'நான் யார் என்பது எனக்குத் தெரியும்' - சன்னி லியோன்
யுவர்ஸ்டோரிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பெண்களுக்கான ஒரு மேம்பட்ட உலகை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வீட்டில் இருந்தே தொடங்குவது குறித்தும், தனக்கு ஒப்பனை மீதிருக்கும் காதல் எப்படி தொழில்முனைவு பாதைக்கு வித்திட்டது என்பது குறித்தும் பேசுகிறார் சன்னி லியோன்.
நீங்கள் சன்னி லியோனை நேசித்தாலும் சரி வெறுத்தாலும் சரி, அவர் தன் வாழ்க்கையை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனக்கான வாழ்க்கை முடிவுகளை சுயமாக எடுக்கும் ஒரு பெண் என்பதை மட்டும் நீங்கள் மறுக்கவே முடியாது.
சன்னி லியோனை நான் வெள்ளித்திரையில் பார்த்திருக்கவில்லை. ஆனால், சில வருடத்திற்கு முன்னர் டிவி தொகுப்பாளர் பூபேந்திர சௌபே கேட்ட முறைதவறிய கேள்விகளுக்கு எல்லாம் சமயோசிஜத்தோடும், பொறுமையோடு பதில் சொன்ன சன்னி லியோனை பார்த்து வியந்திருக்கிறேன்.
“எத்தனை பேர் காமப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு வளர்வார்கள்?” “ உங்களை பேட்டி எடுப்பதனால் நான் அறம் தவறியவன் ஆவேனா?” “எதிர்காலத்தில் சன்னி லியோன் முழுமையாக சாரியால் மூடப்பட்டிருக்கும் திரைப்படங்களை பார்க்க முடியுமா?” – இவை தான் சன்னி லியோனிடம் கேட்கப்பட்ட கேள்விகள்.
வேறு எந்த பெண்ணாக இருந்திருந்தாலும், உடனேயே அந்த இடத்திலிருந்து எழுந்து போய் இருப்பார். ஆனால், நிமிர்ந்த தலையோடு அதே இடத்தில் இருந்த சன்னி லியோன், மிகக் கவனமாக கணிவாக அந்த கேள்விகளுக்கு பதிலளித்தார். பின்னாளில், ஹஃபிங்டன் போஸ்டுக்கு பேட்டியளித்திருந்த சன்னி லியோன்,
“நான் எப்போதுமே பின் வாங்க மாட்டேன். யாரும் என்னை அவமதிக்க அனுமதிக்க மாட்டேன். எந்த ஆணும், பெண்ணும் என்னை வீழ்த்த நான் அனுமதிக்க மாட்டேன். எனக்குள் இருந்த அந்த உத்வேகம் தான் அந்த பேட்டியை நான் தொடரக் காரணம். கூடவே, நான் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டிருந்தால், அவர் என்னைப் பற்றி எழுப்பிய சந்தேகங்கள், என்னைப் பற்றியும் என் கடந்த காலத்தை பற்றியும் சொன்ன விஷயங்கள் எல்லாம் உண்மை என்றாகி இருக்கும். அவர் அதை செய்ய என்னால் அனுமதிக்க முடியாது” என்று சொல்லியிருந்தார்.
தனக்கான நபராக வாழ்வது!
கரன்ஜித் கௌர் வோஹ்ரா எனும் சன்னி லியோன், தன் வாழ்நாள் முழுவதுமே தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முடிவுகளுக்காக விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டே இருந்தவர். இந்திய பெற்றோர்களுக்கு கனடாவில் பிறந்த சன்னி லியோன், காமப்பட நடிகையாக தன் தொழில் வாழ்க்கையை தொடங்கியவர், பாலிவுட் திரைப்படங்கள் டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வேலை செய்திருக்கிறார்.
ஒரு முடிவெடுத்த பிறகு, எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதிலிருந்து மாறக் கூடாது என நம்புபவர் சன்னி லியோன். HerStoryக்கு அளித்த பேட்டியொன்றில்,
“பெண்ணாக இருப்பதன் சாரம் உங்களை நீங்களே புரிந்து கொண்டு, வாழ்வில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது எது வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, அதை எல்லாம் நடத்திக் காட்டுவது தான். பெண்கள், வழக்கமாக தங்களைச் சுற்றி இருப்பவர்கள் உண்டாக்கியிருக்கும் வரைமுறைகளுக்குள் கட்டுப்பட்டு, சுயத்தை இழந்துவிடுவார்கள். அது ஏற்கனவே நடந்துவிட்டது என்றால், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நம்முடைய இயல்புக்கு திரும்பிவர வேண்டும்,” என்று சொல்லியிருந்தார்.
தாய்மை மற்றும் பிற பொறுப்புகள்
ஒரு பெண்ணாக, மனைவியாக, தாயாக, நடிப்புக் கலைஞராக தான் ஏற்றிருக்கும் பாத்திரம் ஒவ்வொன்றையும் கொண்டாடிச் செய்பவர் சன்னி லியோன். டேனியல் வெபர் எனும் கிடார் கலைஞரை (இப்போது சன்னியின் மேனஜரும் அவரே) திருமணம் செய்திருக்கும் சன்னி லியோனின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருக்கிறது, குறிப்பாக சமுக வலைதளங்களில். சன்னி அவ்வப்போது தன்னுடைய வளர்ப்பு மகள் நிஷா கௌர், வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த இரட்டையர்கள் ஆஷர் சிங் வெபர் மற்றும் நோவா சிங் வெபர் ஆகியோர் இருக்கும் உற்சாகமான தன்னுடைய குடும்பப் ஃபோட்டோக்களை எல்லாம் பதிவு செய்து கொண்டே இருக்கிறார். மஹாராஷ்டிராவின் லதூரில் இருந்து நிஷாவை தத்தெடுத்தனர் சன்னி லியோனும், அவர் கணவ்ரும்.
“ஜூன் 21, 2017 தான் டேனியலுக்கும் எனக்கும் மூன்று குழந்தைகள் இருக்கப் போகின்றன என்பது தெரிந்தது. பல வருடங்களாக ஒரு குடும்பம் வேண்டும் என்ற எங்களது ஆசை ஆஷர் சிங் வெபர், நோவா சிங் வெபர் மற்றும் நிஷா கௌர் வெபரால் முழுமையடைந்திருக்கிறது.
”எங்களுடைய மகன்கள் சில வாரங்களுக்கு முன்னர் தான் பிறந்தார்கள் என்றாலும், அதற்கு முன்னரே பல வருடங்கள் எங்கள் இதயத்திலும், கண்களிலும் உயிர்த்து இருந்தவர்கள் தான். கடவுள் எங்களுக்கு என சிறப்பான ஒரு திட்டத்தை போட்டு, ஒரு பெரிய குடும்பத்தை கொடுத்திருக்கிறார். மூன்று அழகான குழந்தைகளுடன் நாங்கள் பெற்றோராக இருப்பது பெருமையளிக்கிறது. சர்ப்ரைஸ்!” என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
எப்படி இத்தனை பொறுப்புகளை சமாளிக்க முடிகிறது என்றால்,
“இத்தனை பொறுப்புகள் இருக்கும் போது நிறைய தூங்க முடியாது, ஆனால் நான் என் வாழ்க்கையையும், குழந்தைகளையும், கணவரையும் நேசிக்கிறேன். ’உறக்கத்தை’ மட்டும் தவிர்த்து பார்த்தால் எனக்கு ஒரு பிரமாதமான வாழ்க்கை இருக்கிறது...”
சன்னி லியோனின் ‘ஸ்டார் ஸ்ட்ரக்’
ஒரு நடிப்புக்கலைஞராக இருப்பது முழுமை அளிக்காததால் என்னவோ, லிப்ஸ்டிக்குகள், லிப்-லைனர்கள் மற்றும் லிப்-க்ளாஸ் ஆகியவை விற்கும் ’ஸ்டார் ஸ்ட்ரக்’ எனும் அழகு சாதன நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் சன்னி லியோன்.
“எனக்கு அழக சாதனப் பொருட்கள் பிடிக்கும், நான் நிறைய அழகு சாதனப் பொருட்களை வாங்கவும் செய்வேன். இப்படி ஒரு தொழிலை நான் தொடங்கியிருப்பது இயல்பானது என்று தான் நினைக்கிறேன். எங்கள் பொருட்கள் சந்தைக்கு வந்து விட்டது. நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நான் அணிந்து கொள்ள விரும்பும் ஒரு தயாரிப்பை உருவாக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அது தான் எனக்கு முக்கியமானதாக இருந்தது.
”நான் எப்போதுமே கேமரா முன் தான் இருக்கிறேன், நல்ல மேக்-அப்பும் தயாரிப்புகளும் தான் என்னை நன்றாக காட்டிக் கொள்ள உதவுகிறது. மக்களுக்கும் இது போன்ற தயாரிப்புகள் சென்றடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வெளியில் இருந்து முதலீட்டாளர்கள் யாரும் இல்லாமல் தான் இதை செய்ய வேண்டும் என்பதில் நானும் டேனியலும் உறுதியாக இருக்கிறோம். நிறைய பேர் தலையிடத் தொடங்கும் போது, எங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் நிறைய நடக்க வாய்ப்பிருக்கிறது. இதில் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்றால் முழுமையாக அது எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எங்கள் பிராண்டின் தினசரி முன்னேற்றத்தை பார்க்கவே பெருமையாக இருக்கிறது” என்கிறார்.
“என் பிராண்டை விரிவுப்படுத்திக் கொண்டே முடிந்த அளவு முன்னேறுவது தான் திட்டம். மலையேறும் ஒரு ரயில் போல, முன்னேறிக் கொண்டே இருக்க நினைக்கிறேன்,” என்கிறார்.
இந்தியாவில் காமப்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட, அப்படங்களில் நடிப்பவர்களை இழிவாக நடத்தும் வழக்கம் இருக்கிறது. சன்னி லியோனும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியா இன்னமுமே பழைமைவாத நாடாகவே இருக்கிறது, மங்கிப் போன சில கோடுகளை இந்தியாவால் புரிந்து கொள்ள முடியாது – உதாரணமாக, ஒரு காமப்பட நடிகை, ’மரியாதைக்குரிய’ பிற நடிகர்களுடன் இணைந்து பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதை விமர்சித்தவர்கள் ஏராளம். இந்த சவால்களை எல்லாம் பற்றி பேசிய சன்னி லியோன்,
“நான் வாழ்க்கையை கருப்பு வெள்ளையாக பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். நிறைய சவாலான தருணங்கள் இருக்கின்றன, ஆனால் நான் அவற்றை ஞாபகத்திலேயே வைத்துக் கொண்டு யோசித்துப் பார்ப்பதில்லை, ஏனென்றால் அதன் முடிவில் நான் ஏதோவொன்றை கற்றிருப்பேன். எல்லாவற்றுக்குமே ஒரு தீர்வு இருக்கிறது, அதைக் கண்டுபிடித்து பிரச்சினையில் இருந்து வெளியே வருவது என் வேலை. எவ்வளவு பாசிடிவ்வாக இருக்க முடியுமோ அவ்வளவு பாசிடிவ்வாகவே நான் என் வாழ்க்கையை வாழ்கிறேன்,” என்கிறார்.
மாற்றம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்!
கனடாவில் வாழ்ந்துவிட்டு இந்தியாவில் வாழ்வதால், இங்கே பெண்கள் சந்திக்கும் பல பிரச்சினைகள் குறித்து சன்னி லியோனுக்கு தெரிந்திருக்கிறது. குறிப்பாக, முடிவெடுக்கும் சுதந்திரம் மறுக்கப்படுவது.
“இங்கே பெண்கள் நிறைய சிக்கல்களை சந்திக்கிறார்கள், மாற்றம் வீட்டில் இருந்து தான் தொடங்கும் என்று மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது. குடும்பங்களுக்கு அடிப்படையை கற்றுக் கொடுத்தால், அடுத்த தலைமுறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். குழந்தைகள் தான் நம் எதிர்காலம், வீட்டிலிருந்து தொடங்குவது தான் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை சரி செய்யும் ஒரே வழி,” என்கிறார்.
‘ஸ்டார் ஸ்ட்ரக்’ நிறுவனத்தை பார்த்துக் கொள்வது அவருடைய முக்கியமான வேலையாக கருதினாலும் கூட, அதனோடே மலையாள சினிமாவிலும் கால்பதிக்கவிருக்கிறார் சன்னி லியோன். “அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன்,” என்று அது குறித்து தெரிவித்திருக்கிறார்.
சன்னி என்ன செய்தாலும் அது செய்தியாகிவிடுகிறது. அது குறித்து விநோதமான கருத்துக்களும், வேறுபாடுகளும், தீவிர எதிர்வினைகளும் சொல்லப்படுகிறது. அவரை குறித்த பிம்பத்தை மட்டுமே வைத்து அவரை விவரிப்பவர்களுக்கு எல்லாம் சன்னி லியோன் சொல்ல விரும்புவது ஒன்று மட்டும் தான்,
“ஒரு முறை உங்களைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு உண்மையில் நீங்கள் யார்? என கேட்டுக் கொள்ளுங்கள். நான் யார் என்பது எனக்குத் தெரியும், அது குறித்து எனக்கு பெரிய பெருமையும் இருக்கிறது... உங்களுக்கு அப்படி இருக்கிறதா?”
நாம் 2018-ன் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம், ஆனாலும் கூட நம்முடைய இயல்பிற்காகவும் நம்முடைய வேலைக்காகவும் இன்னமுமே விமர்சனத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி சூழல்களில் எல்லாம் கூட சன்னி லியோன் எப்படி துணிச்சலோடு நின்றிருந்தார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
நம்முடைய கதைகளில் பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே இருந்துவிடாமல், நம்முடைய கதைகளை மாற்றி எழுதும் சக்தி உள்ளவர்களாக நாம் இருப்போம். கடினமான சவால்களை எல்லாம் கடந்து வந்திருக்கும் எல்லோருக்கும் பாராட்டுகள். உங்கள் கதைகள் எங்களிடம் சொல்லுங்கள், அதை உலகமும் கேட்கட்டும்.
கட்டுரை - ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் - ஸ்னேஹா