கொரோனா, லாக்டவுன், வொர்க் ஃப்ரம் ஹோம்: பெண் தொழில் முனைவோர் ஓராண்டில் சந்தித்தது என்ன?
கொரோனா நெருக்கடியான சூழலால் அனைத்து விதமான தொழில்களும் முடங்கிக் கிடக்கும் நேரத்தில் பெண் தொழில்முனைவோர் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு தொழில் வளர்ச்சியிலும் முழு கவனம் செலுத்தியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று உலகம் முழுவதும் அதிகரிப்பது கொரோனா பரவல் மட்டுமல்ல. பெண்களின் வேலைப்பளுவும்தான்.
Work from home, Study from home, Shop from home, Consulation from home என கொரோனா பெருந்தொற்று சூழலானது வீட்டில் இருந்தபடியே அனைத்து பணிகளை மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.
அனைத்தும் ஹோமில் நடந்தால் பெண்களின் கதி என்னவாகும் என்பதை விவரிக்கவும் வேண்டுமா என்ன?
ஏற்கெனவே ஃபேன்சி டிரெஸ் போட்டி போன்று பல ரூபங்களை எடுத்து வந்த பெண்கள் கூடுதல் ரோல்கள் எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறார். குழந்தைகள் வீட்டிலிருந்தபடியே படிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்கவேண்டும். கணவருக்கு மீட்டிங் நடக்கும்போது குழந்தைகள் அவரை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி அவரவர் முக்கிய வேலை தடைபடாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய கூடுதல் பொறுப்பையும் பெண்கள் சுமக்கவேண்டியுள்ளது.
ஏற்கெனவே நெருக்கடியான சூழலால் அனைத்து விதமான தொழில்களும் முடங்கிக் கிடக்கும் நேரத்தில், பெண் தொழில்முனைவோர் இத்தகைய இக்கட்டான சூழலிலும் தங்கள் தொழில் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தியாகவேண்டியுள்ளது.
அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் ஒருபக்கம் சமையல், இன்னொரு பக்கம் குழந்தைகளை நாள் முழுவதும் கவனித்துக்கொள்வது, மற்றுமொருபுறம் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்துவது என அதிகப்படியான வேலையால் அழுத்தத்தை சந்திக்கிறார்கள்.
கொரோனா பெருந்தொற்று பரவல், அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, பலதரப்பட்ட கட்டுப்பாடுகள் என பெண் தொழில்முனைவோர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக யுவர்ஸ்டோரி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கூடுதல் வேலைகள் – தொழில்முனைவோரின் கருத்துக்கள்
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் வீட்டிலிருந்து பணிபுரிவதில் சந்திக்கும் சிக்கல்களை விவரிக்கிறார் கவிதா என்கிற தொழில்முனைவர்.
“எல்லோரும் நேரத்திற்கு சாப்பிடவேண்டும். கணவரின் அலுவலக வேலைகளில் எந்த தொந்தரவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். குழந்தைகள் ஆன்லைனில் படிக்க உதவவேண்டும். இதுதவிர மற்ற நேரங்களில் அவர்களை பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி அனைத்து பொறுப்பும் பெண்களின் மேல் விழுகிறது. இதற்கு நடுவே என் வணிகத்தை நடத்துவது சவாலாக இருக்கிறது,” என்கிறார்.
AspireForHer நிறுவனர் மதுரா தாஸ்குப்தா கூறும்போது,
”பெருந்தொற்று பரவத் தொடங்கிய புதிதில் இந்தத் தொற்றுப் பரவல் ஓராண்டிற்கும் மேல் தொடரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. குறுகிய காலத்திற்கு வீட்டையும் வேலையையும் எப்படியோ சமன்படுத்திவிடலாம் என்றாலும் ஓராண்டிற்கும் மேலாக தொடர்வது பெண் தொழில்முனைவோர், சிஎக்ஸ்ஓ, நிர்வாகிகள் போன்றோருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,” என்கிறார்.
”பெரும்பாலும் குடும்பத்தையும் ஒரு நிறுவனத்தையும் ஒருசேர சமாளிப்பது பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். அதிர்ஷ்ட்டவசமாக ஊரடங்கு சமயத்தில் என் கணவர் உதவினார். நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் பலர் வீட்டில் இருந்து வேலை செய்வதில் பல சிரமங்களை சந்தித்தார்கள். அவர்களுக்கு பல வகைகளில் உதவினோம்,” என்கிறார் mCaffine இணை நிறுவனர் மற்றும் பிராண்ட் மார்க்கெட்டிங் தலைவர் வைஷாலி குப்தா.
அவர் மேலும் கூறும்போது,
“வீட்டில் இருந்து வேலை செய்ததால் என் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவும் தனிப்பட்ட வகையில் என் மீது அக்கறை செலுத்தவும் என்னால் நேரம் ஒதுக்கமுடிந்தது. புதிய பழக்கங்களையும் பின்பற்றவும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது,” என்று நல்ல அம்சங்களையும் சுட்டிக் காட்ட அவர் தவறவில்லை.
உலகளாவிய பிரச்சனை
பெண் தொழில்முனைவோர் சந்திக்கும் பிரச்சனை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நிலவும் சிக்கல் அல்ல. இது உலகளவில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை என்கிறார் தொழில்நுட்பப் பிரிவில் செயல்படும் சிலிக்கான் வேலி தொழில்முனைவர் நம்ரதா கனத்ரா.
”பெருந்தொற்று சமயத்தில் அமெரிக்காவில் வேலையை ராஜினாமா செய்த 100 சதவீதம் பேர் பெண்கள்,” என்கிறார் Sturish நிறுவனர் மற்றும் சிஇஓ நம்ரதா.
குழந்தைகள் வீட்டில் இருப்பதால் கணவரோ அல்லது மனைவியோ வேலையை விட்டு விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. துரதிர்ஷ்ட்டவசமாக பெரும்பாலும் பெண்களே வேலையை ராஜினாமா செய்துள்ளார்கள்.
வணிகத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிறுவனர்கள் பலர் தங்கள் வணிக செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டுள்ளனர். பலர் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு பின்னர் வணிகத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பெண்கள் தலைமையில் செயல்படும் பல ஸ்டார்ட் அப்கள் தங்களை தக்கவைத்துக்கொள்வதற்காகவே வணிக மாதிரியை மாற்றியமைத்துக்கொண்டுள்ளன.
பெண் தொழில்முனைவோரின் வணிகங்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய் கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக AspireForHer அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கோவிட்-19 சூழலால் 73 சதவீத பெண் தொழில்முனைவோர் எதிர்மறை பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.
குடும்பத்தையும் வேலையையும் சமன்படுத்துவதில் பெண் தொழில்முனைவோர் ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பது மட்டுமல்லாது இவர்களது ஸ்டார்ட் அப் முயற்சிகளுக்கு நிதி கிடைப்பதும் கணிசமான அளவு குறைந்துள்ளது.
“நிதி திரட்டுவது தொழில்முனைவோர் அனைவருக்குமே சவாலானதுதான். குறிப்பாக பெண் தொழில்முனைவோர் இதில் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா சூழலானது பெண் தொழில்முனைவோர் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது,” என்கிறார் நம்ரதா.
சிக்கலான சூழலையும் சாதகமாக மாற்றிக்கொண்டார்கள்
ஏற்கெனவே வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல் ரீதியாக மேற்கொண்டு வரும் நிறுவனங்கள் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடியான சூழலில் இருந்து ஓரளவிற்கு விரைவாகவே மீண்டுள்ளது எனலாம்.
கொரோனா பெருந்தொற்று தொழில்களை வெகுவாக பாதித்திருந்தாலும் சூழலுக்கேற்றவாறு வணிக மாதிரியை மாற்றியமைத்து விரைவில் மீண்டெழுவோம் என பல தொழில்முனைவோர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
“நாங்கள் ஆரம்பத்திலிருந்தே குறைந்த செலவில் வணிகத்தை நிர்வகித்து வருகிறோம். அலுவலக செயல்பாடுகளுக்கென பிரத்யேகமாக இடத்தை வாடகைக்கு எடுக்காமல் ஷாப்பிஃபை சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டோம். இந்தத் தீர்மானங்கள் பெருந்தொற்று சமயத்தில் உதவியது. தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் மன அழுத்தம் இருக்கும் என்றாலும் வசதியான நேரத்தில் வேலை செய்யமுடிவதுடன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்த முடிகிறது,” என்கிறார் THERE இணை நிறுவனர் காயத்ரி மல்லிகா பன்சால்.
நாகாலாந்தைச் சேர்ந்த வெகுவோலோ டோசோ. நெசவு வேலை செய்கிறார். இவர் டேபிள் விரிப்பு, குஷன் போன்றவற்றைத் தயாரித்து சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறார்.
”ஊரடங்கு சமயத்தில் பல நெசவாளர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள். நான் டிஜிட்டல் முறையில் விற்பனை செய்ய தெரிந்துகொண்டேன். அதனால் பலர் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய உதவுமாறு என்னை அணுகினார்கள். கொரோனா சமயத்திலும் அதிகம் விற்பனை செய்துள்ளோம். ஜெர்மனி, கனடா, யூகே போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் எங்கள் தயாரிப்புகளை விரும்பி வாங்குகிறார்கள். பெருந்தொற்று எங்களுக்கு மறைமுகமாக வாய்ப்பாகவே அமைந்துள்ளது,” என்கிறார்.
தொழில்முனைவு பயணத்தில் வெற்றி பெற்று வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் எத்தனையோ தொழில்முனைவோர் தாங்கள் சந்தித்த பிரச்சனைகளை பொதுவெளியில் பகிர்ந்துகொள்கிறார்கள். இவர்களது அனுபவம் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு பாடமாக அமைந்துவிடுகிறது. இதன் அடிப்படையில் ஓரளவிற்கு முன்னேற்பாடுகளுடன் பலர் இவர்களது பாதைகளை பின்பற்றுகிறார்கள்.
ஆனால் கொரோனா பெருந்தொற்று போன்ற எதிர்பாராத நெருக்கடிகளையும் நாம் சமாளித்தாக வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் பலதரப்பட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய பெண்கள் இதுபோன்ற நெருக்கடிகளைக் கண்டு அஞ்சிவிடுவார்களா என்ன?
நம் உடல் நோயை சிறப்பாக எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்தப்படுவது போல் பெண் தொழில்முனைவோர் தங்கள் மனதில் தன்னம்பிக்கையை அதிக டோஸ்களில் செலுத்திக்கொண்டு நெருக்கடியான சூழலை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா