62 ஆண்டுகளுக்கு முன் மைசூரு மகாராஜா தொடங்கிய 'அழியா மை' தயாரிக்கும் நிறுவனம் பற்றி தெரியுமா?
தேர்தலில் வாக்களித்தபின், கை விரலில் வைக்கப்படும் அழியாத மை, மைசூர் மஹாராஜாவின் நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்படத் தொடங்கிய வரலாறு தெரியுமா?
நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஏழு கட்டமாக நடைபெற்று வரும், இந்தத் தேர்தலில் மக்கள் ஆர்வமாக தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருவதோடு, அதனை சமூகவலைதளப் பக்கங்களிலும் புகைப்படங்களாகப் பதிவிட்டு வருகின்றனர்.
தாங்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டதை பெருமிதத்துடன் அவர்கள் வெளிப்படுத்துவது, கை விரலில் வைக்கப்படும் மையைக் காட்டித்தான். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு எந்திரம் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு வாக்காளர்களின் கையில் வைக்கப்படும் விரைவில் 'அழியா மை' (indelible ink) முக்கியமானது.
மீண்டும் அந்த வாக்காளர் கள்ள ஓட்டு செலுத்திவிடக் கூடாது என்பதற்காகவும் அல்லது அவர் வாக்கு செலுத்திவிட்டார் என்பதை உறுதிப்படுத்தவும் இந்த மை வைக்கும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட மை எப்படி உருவானது, எங்கே தயாரிக்கப்படுகிறது, யார் உருவாக்கியது என்பதைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை இங்கே பார்க்கலாம்...
மகாராஜாவின் நிறுவனம்
நம் நாடு சுதந்திரம் அடைந்து, நாட்டை ஆள்பவரை மக்களேத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைமுறைக்கு வந்த போது, ஆரம்பத்தில் இப்படி வாக்காளர்களின் கையில் மை ஏதும் வைக்கும் முறை பின்பற்றப்படவில்லை. அப்போது அனைத்து குடிமகன்களிடமும் அடையாள அட்டை இல்லாததால், வாக்கு செலுத்துவதில் நடந்த பல முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், பின்னர் இந்த மை நடைமுறை அமலுக்கு வந்தது.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள எம்பிவிஎல் எனப்படும் மைசூர் பெயிண்ட் அண்ட் வார்னிஷ் லிமிடெட் (Mysore Paints and Varnish Limited) எனும் சிறிய நிறுவனத்திற்குத் தான், இந்த மை-யை உற்பத்தி செய்யும் அனுமதியை மத்திய அரசு வழங்கியது. இந்த நிறுவனம் அப்போதைய மைசூர் மகாராஜாவான நான்காவது கிருஷ்ணராஜ உடையாருக்குச் சொந்தமானது ஆகும்.
மத்திய அரசு கடந்த 1962-ல் இந்த நிறுவனத்துக்கு ‘மை’ தயாரிக்கும் பொறுப்பை வழங்கியது. நேஷனல் பிஸிக்கல் லேபரேட்டரி முறைப்படி, இந்த மை தயாரிக்க வேண்டுமென உத்தரவு வழங்கப்பட்டது.
1962ம் ஆண்டு நடந்த 3-வது மக்களவைத் தேர்தலின் போது, மைசூரில் மட்டுமே முதன்முதலில் வாக்காளர்களின் கையில் மை வைக்கும் உபயோகப்படுத்தப்பட்டது. பின்னர், அது மற்ற மாநிலங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது. அப்போது முதல் இன்று வரை நம் நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலோ அல்லது நாடு முழுவதிலுமோ தேர்தல் நடந்தாலும் இந்த நிறுவனத்தின் ‘மை’ தான் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
சில்வர் நைட்ரேட்
* இந்த அழியா மை சில்வர் நைட்ரேட் என்ற ரசாயனம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கையில் வைக்கும்போது புற ஊதா வெளிச்சம் படும்போது அதன் அடர்த்தி 7 முதல் 25 சதவீதம் மாறுகிறது. அதனாலேயே உடனடியாக மை காய்ந்து, சருமத்தின் செல்களில் கலந்துவிடுகிறது. இதனால்தான் அதை அழிக்க முடியவில்லை.
* அந்த மையானது குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அடர்த்தியான ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த மை முழுவதுமாக அழிய, சுமார் 20 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறது. புதிய செல்கள் மை வைத்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியான பின்னர் மை முற்றிலுமாக மறைகிறது.
மாற்றம்
*கடந்த 2006ம் ஆண்டுக்கு முன்பு வரை விரலில் நகத்தின் அடி பாகத்தில் மட்டுமே இந்த அழியாத மை வைக்கப்பட்டு வந்தது. பின்னர், 1.2.2006 முதல், வாக்காளர்களின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் நகம் முழுவதும் இந்த மை வைக்கப்படும் வழக்கம் தொடங்கியது.
* ஒரு சின்ன குப்பியில் இருக்கும் 5 மி.லி. தேர்தல் மையை 300 வாக்காளர்கள் வரை பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.
கொரோனா லாக்டவுன்
* வாக்களித்ததுக்கு ஆதாரமாக ஒருவரின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். அவருக்கு இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லையென்றால், இடது கையில் உள்ள மற்ற ஏதேனும் ஒரு விரலில் மை வைக்கப்படும். இடது கையில் அனைத்து விரல்களும் இல்லையென்றால் வலது கையின் ஆள்காட்டி விரலிலோ, வேறு ஏதேனும் விரலிலோ மை வைக்கப்படும்.
* ஒரு வேளை இரண்டு கைகளின் விரல்களும் இல்லாமல் இருந்தால் தோளின் இடது அல்லது வலது பக்கத்தில் மை வைக்கப்படும் என்று தேர்தல் விதிமுறைகள் கூறுகின்றன.
* தேர்தல் சமயத்தைத் தாண்டி, கோவிட் தொற்று சமயத்தில் இந்த மை பயன்படுத்தப்பட்டது. தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை அடையாளம் காண சில மாநிலங்களில் இந்த மையைப் பயன்படுத்தினர்.
காப்புரிமை
* 1950ல் இந்த மை-க்கான காப்புரிமையை நேஷனல் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (என்ஆர்டிசி) பெற்றது. அதன் பின்னர், கவுன்சில் ஆஃப் சைன்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் நிறுவனத்தார் (என்பிஎல்) இந்த மையின் தன்மையை அதிகரித்தனர்.
* 1962ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம், மத்திய சட்ட அமைச்சகம், என்பிஎல், என்ஆர்டிசி உள்ளிட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து மைசூர் பெயிண்ட் அண்ட் வாரினிஷ் லிமிடெட் நிறுவனத்திடம் தேர்தலுக்கான அழிக்க முடியாத மை உற்பத்தி செய்துத் தருமாறு ஒப்பந்தம் செய்தது.
* இந்தியாவில் நடைபெறும் மாநில, மத்திய, உள்ளாட்சி தேர்தல்கள் என அனைத்து தேர்தல்களுக்கும் பயன்படுத்தப்படும் மை-யை இந்நிறுவனம்தான் உற்பத்தி செய்து தருகிறது. இது கர்நாடக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும். எம்.எல்.கோயல் என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுதான் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நீல நிற மையை கண்டுபிடித்தது.
ஏற்றுமதி
* 45 வருடங்களாக இந்த நிறுவனத்தால் உருவாக்கப்படும் மையைதான் இந்திய வாக்காளர்களின் விரலில் பூசுகிறார்கள். உள்நாட்டிற்கு மட்டுமின்றி 1976 முதல் சர்வதேச அளவிலும் இந்த மை-யை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
* தாய்லாந்து, சிங்கப்பூர், நைஜீரியா, மலேசியா, தென் ஆஃப்ரிக்கா என 29 நாடுகளில் மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இந்த மை தான், தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.55 கோடி செலவு
இந்த 2024 மக்களவைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்ற ஆர்டர்தான் இதுவரை கிடைத்தவைகளிலேயே மிகப்பெரிய ஆர்டர் என`மைசூரு பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்’ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் கே.முகமது இர்பான் கூறியுள்ளார்.
தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தலில், வாக்களிக்க உள்ள சுமார் 96.50 கோடி வாக்காளர்களுக்கு இந்த மை தான் விரலில் பூசப்படுகிறது. இந்த தேர்தலுக்காக 30 லட்சம் லிட்டர் அழியாத மை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.55 கோடி செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.