'VakilSearch' நிறுவனத்தில் இன்கார்ப் இந்தியா 10 மில்லியன் டாலர் முதலீடு!
வரி மற்றும் சட்டம் தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கி வரும் தொழில்நுட்ப மேடையான வக்கீல்சர்ச் நிறுவனத்தில் 10 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக இன்கார்ப் அறிவித்துள்ளது.
சிறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வரி மற்றும் சட்டம் தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கி வரும் தொழில்நுட்ப மேடையான 'வக்கீல்சர்ச்' (Vakilsearch) நிறுவனத்தில் 10 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக இன்கார்ப் அறிவித்துள்ளது.
இன்கார்ப் இந்தியாவுடனான இந்த பரிவர்த்தனை மூலம், வக்கீல்சர்ச், தொழில்நுட்ப மற்றும் சேவை வளர்ச்சி மற்றும், விற்பனை, ஊழியர் விரிவாக்கத்தில் கவனம் செலுத்த உள்ளது. மேலும், கலாரி கேபிடல் நிறுவனம் இந்த பரிவர்த்தனை மூலம் வெளியேறியுள்ளது.
இந்தியாவின் முன்னணி சட்டம் சார்ந்த தேவைகளை நிறைவேற்ற உதவும் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான வக்கீல்சர்ச், நிறுவனம் அமைத்தல், அரசு பதிவு கார்ப்பரேட் மற்றும் வரி தாக்கல், டிரேட்மார்க், தணிக்கை உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
வக்கீல்சர்ச் இதுவரை, 80,000க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்களுக்கு சேவை அளித்துள்ளது. பெருந்தொற்று காலத்தில் மட்டும் 30,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவை அளித்துள்ளது. 10,000 புதிய நிறுவனங்கள் அமைக்கப்பட மற்றும் 8,000 டிரேட்மார்க் பதிவுகளுக்கு உதவியுள்ளது.
இதன் வளர்ச்சியின் ஒருபகுதியாக, இதன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மேடை டிசம்பர் மாதம் அறிமுகம் ஆக உள்ள நிலையில், நிறுவனம் தற்போது வாடிக்கையாளர் சார்ந்த ஆலோசனை சேவைக்கு மாற உள்ளது. செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை அளிக்க உள்ளது.
முன்னதாக 2015ல், கலாரி கேபிடல் இந்த நிறுவனத்தின் 2 மில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தது. மேலும் Udaan இணை நிறுவனரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையையும் முதலீடாக பெற்றது
“எங்கள் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த இன்கார்ப் இந்தியாவுடனான கூட்டு நல்ல வாய்ப்பாக அமைகிறது. இன்கார்ப் நிறுவனமும், புதுமையாக்கம் மூலம் தரம் மற்றும் நம்பகத்தன்மையை முன்னிறுத்துகிறது. வரும் ஆண்டுகளில் எங்கள் வாடிக்கையாளர்கள் அருமையான அனுபவத்தை எதிர்பார்க்கலாம்,” என்று வக்கீல்சர்ச் நிறுவனர் ரிஷிகேஷ் ததார் கூறியுள்ளார்.
இந்த முதலீடு இந்தியாவில் வர்த்தகத்தை விரிவாக்க உதவும் என்று இன்கார்ப் இந்தியா சி.இ.ஓ மனிஷ் மோடி கூறியுள்ளார்.
“இந்த முதலீடு மூலம், வக்கீக்சர்ச் ஆற்றலை பயன்படுத்திக்கொண்டு, எங்கள் செய்ற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும். இன்கார்ப் இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் சர்வதேச செயல்பாடுகள் மூலம் வக்கீல்சர்ச் தனது சேவைகளை மேலும் ஆழமாக்கிக் கொள்ளும்,” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், வர்த்தகங்களுக்கு டிஜிட்டல் முறையில் சேவை அளிக்கும் வகையில் தனது சேவைகளை இன்கார்ப் நிறுவனம் விரிவாக்கம் செய்து வரும் நிலையில், வக்கீல்சர்ச் நிறுவனம் உடனான கூட்டு, இந்த பரப்பை நாங்கள் அணுகும் விதத்தின் மையமாக அமையும்.
தரவுகள் சார்ந்த உள்ளொளி, மற்றும் அனல்டிக்ஸ் எங்கள் மைய கொள்கையாக இருக்கும் நிலையில் வக்கீல்சர்ச் மேடை, எதிர்காலத்திற்கான சட்டம் சார்ந்த தேவைகளை நிறைவேற்றும் அடிப்படை அம்சங்களை உருவாக்க உதவும்” என்று இன்கார்ப் இந்தியா கையகப்படுத்தல் தலைவர் இந்திரபிரீத் சத்தா கூறியுள்ளார்.
தொகுப்பு: சைபர் சிம்மன்