கொரோனாவுக்கு முன் மனிதக் குலத்தை உலுக்கிய தொற்று நோய்கள் என்ன?
ஸ்பானிஷ் காய்ச்சல் உள்ளிட்ட வரலாற்றில் மனிதக் குலத்தை உலுக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய கொள்ளை நோய்கள் குறித்து ஒரு தொகுப்பு:
கொரோனா வைரஸ் உலகையே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கின்றன. மருத்துவ உலகம் இந்த நோய்க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஆய்வாளர்கள் தடுப்பூசி, நோயை குணமாக்கும் மருந்துகளை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த உலகையும் கொரோனா அளவுக்கு பாதித்த தொற்று நோய் வேறில்லை என்றாலும், இதற்கு முன்னரும், வெவ்வேறு காலகட்டத்தில் பலவித தொற்றுநோய்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
மனிதர்களிடையே பரவக்கூடிய நோய்கள், மனிதர்கள் வேட்டையாடிகளாக உலாவிய காலத்திலேயே நிலவியதாக கருதப்படுகிறது. பின்னர் நாகரீகம் வளர்ச்சி அடைந்த காலத்தில், தொற்று நோய்களின் தாக்குதலும் தீவிரமானது. நகர வாழ்க்கையின் துவக்கம், மனிதர்கள் நெருங்கிப் பழகிய சூழல் ஆகியவை தொற்று நோய்களுக்கு காரணமாயின.
மனித வரலாற்றை திரும்பி பார்க்கையில், அண்மைக் காலத்தில் அச்சுறுத்திய சார்ஸ், எபோலா வைரஸ் மட்டும் அல்லாது, கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish Influenza) உள்ளிட்ட தொற்று நோய்களை வரலாற்றின் பக்கங்களில் பார்க்க முடிகிறது. அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கொள்ளை நோய்கள் உலகை வாட்டி வதைத்துள்ளன.
அந்த வகையில், இதுவரை உலகை பெருமளவு அச்சுறுத்திய கொள்ளை நோய்கள் பற்றி ஒரு பார்வை:
கிமு 430 .: ப்ளேக் ஆஃப் ஏதென்ஸ் (Plague of Athens)
மிக மிக ஆரம்ப காலத்தில் பதிவான முதல் கொள்ளை நோய்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. பிலப்போனேசிய போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஏதென்ஸ் நகரை இந்த நோய் உலுக்கியது. லிபியா, எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் நோய் பரவி பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஏதென்ஸ் நகரை தீண்டியது. ஸ்பார்டன்கள் முற்றுகையின் போது இது நிகழந்தது. அங்கிருந்த மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மாண்டனர்.
காய்ச்சல், தாகம், தொண்டை எரிச்சல், தோல் பாதிப்பு ஆகிய அறிகுறிகளை இந்த நோய் கொண்டிருந்தது. டைபாய்டு நோய் என கருதப்பட்ட இந்த காய்ச்சல், எதென்சை மிகவும் பலவீனமாக்கியது.
கிபி 165.: ஆன்டனைன் பிளேக் (Antonine Plague)
ஆண்டனைன் பிளேக் நோய் முதலில் ஐரோப்பாவின் நாடோடி இனமான ஹுன்களை பாதித்து பின்னர் ஜெர்மனியர்களை பாதித்தது. அதன் பின் ரோமானியர்கள் மத்தியில் பரவியது. காய்ச்சல், தொண்டை எரிச்சல், வயிற்றுபோக்கு ஆகிய அறிகுறிகளைக் கொண்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு மேல் இதன் பாதிப்பு நீண்டது. ரோமானிய பேரரசர் மார்கஸ் அரிலியசும் இதற்கு பலியானார்.
250 கிபி.: சைப்ரிய பிளேக் (Cyprian Plague)
கார்த்தேஜ்ஜின் கிறிஸ்துவ பிஷப்பை முதலில் பலி கொண்ட இந்த பிளேக், வயிற்றுப்போக்கு, வாந்தி, தொண்டை புண், காய்ச்சல், கை, கால் வலி ஆகிய அறிகுறிகளைk கொண்டிருந்தது.
இந்த நோயில் இருந்து தப்பிக்க நகரவாசிகள் கிராமங்களை நோக்கி ஓடினர். ஆனால் நோய் அங்கும் பரவியது. எத்தியோப்பியாவில் துவங்கியதாகk கருதப்படும் இந்த நோய், வட அமெரிக்காவில் இருந்து ரோம் நகரில் நுழைந்து மேலும் வடக்கே பரவியது. இந்த நோய் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு அடிக்கடி தாக்கியது. 444ம் ஆண்டு பிரிட்டனை தாக்கியது. இதன் நடுவே ஏற்பட்ட போரில் ஆங்கிலேயர்கள், சாக்சன்கள் உதவியை நாடியதன் விளைவாக பிரிட்டன் தீவு அவர்கள் கட்டுப்பாட்டுக்குச்சென்றது.
541 கிபி.: ஜஸ்டினியன் பிளேக் (Plague of Justinian)
எகிப்தில் துவங்கிய இந்த பிளேக் நோய், பாலஸ்தீனம் வழியே பைசண்டைன் பேரரசில் பரவி பின்னர் மத்தியதரை பகுதியையும் தாக்கியது. இந்த நோய், ரோம பேரரசை மீண்டும் ஒருகிணைக்கும் பேரரசர் ஜஸ்டினியன் திட்டத்தை பெருமளவு பாதித்தது.
கிறிஸ்துவம் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு இதன் தாக்கம் நீடித்து, 5 கோடி மக்களை பலி வாங்கியது. புபோனிக் பிளேக் என குறிப்பிடப்படும் பிளேக் வகையின் துவக்கமாகவும் கருதப்படுகிறது.
1350: கருப்பு மரணம் (Black Death)
ப்ளாக் டெத் என குறிப்பிடப்படும் இந்த கொள்ளை நோய், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பலி வாங்கியது. புபோனிக் பிளேக்கின் இரண்டாம் அலையான இந்த நோய், ஆசியாவில் துவங்கி சிசிலி வழியே ஐரோப்பாவை தாக்கியது. நோயின் தீவிர காரணமாக இறந்தவர்கள் சடலங்கள் நகரங்களில் சிதறிக்கிடக்கும் நிலை இருந்ததாக அறிய முடிகிறது.
இந்த நோயின் தீவிரத்தால் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போர் நிறுத்தத்தை அறிவித்தன. இங்கிலாந்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பு சீர் குலைந்தது.
1492: கொலம்பஸ் வருகை
கரிபிய பகுதியில் ஸ்பெயின் நாட்டவரின் வருகையின் காரணமாக, சின்னம்மை, பிளேக் உள்ளிட்ட நோய்கள் பரவி உள்ளூர் மக்களைத் தாக்கியது. இதனால் உள்ளூர் மக்களில் பெரும்பகுதியினர் அழிந்தனர்.
கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஹிஸ்பானியோலா தீவில் அடியெடுத்து வைத்த சில ஆண்டுகளில் அதன் மக்கள் தொகை 60 ஆயிரத்தில் இருந்து 500 ஆக குறைந்தது.
1665: லண்டன் பிளேக்
மீண்டும் தாக்கிய புபோனிக் பிளேக், லண்டன் மக்கள் தொகையில் 20 சதவீதத்தினரை பலி வாங்கியது. இந்த நோய்க்கு, நாய்களும், பூனைகளும் காரணம் என கருதி இந்த விலங்குகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டன. தேம்ஸ் நதிக்கரை முழுவதும் நோய் பரவியது. லண்டன் நகரின் பெரும் தீவிபத்து ஏற்பட்ட அதே காலத்தில் இந்த நோயும் தாக்கியது.
1817: காலரா
முதல் காலரா நோய் தாக்கியது. அடுத்த 150 ஆண்டுகளில் தொடர்ந்து ஆறு காலாரா நோய் அலை உண்டாகி பத்து லட்சம் பேரை பலி கொண்டது. ரஷ்யாவில் இருந்து துவங்கியதாகk கருதப்படுகிறது. கலப்பட உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவிய காலரா நோய்க்கிருமி, ஆங்கிலேயர்கள் மூலம் இந்தியாவிலும் பரவியது. ஆங்கிலேயேப் பேரரசு பகுதிகளில் இந்த நோய் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 1,50,000 பேர் பலியானார்கள்.
1855: மூன்றாம் பிளேக் (Third Plague)
சீனாவில் துவங்கி, இந்தியா, ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளை தாக்கிய புபோனிக் பிளேக் 1.50 கோடி மக்களை பலி கொண்டது. யூனானின் சுரங்கப்பகுதியில் துவக்கத்தில் ஈக்கள் மூலம் பரவிய இந்த நோய், பின்னர் இந்தியாவில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
1875: ஃபிஜி தட்டம்மை
ஃபிஜி தீவுகள் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் வந்த பிறகு, விக்டோரியா மகாராணியின் சார்பாக ஒரு அரசுக் குழு ஆஸ்திரேலியா சென்று வந்தது. அப்போது தட்டம்மை தாக்கம் இருந்ததால், இந்தக்குழு தன்னுடன் நோயை கொண்டு சென்றதால் அது மேலும் பரவியது.
நோயின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், கிராம மக்கள் செத்து மடிந்தனர். சடலங்கள் எரிக்கப்பட்டன. 40,000 பேர் பலியானார்கள்.
1889: ரஷ்ய காய்ச்சல்
புளு காய்ச்சலின் முதல் தீவிர தாக்குதல் சைபீரியாவில் துவங்கி மாஸ்கோவை தாக்கியது. பின்னர் போலந்து, பின்லாந்தையும் தாக்கியது. மூன்று லட்சம் பேருக்கு மேல் பலியானார்கள்.
1918: ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish Flu)
நவீன காலத்தின் முதல் தொற்று நோய் பாதிப்பாக அமைந்த ஸ்பானிஷ் புளு, 1918 முதல் ஐரோப்பாவை உலுக்கியது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் துவங்கியதாக கருதப்பட்டதால் ஸ்பானிஷ் காய்ச்சல் என குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளையும் தாக்கியது. லட்சக்கணக்கானோர் பலியானார்கள்.
1957: ஆசிய காய்ச்சல்
ஹாங்காங்கில் துவங்கிய காய்ச்சல் சீனாவில் பரவில், அமெரிக்காவிலும் பரவியது. இரண்டு அலைகளாகத் தாக்கி. பத்து லட்சம் பேரை உலக அளவில் பலி வாங்கியது. அமெரிக்காவில் மட்டும் 1,16,000 பேர் பலியானார்கள்.
1981: எச்.ஐ.வி/ எய்ட்ஸ்
1981ல் முதலில் கண்டறியப்பட்ட எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி அழித்தது. எச்.ஐ.வி வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள், காய்ச்சல், தலைவலி, லிம்ப் நோட் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளைப் பெற்றனர். இந்த நோய் உலகை உலுக்கியது.
மேற்கு ஆப்பிரிக்காவில் சிம்பன்சி குரங்குகள் மூலம் இந்த நோய்க்கிருமி பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. நோயின் தாக்கத்தை குறைக்க சிகிச்சை உருவாக்கப்பட்டாலும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
2003: சார்ஸ்
2003ல் முதலில் கண்டறியப்பட்ட சார்ஸ் நோய், வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றியது. சீனாவிலும் கிழக்கு ஆசிய நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
மூச்சுத்திணறல், இருமல், தலைவலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் கொண்டது. இருமல், தும்மல் மூலம் பரவியது. பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது.
அண்மைக் காலத்தில் பறவைக்காய்ச்சல், எபோலா வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ்களும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதாரம்: https://www.history.com/topics/middle-ages/pandemics-timeline | தமிழில்: சைபர்சிம்மன்