பங்குச் சந்தை சரிவுக்குக் காரணம் என்ன ரூ.94,000 கோடி முதலீட்டை வாபஸ் பெற்ற FPI
இது வரலாறு காணாத முதலீட்டு வாபஸ் ஆகும். இதற்கு முன்னர் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இவர்கள் ரூ.61,973 கோடியை வாபஸ் பெற்று வேறு சந்தைகளில் முதலீடு செய்ததும் அப்போது கடும் பின்னடைவை ஏற்படுத்தியது
சீனப்பங்குச் சந்தைகள் லாபம் தருவதாக இருந்ததால் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஃபாரின் போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து ரூ.94,000 கோடி (சுமார் 11.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீட்டைத் திரும்பப் பெற்றது பங்குச்சந்தைக்குக் கடும் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இது வரலாறு காணாத முதலீட்டு வாபஸ் ஆகும். இதற்கு முன்னர், 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இவர்கள் ரூ.61,973 கோடியை வாபஸ் பெற்று வேறு சந்தைகளில் முதலீடு செய்ததும் அப்போது கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. சீனா பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகளை அறிவித்ததையடுத்து சீனப் பங்குச் சந்தைகள் இந்த அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரிந்துள்ளது.
கடந்த ஏப்ரல்-மே மாதங்களிலும் இதே எஃப்.பி.ஐ. முதலீட்டாளர்கள் ரூ.34,452 கோடியை பங்குச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றாலும், ஜூன் மாதம் முதல் தொடர்ந்து சீராக பங்குகளை இந்தியப் பங்குச் சந்தைகளில் வாங்கி முதலீடு செய்தனர்.
ஆனால், அக்டோபரில் அதிகம் முதலீடுகளை வாபஸ் பெற்றனர், தரவுகளின் படி,
ரூ.94,017 கோடியை அவர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இதனையடுத்து, 2024ல் அவர்கள் முதலீடு வெறும் ரூ.6,593 கோடியாக மட்டுமே உள்ளது. இதனையடுத்து, இந்தியப் பங்குச்சந்தையில் முன்னணி வர்த்தகக் குறியீடுகள் உச்சத்திலிருந்து 8% வரை சரிவு கண்டன.
இதே போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் செப்டம்பர் 2024-ல் ரூ.57,724 கோடியை முதலீடும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் என்பவர்கள், தனிநபர்கள், நிறுவனங்கள், மற்றும் ஸ்தாபன முதலீட்டாளர்கள் ஆவார்கள். இவர்கள் பங்குகள், பரஸ்பர நிதியம், எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் ஃபண்ட்ஸ், ஆகிய சந்தைகளில் வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.