ரசாயங்களற்ற உணவுக் காடுகளை விவசாயிகள் உருவாக்க உதவும் ஐஐடி, ஐஐஎம் முன்னாள் மாணவர்!
சந்தீப் சக்சேனா மத்தியப்பிரதேசம் முழுவதும் பல்வேறு உணவுக்காடுகளை உருவாக்கி விவசாயிகள் ரசாயனங்களின்றி பயிர்களை வளர்க்க உதவுகிறார்.
காடுகள் மறைந்து வருவதாலும் பருவநிலை மாற்றம் காரணமாகவும் இந்தியாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் விவசாயம் செய்வதற்கான நிலம் மிகவும் குறைந்துள்ளது.
விளைச்சலை அதிகரிக்கச் செய்ய விவசாயிகள் ரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மண்ணின் தன்மை பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் அந்தப் பகுதியில் விவசாயம் செய்யப்படும்போது பாதிப்பு ஏற்படும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
சந்தீப் சக்சேனா ஐஐடி கான்பூரில் கெமிக்கல் பொறியியல் பட்டதாரி. ஐஐஎம் லக்னோ முன்னாள் மாணவர். இயற்கை வளம் இவ்வாறு அழிக்கப்படுவதைக் கண்ட இவர், தனது பணியை விட்டு விலகி இதற்கான தீர்வு காண முற்பட்டார். அவர் கூறுகையில்,
”எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. இந்திய பொருளாதாரம் எப்போதும் விவசாயத்தை சார்ந்துள்ளது. எனவே இதற்குத் தீர்வுகாண விரும்பினேன்,” என சந்தீப் குறிப்பிட்டதாக Efforts for Good குறிப்பிடுகிறது.
சந்தீப் 2,500 ஏக்கர் தரிசு நிலத்தில் உணவுக்காடு அமைக்க 2007-ம் ஆண்டு ’அரண்யானி’ என்கிற நிறுவனத்தை மத்தியப்பிரதேசத்தில் நிறுவினார். அத்துடன் 4,000 ஏக்கர் நிலப்பரப்பில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் சொந்தமாக உணவுக்காடு அமைக்கவும் இந்நிறுவனம் உதவியுள்ளது. சக்சேனா உணவுக்காடு குறித்து Efforts for Good உடன் பகிர்ந்துகொள்கையில்,
நாங்கள் முறையான காடு போன்ற அமைப்பை உருவாக்குகிறோம். சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்காதவாறு இதன் கணிசமான பகுதி மனித பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
உணவுக்காடு உருவாக்குதல்
பயிர் சாகுபடியின்போது மண்ணை உழவேண்டிய அவசியம் இருக்காது. மாறாக நிலத்தில் விதைப்பந்து வீசப்படுகிறது. இது மண்ணின் நைட்ரஜன் சுழற்சியையும் அதன் வளத்தையும் பராமரிக்க உதவுகிறது.
தேர்வு செய்யப்பட்ட நிலத்தின் மையப்பகுதியில் முதலில் ஆலமரம் மற்றும் அரச மரங்கள் நடப்படுகிறது. இது இயற்கை உற்பத்தி அதிகரிக்க உதவும். அதன் பிறகு மையப்பகுதியைச் சுற்றி பழங்களைத் தரும் மரங்கள் நடப்படுகிறது. அதன் நடுவே காய்கறி செடிகளும் வளர்க்கப்படுகிறது.
பின்னர் அதிக உயரமாக வளர்ந்து மற்ற செடிகளுக்கு இடையூறாக இருக்காது என்பதால் எலுமிச்சை, குருதிநெல்லி போன்ற சிறு செடிகள் திறந்த வெளியில் நடப்படுகிறது. இறுதியாக வெளிப்புறத்தில் பயறு வகைகள் விதைக்கப்படுகிறது.
உணவுக்காட்டில் ரசாயனங்களும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவதை சக்சேனா தவிர்த்துவிடுகிறார். அனைத்துமே இயற்கையான சுற்றுச்சூழலில் வளர்க்கப்படுகிறது என்றார்.
இந்தக் காடுகளில் வளரும் காய்கறிகளும் பழங்களும் உள்ளூர்களுக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனுப்பிவைக்கப்படுகிறது.
சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏற்படுத்தும் தாக்கம்
Village Square உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,
இந்த மரங்கள் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே வறட்சையை சமாளிக்க உதவும். அதிக வெப்பம் அல்லது குளிர் காலத்தில் வேப்பமரம், மல்பெரி போன்ற மரங்கள் வெப்பநிலை நடுத்தரமாக இருப்பதை உறுதி செய்கிறது.
உணவுக்காடு மண்ணை உறுதியாக்குவதுடன் சிறு துவாரங்களுள்ள காட்டு மணலில் தண்ணீர் ஊறியிருப்பதால் வெள்ளத்தையும் தவிர்க்கிறது.
சக்சேனா 2007-ம் ஆண்டு முதல் இயற்கையான சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு காட்டையும் உருவாக்க நான்கு முதல் ஏழாண்டுகள் ஆனதாக அவர் தெரிவிக்கிறார். தற்போது இதில் 175 வகைகள் உள்ளது. இது மக்களிடையே ஆர்கானிக் போக்கை உருவாக்க உதவியதுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் வருவாயையும் பெருக்கியுள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA