இந்த ஆண்டின் 34வது இந்திய யூனிகார்ன்: $255 மில்லியன் நிதி திரட்டிய Acko!
புதிய திட்டங்களில் கவனம் செலுத்தபோவதாக அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள ஒரு தனியார் துறை பொது காப்பீட்டு நிறுவனம் Acko. நவம்பர் 2016ல் நிறுவப்பட்ட 'அக்கோ', செப்டம்பர் 2017ல் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து உரிமத்தைப் பெற்றது.
சமீபத்தில் 1.1 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் $255 மில்லியன் அளவுக்கு நிதி திரட்டிய Acko தற்போது யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிறுவனமாக வளர்ந்துள்ளது.
சமீபத்தில் கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியம் மற்றும் Lightspeed Growth ஆகிய நிறுவனங்களுடன் Intact Ventures மற்றும் Munich Re Ventures ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டலில் ஈடுபட்டது. கிடைத்துள்ள இந்த நிதியில் 80 சதவீதத்தை கேஜெட்டுகள், ட்ராவல் இன்சூரன்ஸ் போன்ற மைக்ரோ-இன்சூரன்ஸ் திட்டங்களைதவிர, கார் இன்சூரன்ஸை அதிகரிக்கும் திட்டங்களிலும் கவனம் செலுத்தப் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளன.
மீதமுள்ள 20 சதவீத நிதியை சுகாதார காப்பீடு திட்டங்களை வளர்ப்பதில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இதனிடையே, தொடர்ந்து நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக வரும் மாதங்களில் ’அக்கோ’ மற்றொரு நிதி திரட்டலில் ஈடுபடும் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி வருண் துவா என்பவர் ஒருபேட்டியில் குறிப்பிட்டுளளார்.
இது தொடர்பாக பேசிய அவர்,
“எங்கள் நிதி சேகரிப்பில் கிட்டத்தட்ட 100-150 மில்லியன் டாலர்கள் நாங்கள் சமீபத்தில் தொடங்கப்பட்ட உடல்நலக் காப்பீட்டு சலுகைகளுக்கு செலவிடப்படும். இன்சூரன்ஸ் எடுக்க விரும்பும் பயனர்களுக்கு Acko பாதுகாப்பு இடமாக மாறுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம்," என்றுள்ளார்.
இதனிடையே, அமேசான் இந்தியா, ஆக்செல், எலிவேஷன், அசென்ட் கேபிடல் மற்றும் ஃபிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் ஆகியோர் அக்கோவின் முக்கிய முதலீட்டாளர்களாக உள்ளனர்.
இந்தியாவின் வளர்ந்து வரும் யூனிகார்ன்களின் பட்டியலில் இந்த ஆண்டு நுழைந்த 34வது உள்நாட்டு நிறுவனமாக அக்கோ உள்ளது. தற்போதைய நிலையின்படி $1 பில்லியன் அல்லது அதற்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு தனியார் நிறுவனமாக அக்கோ உயர்ந்துள்ளது.
Acko-வின் வாகன இன்சூரன்ஸ் தற்போது 2 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் நிறுவனம் ₹1,200 கோடி ($160 மில்லியன்) மதிப்புள்ள மொத்த பிரீமியம் இன்சூரன்ஸ் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
ஆங்கிலத்தில்: திம்மையா | தமிழில்: மலையரசு