ஐடி பிரெஷ் 2.0: ஆர்கானிக்கில் கவனம், ரூ.350 கோடி வருவாய் இலக்கு!
இட்லி மற்றும் தோசை மாவு விற்பனை நிறுவனமாக துவங்கிய ஐடி பிரெஷ் தினமும் 55,000 கிலோ மாவு விற்பனை செய்கிறது.
முன்னணி உணவு பிராண்ட்களில் ஒன்றான ஐடி பிரெஷ் அண்மையில் நடத்திய தனது முதல் செய்தியாளர் சந்திப்பில், தனது தயாரிப்புகள் அனைத்தும் இனி ஆர்கானிக்காக இருக்கும் என அறிவித்தது. ஐடி பிரெஷ் இணை நிறுவனரான பி.சி.முஸ்தபா இதை ஐடி பிரெஷ் 2.0 என குறிப்பிட்டார்.
இதன்படி நிறுவனம் ஆர்கானிக் இட்லி மற்றும் தோசை மாவு, கோதுமை மற்றும் ஓட்ஸ் மாவு, ரவா இட்லி மாவு, ராகி இட்லி மற்றும் தோசை மாவு மற்றும் மலபார் மற்றும் கோதுமை பரோட்டா ஆகிய தயாரிப்புகளை பெங்களூரு சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. மெல்ல ஆர்கானிக் பிராண்டாக மாற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நிறுவனர்களை பொறுத்தவரை இந்த மாற்றம் தனிப்பட்டதாகவும் இருக்கிறது.
“வாழ்வியல் நோய்களுக்காக, ஏன் புற்றுநோயினால் கூட, குடும்ப உறுப்பினர்கள் பலரை இழந்து விட்டேன்,” என்று கூறும் முஸ்தபா, உணவு என்பது பிரெஷாகவும், பதப்படுத்தல் இல்லாததாகவும் இருக்க வேண்டும் என நம்புவதாக குறிப்பிடுகிறார்.
ஆர்கானிக் ஏன்?
பாரம்பரியத்திற்கும், வேர்களுக்கும் திரும்பிச்செல்வதன் அவசியத்தை உணர்ந்ததே இந்த மாற்றத்திற்குக் காரணம் என முஸ்தபா விளக்குகிறார்.
“இது புதிய பொருட்களின் அறிமுகம் மட்டும் அல்ல. எங்களது அனைத்து தயாரிப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலி (சப்ளை சைன்) ஆர்கானிக்காக மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இதற்காக தயார் செய்து கொண்டிருக்கிறோம். 1,000 விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் மூன்று வெண்டர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறோம்,” என்கிறார் அவர்.
இயற்கை வேளாண்மை என்பது கடினமானதாக இருப்பது, ஆர்கானிக் உணவு பெரிய அளவில் வளராமல் இருக்க ஒரு காரணம். ஆர்கானிக் எனும் சான்றிதழ் பெற, நிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு எவ்வித ரசாயனமும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
சவால்கள்
இயற்கை வேளாண்மையில் உள்ள இன்னொரு பெரிய சவால் குறைவான மகசூலாகும். இடைப்பட்ட காலத்தில் வெண்டர்கள் இந்த செயல்முறையில் விவசாயிகளுக்கு உதவியதாக முஸ்தபா கூறுகிறார்.
“எங்களது கார்பன் சுவட்டை குறைக்கும் அதே நேரத்தில், இயற்கை சார்ந்த எங்கள் வேர்களுக்குச்சென்று, ஊட்டச்சத்து மிக்க உணவை தழுவிக்கொள்ள, பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.”
ஐடி பிரெஷ், 2005 டிசம்பரில், முஸ்தபா மற்றும் அவரது சகோதரர்கள் சம்சுதீன்.டி.கே, அப்துல் நாசர் டி.கே, ஜாபர் டி.கே மற்றும் நவுஷத் டி.ஏ ஆகியோரால் துவக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள 50 சதுர அடி சமையல் அறையில் இருந்து இட்லி மற்றும் தோசை மாவை தயார் செய்தனர்.
கையில் இருந்த 25,000 ரூபாயில் துவங்கியவர்கள், மிக்சி, கிரைண்டர்கள் வாங்கினர். நகரில் உள்ள 20 கடைகளில் விற்க ஆறு மாதங்கள் ஆகும் என நினைத்தனர். ஆனால், 9 மாதங்கள் ஆயின.
ஆனால் இந்த நிதியாண்டில், நிறுவன வருவாய் ரூ.210 கோடியாக உள்ளது. அடுத்த நிதியாண்டில் ரூ.350 கோடியை தொட திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஐடி பிரெஷ், தினமும் 55,000 கிலோ இட்லி, தோசை மாவு விற்பனை செய்வதாக தெரிவிக்கிறது. பெங்களூருவில் இரண்டு, ஐதராபாத், மும்பை, துபாயில் ஒன்று என மொத்தம் 5 ஆலைகள் உள்ளன. தில்லி, அகமதாபாத், கொல்கத்தாவில் ஆலைகள் துவக்க உள்ளது.
மேலும் நிறுவனம், ஹிலியான் வென்சர்ஸ் மற்றும் பிரேம்ஜி இன்வெஸ்ட்மெண்ட் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டியுள்ளது.
“முதல் மாதத்தில் இருந்து லாபம் ஈட்டி வருகிறோம்,” என்கிறார் முஸ்தபா.
ஐடி பிரெஷ் வளர்ச்சியில் புதுமையான மார்க்கெட்டிங் உத்திகளும் கைகொடுத்துள்ளன. வடா மேக்கர் வீடியோவை இதற்கு உதாரணமாக கூறலாம். முஸ்தபா ஹார்வரிடில் காட்சி விளக்கம் அளிப்பதற்கு முன் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
வளரும் சந்தை
உடனடி உணவுச் சந்தை ரூ.275 கோடி மதிப்பு கொண்டதாக கருதப்படுகிறது. இதில் காலை உணவு பிரிவு 17 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தத் துறையில் எம்.டி.ஆர் மற்றும் கிட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. நெஸ்லே, பாம்பினோ, கொஹினூர் புட்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உள்ளன.
2018 ஆசோசம் மற்றும், இ.ஒய் அறிக்கை 2020 வாக்கில் ஆர்கானிக் தயாரிப்புகளுக்கான் சந்தை ரூ.12,000 கோடியை தொடும் என தெரிவிக்கிறது.
“இந்த மாற்றத்தின் மூலம், ஆர்கானின் உணவுகளை இந்தியாவில் வெகுஜன வரவேற்பை பெற வைக்க விரும்புகிறோம்,” என்கிறார் முஸ்தபா.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்