Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு ‘ஐஸ் பிரியாணி’-ஆன்லைனிலும் அபாரமாக விற்பனையாகும் ‘பழைய சோறு’

மதுரை உணவகம் ஒன்றில் வெயிலுக்கு இதமாக பழைய சோறு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு ‘ஐஸ் பிரியாணி’-ஆன்லைனிலும் அபாரமாக விற்பனையாகும் ‘பழைய சோறு’

Friday May 10, 2019 , 4 min Read

வெயிலுக்கு இதமான உணவென்றால் அது பழைய சோறு தான். வாய்க்கு ருசியாக மட்டுமின்றி, வயிறுக்கு இதமாக இருப்பதும் அது தான். நம் தாத்தா, பாட்டிகளின் உணவில் முக்கிய இடம் பிடித்திருந்த பழைய சோறு, நாளாக நாளாக காணாமலேயே போய் விட்டது. அதற்கு முக்கியக் காரணம் பானையில் வடித்த காலம் போய், இப்போது குக்கர் புழக்கத்தில் உள்ளது தான்.

ஆனாலும், பழைய சோறுக்கு ரசிகர்கள் இன்றளவும் இருக்கத் தான் செய்கிறார்கள். முதல்நாள் இரவு சமைத்த உணவு மிச்சமானால் அதில் தண்ணீர் ஊற்றி, அடுத்த நாள் காலை மோர் ஊற்றியோ, சின்ன வெங்காயத்தை பொடியாக தூவியோ உண்டால், ஆஹா அது அமிர்தம் தான். ஆனால் குக்கர் சாப்பாட்டில் அந்த ருசி வருவதில்லை.

வாய்க்கு ருசியாக ‘ஐஸ்’ பிரியாணி, அதாங்க பழைய சோறு கிடைக்காதா என ஏங்கிக் கிடந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக மாறியுள்ளது மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள நெல்பேட்டை உணவுக் களஞ்சியம். இங்கு தினந்தோறும் சுவையான பழைய சோறு, சிறிய மண் பானைகளில் விற்கப்படுகிறது.

“போன வருடம் நாங்கள் இந்த பழைய சோறு விற்பனையை ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் பழையச் சோறை காசு கொடுத்து வாங்குவதா என வாடிக்கையாளர்கள் தயங்கினர். எனவே, அவர்கள் கண் பார்வையில் படும்படி நாங்கள் பழைய சோறு சாப்பிட ஆரம்பித்தோம். பின்னர் அதைப் பார்த்து அவர்களும் ஆசைப்பட்டு வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார்கள். இப்போது மற்ற உணவுகளுக்கு இணையாக பழைய சோறு விற்பனை சுடச்சுட நடைபெறுகிறது,” என்கிறார் இந்த உணவகத்தின் பொது மேலாளர் விஜயகுமார்.

பழைய சோறு தானே என மீந்து போகும் உணவுகளை இவர்கள் விற்பதில்லை. இதற்கென்றே முதல் நாள் இரவு நாட்டுப் பொன்னி அரிசியில் சாதம் வடித்து அதனை சிறிய சிறிய பானைகளில் பிரித்து, நீர் ஊற்றி வைக்கின்றனர். பின்னர் மறுநாள் அந்தப் பானைகளில் சிறிதளவு மோர் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர். பழைய சோறுக்கு தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தவரங்காய் வற்றல், மோர் மிளகாய், பருப்பு வடை மற்றும் சிறிய கிண்ணத்தில் தயிரும் தருகின்றனர்.

வீட்டில் பழைய சோறு கொடுத்தாலே சிலர் முகம் சுளிப்பார்கள், அப்படியிருக்கையில் அதனை விற்பனை செய்யும் எண்ணம் எப்படி வந்தது எனக் கேட்டால்,

“பழைய சோறு எல்லாக் காலத்திலும், எல்லோருக்கும் பிடித்தமான உணவு. ஆனால், கைப்பக்குவத்தில் தான் அதன் ருசி இருக்கிறது. இப்போது பெரும்பாலான வீடுகளில் குக்கர் சாப்பாடு தான். அதில் பழைய சோறு போட்டால் இந்த ருசி கிடைக்காது. நாங்கள் இதற்கென தனியாக சோறு வடித்து, சிறிய மண் பானைகளில் நீர் ஊற்றி வைப்பதால் இதன் ருசி தனித்துவமாக இருக்கிறது. வாடிக்கையாளர்களும் விரும்பி வாங்கிச் சாப்பிட்டு செல்கின்றனர்,” என்கிறார் இந்த உணவகத்தின் நிர்வாக இயக்குநர் மா.சிவக்குமார்.

தினந்தோறும் பழைய சோறுக்கென மட்டும் இரவில் எட்டு முதல் பத்து கிலோ அரிசியில் சாதம் வடிக்கின்றனர் இந்த உணவகத்தில். நாட்டுப் பொன்னி அரிசி என்பதால் ஒரு கிலோ அரிசியில், சுமார் 3 கிலோ 600 கிராம் வரை சாதம் கிடைக்குமாம். இதனை ஏழு பேர் வரை சாப்பிடலாம். சோறு வடித்த கஞ்சியை ஊற்றி, நீர் ஊற்றினால் மதியத்திற்கு மேல் புளித்து விடுகிறது என்பதால், தூய்மையான நீரை மட்டுமே பழைய சோறு தயாரிக்க பயன்படுத்துகின்றனர் ஹோட்டல் ஊழியர்கள்.

முதல் மூன்று மாதங்களுக்கு தினமும் ஒன்று அல்லது இரண்டு பழைய சோறு சாப்பாடு விற்பதே பெரிய விசயமாக இருந்துள்ளது. ஆனால், ருசியாலும், தங்களது விளம்பர யுக்தியினாலும் மக்களிடம் பழைய சோறை கொண்டு சேர்த்துள்ளனர் ஹோட்டல் நிர்வாகத்தினர்.

நமது முன்னோர்கள் வியர்க்க வியர்க்க வேலை செய்த போதும், களைப்பே இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ்ந்து வந்ததற்கு பழைய சோறு தான் முக்கியக் காரணம். வடித்த சாதத்தில் இருப்பதை விட, பழைய சோற்றில் நான்கு மடங்கு அதிகமாக இரும்புச் சத்து உள்ளதாம். அதோடு வைட்டமின் பி6, பி 12 நிறைந்துள்ளது. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இதையெல்லாம் மக்கள் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக, இந்த உணவகத்தில் தற்போது பழைய சோறு விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

பாரம்பரிய உணவு வகைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ’தீஞ்சுவை’ என்ற நவதானிய உணவகம் ஒன்றை இவர்கள் ஆரம்பித்துள்ளனர். அங்கு உளுத்தங்களி, வெந்தயக் களி, கம்பங்களி என பல பாரம்பரிய உணவுகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

ஆனால், அதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் விற்பனை செய்ததிலேயே நயன்தாரா வடை எனப் பேர் வைக்கப்பட்ட, நவதானிய வடை மட்டும் கொஞ்சம் விற்பனை ஆகியுள்ளது.

ஆனாலும் நஷ்டத்தைப் பற்றி கவலைப்படாமல், கடந்தாண்டு இந்த பழைய சோறு விற்பனையை ஆரம்பித்துள்ளனர். தற்போது காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இங்கு பழைய சோறு விற்பனை செய்யப்படுகிறது. அழகிய மண் பானையில் வைத்து அவர்கள் பரிமாறுவதைப் பார்க்கும் போதே, கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. ஒரு பானை சோறு ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹோட்டலில் மட்டுமின்றி ஆன்லைனிலும் பழைய சோறு விற்பனை நன்றாக நடைபெறுவதாக ஹோட்டல் நிர்வாகம் கூறுகிறது.

தினமும் 25 முதல் 40 சாப்பாடுகள் வரை பழைய சோறு ஆன்லைனில் மட்டும் விற்பனை ஆகிறதாம். ஆன் லைனில் பானையில் சாப்பாடு கேட்பவர்களிடம் மட்டும் கூடுதலாக ரூ.90 வசூலிக்கப்படுகிறது. பானை தேவையில்லை என்பவர்களுக்கு மற்ற சாப்பாடு போல் பார்சலில் பழைய சோறு ரூ.50க்கே அனுப்பப்படுகிறது. அதோடு, தங்களது கடையில் தயாரிக்கப்பட்ட சில காய்கறிகளையும் சேர்த்து அனுப்புகின்றனர்.

பழைய சோறு சாப்பிட்டால் சளி பிடிக்கும், குழந்தைகளுக்கு தரக்கூடாது என்ற கருத்து பலரிடம் உள்ளதே எனக் கேட்டால் அதற்கும் விளக்கம் தருகிறார் விஜயகுமார்.

“பெரும்பாலும் கடைகளில் ஜூஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் ஆரோக்கியமானவையா இருப்பதில்லை. அவற்றை சாப்பிடும் போது சிலருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படலாம். ஆனால், அதே ஐஸ் கட்டியை வீட்டில் தூய்மையான நீரில் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்தால் ஒன்றும் பண்ணாது. அதே கான்செப்ட் தான் இதிலும். நாம் தயாரிக்கும் பதத்தில் தான் இருக்கிறது, அது ஆரோக்கியமானதா இல்லையா என்பது. நாங்கள் மிகுந்த கவனத்துடன் வாடிக்கையாளர் நலனைக் கருத்தில் கொண்டு உணவைத் தயாரிக்கிறோம்” என்கிறார் அவர்.

அதோடு, மேல்நாட்டு உணவுகளாக பீட்சா, பர்கர் போன்றவைகளையே எளிதாக நம் குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் வேளையில், நம் ஆரோக்கியமான இந்த பாரம்பரிய உணவுகளால் எவ்வித தீமையும் அவர்களுக்கு ஏற்பட்டு விடாது என உறுதியாக கூறுகிறார் விஜயகுமார்.

ஐடி இளைஞர்கள் தொடங்கி, முதியவர்கள் வரை என அப்பகுதி மக்களின் தற்போதைய பேவரைட் உணவாகி இருக்கிறது நெல்பேட்டை பழைய சோறு. சரத்குமார் உட்பட அப்பகுதி வழியாக சென்ற பிரபலங்கள் பலர், இது குறித்துக் கேள்விப்பட்டு நேரில் வந்து சாப்பிட்டுச் சென்றதாக நெல்பேட்டை நிர்வாகிகள் பெருமையுடன் கூறுகின்றனர்.

ஜல்லிக்கட்டு காளை, கட்டுடலுமாக நிற்கும் வீரன் என நெல்பேட்டை உணவுக்களஞ்சியம் முகப்பே கம்பீரமாக இருக்கிறது. இந்த உணவகத்தில் ஐஸ் பிரியாணியைப் போலவே, கும்பகர்ண பிரியாணியும் மிகவும் பிரபலம். இந்த பிரியாணியில் சுவைக்காக நீருக்குப் பதில், நல்லி எலும்பு சூப்பை ஊற்றுகின்றனர். ஐஸ் பிரியாணி, ஹாட் பிரியாணி என இரண்டும் ஒரே இடத்தில் கிடைப்பதால், மக்களிடையே இந்த ஹோட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பொருளாதார தேவையால் இயந்திர மயமாகி விட்ட நிலையில், பழைய சோறைக் கூட கடையில் வாங்கி சாப்பிட வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விட்டோமே என்பது கொஞ்சம் வருத்தத்திற்குரியது ஹ்டான். ஆனால், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் மற்ற ஆரோக்கியமற்ற துரித உணவுகளை விலை கொடுத்து வாங்கி, இலவசமாக நோயையும் பெறுவதற்குப் பதில், இத்தகைய பாரம்பரிய உணவுகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்புவது காலத்தின் தேவைகளில் ஒன்று. அதனை சரியான சமயத்தில் வியாபாரமாக்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது நெல்பேட்டை உணவுக் களஞ்சியம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.