கோவிட்-19 தொற்று எப்படி, எப்போது முடிவுக்கு வரும்?
கொள்ளை நோய் கொரோனாவுக்கு இரண்டு வகையில் மட்டுமே முடிவுகள் வரும் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். அது என்ன என்றுதானே கேட்கிறீர்கள்?
கோவிட்-19 பேண்டமிக் எப்போது முடிவு பெறும்? அதுவும் எப்படி முடிவு பெறும்?
இதுதானே இன்று உலகமக்கள் அனைவரது மனதிலிருக்கும் கேள்வி... பலரும் பல தீர்வுகளை, முடிவுகளை, யூகங்களை சொல்லி வருகிறார்கள், ஆனால் இந்த கொள்ளை நோய் கொரோனாவுக்கும் இரண்டே இரண்டு வகையில் மட்டுமே முடிவுகள் வரும் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். அது என்ன என்றுதானே கேட்கிறீர்கள்?
ஒன்று மருத்துவ முடிவு: கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பூசி, அதைத் தொடர்ந்து இறப்புகளும் தானாகவே குறைந்து வைரஸ் காணமல் போவது.
இரண்டாவது, சமூக முடிவு: கோவிட் என்ற கொடிய வைரஸ் பற்றிய அச்சம் நம்மிடையே குறைந்து அதை ஏற்றுக்கொள்ளும் போது இது முடிவடையும்.
இது என்ன முடிவு? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தற்போதுள்ள இரண்டு முடிவுகள் இது மட்டுமே என்கின்றனர் வல்லுனர்கள்.
“மக்கள் இந்த தொற்று எப்போது முடிவு பெறும்? என்று கேட்கும்போது, அவர்கள் இதன் சமூக முடிவைப் பற்றித் தான் கேட்க முடியும். அதுதான் தற்போதைய நிலை,” என்கிறார் ஜான் ஹாப்கின்ஸ்-ன் மருந்தக வரலாற்றுப் பிரிவின் வரலாற்று வல்லுனர் Dr.ஜெரமி க்ரீன்.
இன்னும் மிக விரிவாகச் சொல்லவேண்டும் என்றால்,
இந்த நோய் காணாமல் போய் முடிவுக்கு வருவதைவிட அதைப்பற்றி சிந்திக்கும் மக்கள் சோர்வடைந்து, பயத்தில் இருந்து மீண்டு வைரசுடன் வாழப்பழகும் போதே இது முடிவுக்கு வரும் என்கிறார்.
ஆலன் ப்ராண்ட், என்ற ஹார்வர்டை சேர்ந்த வரலாற்று வல்லுனரும் இதே போன்ற கூற்றையே தெரிவிக்கிறார். கோவிட்-19 முடிவைப் பற்றி சொல்லும் அவர்,
“தற்போது லாக்டவுன் தளர்வுகளைப் பற்றியும், அதன் மூலம் பொருளாதாரம் நிலைநாட்டுவது பற்றியும் விவாதிக்கத் தொடங்கியுள்ள வேளையில், கோவிட் முடிவு பற்றியும் பேசுகிறார்கள். அதன் முடிவு என்பது மருத்துவம் அல்லது பொது சுகாதார தரவுகளால் அல்ல சமூக-அரசியல் செயல்பாடுகள் மூலமே இருக்கும்,” என்கிறார் ஆலன்.
மற்றொரு வரலாற்றாசிரியர் டோரா வர்கா கூறும்போது,
“கோவிட் தொற்றின் முடிவு குழப்பமானதாக இருக்கும். கடந்த காலங்களைப் பார்க்கும் போது இதற்கு சரியான எடுத்துக்காட்டுகள் இல்லை. இந்த வைரஸ் முடிந்தது என்று யாரால், எப்படி உறுதியாக சொல்லமுடியும்?” என கேள்வி கேட்கிறார்.
பயத்தின் பாதையில்
மக்கள் மத்தியில் கூட்டு பயம் என்பது ஒரு பெருவாரியான தொற்றினால் மட்டும் ஏற்படும் என்பதில்லை, அது சமூகத்தின் மனநிலையின் பிரதீபலிப்பு. 2014ல் ஆப்ரிகாவை உலுக்கிய எபோலா வைரஸ் மற்ற நாட்டு மக்களையும் சற்று அச்சத்தில் ஆழ்த்தியது. ஆப்ரிக்காவில் உருவாகி ஐயர்லாந்த் வரை சென்ற எபோலா மக்களை பீதியில் கடத்தியது, ஆனால் அது மெல்ல மறையவே பயமும் மெல்ல குறைந்தது.
அப்போது ஐயர்லாந்தில் பணிபுரிந்த மருத்துவர் முரே பகிர்கையில்,
“நாம் வைரசை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் நம் அச்சத்தை வென்றிடத் தவறினால் அதுவே இந்த மனிதகுலத்துக்கு ஒரு பேரழிவை நிகழ்த்திடும். தொற்று இல்லாத பகுதி மக்களும் இந்த பயத்தில் சூழ்ந்தால் அதுவே பல மடங்கு பிரச்சனைகளுக்கும், இன, மொழி, ஜாதிக் குழப்பங்களுக்கும் நம்மை ஆளாக்கிவிடும் நிலை ஏற்பட்டுவிடும்,” என்று எச்சரிக்கின்றார்.
கருப்பு தினங்கள்: நினைவுகளும், மரணங்களும்
கடந்த 2000 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால் ப்ளேக் நோய் பல சமயங்கள் மனித இனத்தை தாக்கி, பல லட்ச உயிர்களை காவு வாங்கியுள்ளது. ஒவ்வொரு முறை ப்ளேக் தாக்கியப்போதும் மக்கள் மத்தியில் பயம் பலமடங்காயின. பிளே பூச்சியின் மூலம் பரவி பின்னர் எலிகளுக்குப் பரவிய ஒரு பாக்டீரியா தொற்று ப்ளேக் ஆகும்.
‘ப்ளாக் டெத்’ என அழைக்கப்பட்ட ப்ளேக் நோய் எலிகளில் இருந்து பரவுவதால், எலிகளை அழித்துவிட்டால் ப்ளேகை முற்றிலும் ஒழிக்கலாம் என நம்பப்பட்டது. ஆனால் இந்த தொற்று இருப்பவர் மற்றவருக்கும் பரப்பிடமுடியும், என்பதால் அது சாத்தியமற்றது ஆனது.
சீனா, ஐரோப்பா, வடக்கு ஆப்ரிகா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய ப்ளேக், மூன்று முறை தீவிரமாக இவ்வுலகைத் தாக்கியது. கொத்து கொத்தாக உயிர்களை எடுத்த ப்ளேக் நோய் வராதவர்கள் பெரும் அதிர்ஷ்டம் செய்தவராகவே கருத்தப்பட்ட காலம் அது.
ப்ளேக் நோயும் ஒரு பான்டமிக் தான், பலமுறை திரும்ப வந்திருக்கிறது. கடைசியாக பேரழிவாக சீனாவை 1855ல் தாக்கிய ப்ளேக், உலகெங்கும் பரவி, இந்தியாவில் மட்டும் 1.2 கோடி மக்களை கொன்றது. பாம்பேவில் ஒரு மொத்த குடியிருப்பும் எரிக்கப்பட்டது.
அடுத்த உலகை வாட்டிய கொடிய வைரஸ் ‘ஸ்மால்பாக்ஸ்’ சின்னம்மை என்று நாம் அழைக்கின்றோம். ஆனால் இதுவரை ஒரு வைரசுக்கு முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்றால் அது சின்னமைக்கு தான். வேரியோலா வைரஸ்-க்கான தடுப்பூசி நல்ல பலனை அளித்து, கிட்டத்தட்ட சின்னம்மை முழுமையாக ஒழிக்கப்பட்டது என்றே சொல்லலாம். 1977-ல் கடைசியாக ஒருவரை சின்னம்மை தாக்கியது, பின்னர் அவர் குணமும் ஆனதாக வரலாறு கூறுகிறது.
கோவிட்-19 எப்படி முடியும்?
சரி இதற்கு முன் நம்மை தொற்றிய வைரசுகள் பலவகைகளில் கட்டுப்படுத்தப்பட்டும், காணாமல் போயும், ஒழிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட் தொற்று எப்படி முடியும்? அதுதானே இப்போதைய கவலை.
வரலாற்று வல்லுனர்கள் சொல்வதெல்லாம்,
“கொரோனா வைரஸ் எனும் பான்டமிக் மருத்துவ வழியில் முடிவு பெறுவதற்கு முன்பு சமூக வழியில் நிறைவு பெறும் என்கின்றனர். மக்கள் இந்தத் தொற்றைப் பற்றி பேசி, யோசித்து, கவலையுற்று, அதனால் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள், லாக்டவுனால் சலித்துப் போய், வைரஸ் ஒழிக்கப்படுவதற்கு முன்பே அதை ஏற்றுக்கொண்டு வாழத் தொடங்குவார்கள். இவை அதற்கு ஒரு தடுப்பூசி வருவதற்கு முன்பாக நடக்கத் தொடங்கும்,” என்கிறார் யேல் பல்கலை வரலாற்றாசிரியர் நவோமி ரோஜர்ஸ்.
கொரோனா தொற்று மனதளவில் பல பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவித எரிச்சல், சலிப்பு என மனநிலையை பாதித்துள்ளதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதையே இதற்கான தீர்வாக எண்ணத் தொடங்குவார்கள் என்றே வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கில் தளர்வுகள் இப்போதே உலக அளவில் தொடங்கிவிட்டது. பல நாடுகளில் லாக்டவுன் விலக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் பெரிய வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கியதால், உலக நாடுகள் ஊரடங்கை விலக்கி வருகின்றனர். இதைத்தவிர வேறென்ன செய்வது என்பது போன்ற நிலை தான்.
தற்போது சமூகத்துக்கும் மருத்துவத்துக்கும் போட்டி நிலவுகிறது. பொது சுகாதார அதிகாரிகள், மருந்து கண்டுபிடிக்கும் வழியை தீர்வாக எண்ண, மக்கள் சமூக முடிவே கோவிட்-19க்கு தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் என்கிறார் ரோஜர்ஸ்.
“இதன் முடிவை தீர்மானிப்பது யார்? இது ஒரு சவால், இதன் வெற்றி உடனே வரப்போவதில்லை. கோவிட் என்ற பான்டமிக் முடிவுக்கு வருவது நீண்ட ஒரு பயணம், கடினமான வழியும் கூட...” என்று கூகிறார் Dr.ப்ராண்ட்.
தகவல் உதவி: நியூயார்க் டைம்ஸ்