகிறது. அப்படி குடிசை பகுதியில் வளர்ந்து, தற்போது உலகின் முன்னணி நிறுவனத்தில் மேல
இந்தியாவில் ஏழ்மை நிலையில் வசிக்கும் மக்களுக்கு எதுவுமே போராடாமல் கிடைப்பதில்லை. கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய அடிப்படைத் தேவைகளில் தொடங்கி, அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கான போராட்டம் தினந்தோறும் நீடித்து வருகிறது. அப்படி குடிசைப் பகுதியில் வளர்ந்து, தற்போது உலகின் முன்னணி நிறுவனத்தில் மேலாளராக அமர்ந்திருக்கும் பெண்ணின் போராட்ட கதை இது...
ஷஹீனா அட்டர்வாலா மும்பை குடிசைப் பகுதியில் வளர்ந்து, இப்போது மைக்ரோசாப்டின் ஆடம்பரமான அலுவலகத்தில் தயாரிப்பு வடிவமைப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார். ட்விட்டரில் ஷஹீனா அட்டர்வாலா ‘சாலைகளில் தூங்குவது’ முதல் ’விசாலமான மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்வது’ வரை வெளியிட்ட பதிவு, ஒட்டுமொத்த இந்தியர்களையும் உற்று நோக்க வைத்துள்ளது.
யார் இந்த ஷஹீனா அட்டர்வாலா?
உத்தரப்பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்த ஷஹீனா அட்டர்வாலாவின் குடும்பம், பாந்த்ரா ரயில் நிலையம் அருகேயுள்ள தர்கா கல்லி சேரி என்ற பகுதியில் குடியேறியது. மும்பைக்கு குடிபெயர்ந்த அவரது தந்தை, நடைபாதையில் எண்ணெய் வியாபாரம் செய்து வந்துள்ளளார்.
தற்போது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷஹீனா அட்டர்வாலா, ஒருநாள் தனது பழைய வீட்டை நெட்ஃபிக்ஸ் ஆவணப் படமான ‘பேட் பாய் பில்லியனர்ஸ்’-யில் கண்டுள்ளார். அந்த நிமிடத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
“நெட்ஃபிக்ஸ் தொடர் ‘பேட் பாய் பில்லியனர்ஸ்: இந்தியா’ என்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் எனது வீடும் ஒன்று. என் வாழ்க்கையை கட்டியெழுப்ப 2015 ஆம் ஆண்டு தனியாக வெளியேறுவதற்கு முன்பு நான் வளர்ந்தது இங்கு தான்...” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், ‘சேரி வாழ்க்கை கடினமாக இருந்தது, அது என்னை கடுமையான வாழ்க்கை நிலைமைகள், பாலின சார்பு மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது, ஆனால் இது எனக்கான வித்தியாசமான வாழ்க்கையை கற்கவும் வடிவமைக்கவும் என் ஆர்வத்தை தூண்டியது’ எனப் பதிவிட்டுள்ளார்.
அங்கு பல சிக்கல்களை சந்தித்த ஷஹீனாவின் மனதில் முதன் முறையாக தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியையும் கம்ப்யூட்டர்கள் விதைத்துள்ளன. முதன் முறையாக ஷஹீனா கம்ப்யூட்டரை பார்த்த போது அது தனது வாழ்க்கையை மாற்றும், அதன் முன் அமர்ந்து பணியாற்றும் எவருக்குமே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்திருக்கிறார்.
வீட்டின் பொருளாதாரச் சூழ்நிலையும், அவரது குறைவான மதிப்பெண்களும் கணினி பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கான வாய்ப்பை கொடுக்கவில்லை. அதனால், சோர்ந்துவிடாமல் ஷஹீனா தனது தந்தையை தொடர்ந்து வற்புறுத்த ஆரம்பித்தார். அதன் பலனாக அவரது தந்தை கடன் வாங்கி ஷஹீனாவை கணினி வகுப்பில் சேர்த்துவிட்டார்.
தனக்கென சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமென அவர் நினைத்த போது, மதிய உணவு சாப்பிடாமலும், வீட்டிற்கு நடந்து செல்வதன் மூலமும் பணத்தை மிச்சபடுத்தினார்.
பேட்டி ஒன்றில் ஷஹீனா அட்டர்வாலா கூறியதாவது:
"நான் ப்ரோகிராமிங்கை கைவிட்டுவிட்டு, டிசைனிங் தொடர்பான தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்பான விஷயங்கள் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, ஆனால் வடிவமைப்பு என்றும் நிலைத்திருக்கக்கூடியது என்று என்னை நம்ப வைத்தது,” எனத் தெரிவிக்கிறார்.
கம்ப்யூட்டர் வாங்க காசில்லாமல், கடும் போராட்டங்களை சந்தித்து வந்த ஷஹீனா அட்டர்வாலா, கடந்த ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தயாரிப்பு வடிவமைப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஷஹீனாவுக்கு இந்த வேலை கிடைத்ததை அடுத்து மும்பையில் உள்ள நல்ல வசதியான அடுக்குமாடி குடியிருப்பிற்குக் குடியேறியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
“2021 ஆம் ஆண்டில், நான் என் குடும்பத்துடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினோம். இங்கிருந்து நாங்கள் வானத்தை பார்க்க முடியும், நல்ல சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம், பறவைகள் மற்றும் பசுமையால் சூழப்பட்டுள்ளது. என் தந்தை ஒரு நடைபாதை வியாபாரி. சாலையில் தூங்குவது முதல் வாழ்க்கை வாழ்வதைத் தாண்டி எங்களால் கனவு காண முடியவில்லை. அதிர்ஷ்டம், கடின உழைப்பு மற்றும் வாழ்க்கை போராட்டத்தை சமாளிப்பதே முக்கியம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
“ஒரு ஏழை இந்தியன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விட்டுவிட்டு வேறு எதையாவது உங்களிடம் யாராவது பேசினால். அவர்கள் உங்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் என அர்த்தம். என்னை போல கோடிக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. அவர்களது ஒரே நம்பிக்கை கல்வி மட்டுமே. படித்த சரியான இந்தியர் மட்டுமே நமக்காக கேள்வி கேட்பார் அது நமது வாழ்க்கையை மாற்றும் என்பது தான்...”
ஷஹீனாவின் இந்த ட்விட்டர் பதிவுகளை இதுவரை பலரும் லைக் செய்துள்ளது ஷேர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி - ட்விட்டர்