மாதம் 40 லட்சம் முட்டைகள் விற்று 12 கோடி வருவாய் ஈட்டும் ஐஐடி பட்டதாரிகள்!
ஐஐடி பட்டதாரிகள் இணைந்து உருவாக்கிய, குருகிராமைச்சேர்ந்த Eggoz நிறுவனம் பல வகையான முட்டைகளை விற்பனை செய்கிறது.
ஐஐடி-கரக்பூரைச்சேர்ந்த அபிஷேக் நேகி, உத்தம் குமார், ஆதித்ய சிங் மற்றும் பங்கஜ் பாண்டே பொறியியல் பட்டம் பெற்றபின் தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தினர்.
2017ல் இந்த நான்கு நண்பர்களும் , ஐஐடி வளாகத்தில் ஆர்வத்துடன் விவாதித்திருந்த தொழில் முனைவுக் கனவை மீண்டும் பரிசீலித்தனர். அதே ஆர்வத்தோடு இந்திய கோழிப்பண்ணை சூழல் தொடர்பாக ஆய்வு செய்த போது, உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இடைவெளி இருப்பதைக் கவனித்தனர்.
“அப்போது 70 சதவீத உற்பத்தி நாட்டின் தென் பகுதியில் அமைந்திருந்தது மற்றும் 65 சதவீத பயன்பாடு வட இந்தியாவில் அமைந்திருந்தது,“ என்கிறார் அபிஷேக் நேகி.
மேலும், குறைந்த புரத குறியீடு, சுகாதாரமற்ற முறையில் முட்டை உற்பத்தி, அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் இல்லாதது ஆகிய பிரச்சனைகளும் இருந்தன. இந்தக் காரணங்களை பரிசீலித்த நண்பர்கள், 2017ல் முட்டை உற்பத்தித் துறையில் நுழைய தீர்மானித்து ‘எக்கோஸ்’ (Eggoz) நிறுவனத்தை துவக்கினர். ஒராண்டு கால ஆய்வுக்குப்பிறகு, 2018ல் நிறுவனர்கள் பீகாரில் கோழிப்பண்ணை அமைத்தனர்.
தனிப்பட்ட சேமிப்பில் இருந்து பணத்தைத் திரட்டியதோடு, Tracxn Labs மற்றும் நரேந்தர் சங்கர், சுனில் மிஸ்ரா உள்ளிட்ட சில ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து விதை நிதி திரட்டினர். இன்று இந்நிறுவனம், பழுப்பு, வெள்ளை, நுயூட்ரா முட்டைகளை உற்பத்தி செய்து விற்கிறது. ’
இந்த முட்டைகளின் விலை, 330 கிராம் ரூ.75 ல் துவங்கி 1.65 கிலோவுக்கு ரூ.400 வரையாக அமைகிறது. கடந்த நிதியாண்டில் ரூ.7.6 கோடி மற்றும் இந்த நிதியாண்டில் ரூ.12 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
தொழில்நுட்பம்
இந்தியாவில் உள்ள 58 சதவீதம் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விவசாயம் நாட்டில் வேலைவாய்ப்புக்கு அதிகம் பங்களிக்கும் துறையாக இருக்கிறது. இருப்பினும், பாரம்பரிய அணுகுமுறை மற்றும் புதுமையாக்கம் இல்லாதது, வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.
இந்தச் சூழலில் தான், எக்கோஸ், நிஞ்சாகார்ட், பைஜாக் (Bijak) மற்றும் சாமுனாட்டி (Samunnati) போன்ற நிறுவனங்கள் தொழில்நுட்பத்தால் வளர்ச்சிக்கு உதவி வருகின்றன. எக்கோஸ் நிறுவனத்தைப்பொருத்தவரை, தொழில்நுட்பப் பயன்பாடு என்பது அதன் தொழிலின் மையமாக உள்ளது.
“துவக்கத்தில் இருந்து குறைந்த சொத்து மாதிரியை உருவாக்க விரும்பினோம். வேண்டிய தரம் கிடைக்க, விவசாயிகள் முனையில் எல்லாவற்றையும் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்திருந்தோம்,” என்கிறார் அபிஷேக்.
நிறுவனம் விவசாயிகள் பயன்பாட்டிற்காக உருவாக்கியுள்ள பிராந்திய மொழி செயலி, விவசாயிகள் தரவுகளை பதிவு செய்ய உதவுவதோடு, விவசாயிகள் கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொண்டு வழிகாட்டுதல் பெற வழி செய்கிறது.
நிறுவனம் பண்ணைகளில் ஐ.ஓ.டி சாதனங்களை நிறுவி பல்வேறு காரணிகளை கவனித்து வருகிறது.
“தரமான உள்ளீடுகள் தேவை எனில், சுற்றுப்புறச்சூழல் காரணிகளை நிகழ் நேரத்தில் கவனிப்பது அவசியம் என்கிறார் அபிஷேக். நிறுவனம் விவசாயிகள் வருமானத்தை 50 சதவீதம் அதிகரிக்கச்செய்து இருப்பதாகவும் கூறுகிறார்.
முட்டைகள் தயாரானதும், அவை யூவி கதிர்களால் சுத்தமாக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. லாஜிஸ்டிக்ஸ் கண்காணிப்பு சாப்ட்வேர் மூலம் ஒவ்வொரு கட்டத்திலும் முட்டையின் நிலையை பின் தொடர முடிகிறது.
இன்று, நிறுவனம் மாதந்தோறும் 3,000 மையங்கள் மூலம் 40 லட்சம் முட்டைகள் விற்பனை செய்கிறது.
சவால்கள்
இத்தகைய சிக்கலான அமைப்பை உருவாக்குவது நிறுவனத்திற்கு எளிதாக இருக்கவில்லை என்கிறார் அபிஷேக். பரிட்சியம் இல்லாத பகுதியில் நுழைவது பெரிய சவால் என்கிறார்.
நாங்கள் அனைவரும் பீகாருக்கு சென்று அங்கிருந்து செயல்படத்துவங்கினோம் என்கிறார்.
சிறிய நிறுவனத்திற்கு விற்பனை செய்யுமாறு விவசாயிகளை ஒப்புக்கொள்ளச் செய்வதில் துவங்கி சந்தையில் முட்டைகளை விற்பது வரை எல்லாவற்றிலும் நிறுவனர்கள் தீவிரமாக செயல்பட்டனர்.
இதனிடையே 2020ல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட போது நிறுவனர்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் பயந்துவிட்டனர். வைரஸ் பரவும் செய்தி வேறு பாதிப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், விவசாயிகளுடன் இணைந்து நின்றதன் மூலம் இந்த நெருக்கடியை சமாளித்தனர்.
கொரோனா சூழலில் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டது.
வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் முறையை பின்பற்றியது.
அலகாபாத், மத்திய பிரதேசம், தில்லி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் நிறுவனம், தேசிய அளவிலான இருப்பை பெற திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ரூ.22 கோடி வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது.
ஆங்கிலத்தில்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்