2024ல் 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க இலக்கு - ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி!
2024ல் 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க இலக்கு நிர்யணம் -ஐஐடி மெட்ராஸ்!
2024ம் ஆண்டு 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஐஐடி மெட்ராஸ் அறிவித்துள்ளது.
ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் செல் (IIT-Madras Incubation Cell (IITMIC)) என்பது புதுமை மற்றும் தொழில் முனைவோர் திட்டங்களை வளர்ப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் இன்ஸ்டிட்யூட்டால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பானது கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவுத் திட்டங்களை வளர்த்தெடுத்தல், ஆதரவு அளித்தல், மேற்பார்வையிடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.
2023ம் ஆண்டில் வெளி முதலீட்டாளர்களிடமிருந்து கடைசியாக திரட்டப்பட்ட முதலீட்டின் அடிப்படையில் ரூ.45,000 கோடி ($5.4 பில்லியன்) மதிப்பீட்டில் 351 டீப் டெக் ஸ்டார்ட்அப்களின் போர்ட்ஃபோலியோ இந்த நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ளது.

100 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்:
தற்போது 2024ம் ஆண்டின் இலக்குகள் குறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி அறிவித்துள்ளார். 2023ம் ஆண்டு ஐஐடி மெட்ராஸ் அதன் இலக்குகளை அடைய முடிந்ததாகவும், கடந்த ஆண்டில் ஐஐடி சான்சிபார் வளாகம் உள்ளிட்ட முக்கிய திட்ட பணிகளை மேற்கொண்டதையும் எடுத்துரைத்தார்.
மேலும், வெளிநாட்டில் முதன் முறையாக நிறுவப்பட்டுள்ள ஐஐடி-யின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு அம்சங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும், பல்துறை அறிவியலைக் கற்பிக்க புதிய பள்ளி ஒன்றையும் தொடங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.
2024-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 100 ஸ்டார்ட் அப்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
“366 காப்புரிமைகளுடன் நடப்பு நிதியாண்டை முடிக்கவிருக்கிறோம். நாளொன்றுக்கு ஒரு காப்புரிமை வீதம் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். ஐஐடி மெட்ராஸ்-ல் ஏராளமான புத்தாக்கங்களை செய்வது பெருமை அளிக்கும் விஷயமாகும். 2024ல் 100 ஸ்டார்ட்-அப்’களைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். ஐஐடி மெட்ராஸ் மூலம் தொழில் ஊக்குவிப்பு செய்யப்பட்ட ஹைப்பர்லூப் ஸ்டார்ட்அப், இபிளேன், அக்னிகுல் காஸ்மோஸ், மைன்ட்குரோவ் டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் சுவாரஸ்யமான பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். இந்த ஸ்டார்ட்அப்கள் மிகப்பெரிய அளவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகளை அளிக்கும்,” என்றார்.
ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி
2023ம் ஆண்டு அடைந்த வளர்ச்சிகள்:
1. ஐஐடி மெட்ராஸ் முதல் முறையாக வெளிநாட்டில் வளாகத்தை தொடங்கியுள்ளது. சான்சிபார் வளாகத்தில் முதற்கட்டமாக பிஎஸ், எம்டெக் ஆகிய பாடத்திட்டங்களையும், வரும் ஆண்டில் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு சேர்க்கவுள்ளது.
2. இன்டர் டிசிப்ளினரி சயின்ஸ் தொடர்பான புதிய பள்ளியை தொடங்குவதை ஐஐடி மெட்ராஸ் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது, இது வருங்காலத்தில் 18வது துறையாக நிறுவப்படும்.
3. ஐஐடி மெட்ராஸ் மே 2023-ல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைத் தொடங்கியது. இது நான்காண்டு பிஎஸ் மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டங்களைக் கொண்டதாகும். இந்தியாவிலேயே இதுபோன்ற பாடத்திட்டம் தொடங்கப்படுவது இதுவே முதன்றையாகும்.
4.2023 ஆம் ஆண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில், ஐஐடி-மெட்ராஸ் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதற்கான கொள்கைகளை அடையாளம் காண, ஜனவரி மாதம் அதன் ஆராய்ச்சி பூங்காவில் 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற ஜி20 கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
5. அக்டோபர் 2023 இல், ஐஐடி-மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சஸ்டைனபிலிட்டியை அறிமுகப்படுத்தியது, இது நிலைத்தன்மை குறித்த புதிய, இடைநிலை படிப்புகளை கற்பிக்கும் மற்றும் நிகழ்வுகளை நடத்துவதற்கும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துவதற்கும் ஒரு தளத்தை வழங்கும்.
6. மார்ச் மாதம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உட்பொதிக்கப்பட்ட உற்பத்தித் துறையில் திறமையான பட்டதாரிகளுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மின்னணு அமைப்புகளில் நான்கு ஆண்டு ஆன்லைன் இளங்கலை அறிவியல் (BS) தொடங்கப்பட்டது.
7. இந்தியாவில் கல்வியாளர்களிடமிருந்து மிகப்பெரிய தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்களில் ஒன்றில், பல நிறுவனக் குழுவால் உருவாக்கப்பட்ட 5G RAN (ரேடியோ அணுகல் நெட்வொர்க்) தொழில்நுட்பம், தொழில் கூட்டாளியான தேஜாஸ் நெட்வொர்க்கிற்கு (டாடா குழுமம்) 12 கோடி ரூபாய்க்கு உரிமம் பெற்றது.
8. வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான்-3 உருவாக்கத்தில் 12 ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள்- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களில் 12 பேர் இடம்பெற்றனர்.