‘பசிக்கு மதம் இல்லை’ - இந்தியரை கௌரவப்படுத்திய இங்கிலாந்து அரசு!
10 வருடங்களாக வறியவர்களுக்கு உணவளிக்கும் அசார்!
ஹைதராபாத்தை தளமாக கொண்ட சமூக சேவையாளர் அசார் மக்சூசி. இவர் ஹைதராபாத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்து வருகிறார்.
'பசிக்கு மதம் இல்லை’ என்பதற்கேற்ப, ஹைதராபாத் உட்பட ஐந்து நகரங்களில் பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்து வருகிறார் அசார். சமூகத்துக்கு அவர் செய்த நன்மைகள் காரணமாக, தற்போது அசாரை இங்கிலாந்து அரசு கௌரவப்படுத்தியுள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தின் காமன்வெல்த் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் என்று விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பல ஆயிரக்கணக்கான மக்களின் பசியை போக்கி வரும் அசாரின் ஆரம்ப காலகட்டம் பல சோதனைகள் நிறைந்தது. தனது நான்காம் வயதில் தந்தையை பறிகொடுத்த அசார், 10 வயதாக இருந்தபோது குடும்பத்தின் பாரங்களை சுமக்க, படிப்பை கைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்படி தொடங்கியது தான் அவரின் போராட்ட வாழ்க்கை. என்றாலும் மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது ஒரு பெண்ணால் தான்.
ஒருநாள் ஆதரவற்ற ஒரு பெண், உணவு இல்லாமல் தவித்தபோது அசார் உணவு வாங்கி கொடுத்துள்ளார். அப்போது அவருக்கு நேர்ந்த ஊக்கம் தான் அவரை தொடர்ந்து இந்த சேவையில் ஈடுபட வைத்துள்ளது. இதையடுத்து, 2015ல் Sani Welfare Foundation என்ற அறக்கட்டளையை துவங்கி இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்.
அசார் குறித்து பிரிட்டிஷ் ஹை கமிஷனர் டாக்டர் ஆண்ட்ரூ ஃப்ளெமிங் கூறுகையில்,
“சமூகத்திற்கு அசாரின் பங்களிப்பு நம்பமுடியாதது. தன்னலமற்ற தியாகம் மற்றும் சேவையை பாராட்டியே அவருக்கு விருது வழங்கினோம். எட்டு ஆண்டுகளாக இயங்கி வரும் அவருக்கும் அவரது அறக்கட்டளைக்கும் நன்றி சொல்வது நம் கடமை," என்றுள்ளார்.
இதேபோல் பேசியுள்ள அசார்,
“மக்களுக்கு உணவளிக்க எல்லாம் வல்லவரால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் நன்றி கூறுகிறேன். நான் இப்போது 10 ஆண்டுகளாக ஏழைகளுக்கு உணவளித்துள்ளேன், பசி ஒழிக்கப்படும் வரை இதைத் தொடருவேன். எனது சேவையை அங்கீகரித்த எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிறரின் ஆதரவிற்கும் நான் நன்றி கூறுகிறேன்," என்கிறார்.
இந்த சேவையை தொடங்கியபோது நிதி ரீதியாக அவர் வலுவாக இல்லை. என்றாலும் அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மை காரணமாக தொடர்ந்து இந்த சேவையை செய்து வந்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்று காலத்தில் பசி இன்னும் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டதாக கூறி தற்போது இடைவிடாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
கட்டுரை: Think Change India | தமிழில்: மலையரசு