1 நாளைக்கு 15000 கடிகாரங்கள் தயாரிக்கும் இந்தியாவின் 2வது பெரிய கடிகார நிறுவனம்!
10 கடிகாரங்கள் விற்கத் தொடங்கி, இன்று இந்நிறுவனம் 650 ஊழியர்களுடன், 65 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. 2022-ம் ஆண்டில் 150 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.
ஜெயேஷ் ஷா மும்பையில் கடிகார விற்பனையில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த வணிகத்தை சிறியளவில் நடத்தி வந்தார். தினமும் 10 கடிகாரங்கள் விற்பனை செய்து வந்தார். ஆனால் சொந்தமாக சுவர் கடிகார பிராண்ட் உருவாக்க விரும்பிய ஜெயேஷ் 1996-ம் ஆண்டு கடிகாரங்களை தயாரிக்க முடிவு செய்தார்.
250 சதுர அடி கொண்ட கடையில் இருந்து செயல்பட்ட இவர் மூலப்பொருட்களை வாங்கி, கடிகாரங்கள் தயாரித்து உள்ளூரில் விற்பனை செய்யத் தொடங்கினார். இவர் தனியாகவே இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இதன் மூலம் கிடைத்த லாபத்தை மீண்டும் வணிகத்தில் முதலீடு செய்தார்.
இப்படித்தான் 'சோனம் க்ளாக்ஸ்’ (Sonam Clocks) பயணம் தொடங்கியது. தற்போது கடிகாரத்தின் முக்கியப் பகுதியான மூவ்மெண்ட் தயாரிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகவும் சுவர் கடிகாரங்கள் தயாரிப்பில் Ajanta Orpat நிறுவனத்தைத் தொடர்ந்து இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் சோனம் க்ளாக்ஸ் விளங்குகிறது.
கடிகாரங்கள் தயாரிப்பு மையம்
ஜெயேஷ் மும்பையில் சிறியளவில் தொடங்கிய பின்னர் இந்தியாவின் கடிகாரங்கள் தயாரிப்பு மையமாக விளங்கும் குஜராத்தின் மோர்பி பகுதிக்குத் தனது வணிகத்தை மாற்றவேண்டும் என்பதை உணர்ந்தார்.
மோர்பி பகுதியில் கடிகார நிறுவனங்களுக்கு அனுபவம் நிறைந்த திறன்மிக்க தொழிலாளர்கள் எளிதாகக் கிடைப்பார்கள். அதேபோல் மூலப்பொருட்கள் கிடைப்பதும் எளிது. இதை அவர் அறிந்திருந்தார்.
“மேலும் மோர்பி மற்றும் முந்த்ரா துறைமுகம் இடையே 200 கி.மீட்டர் தொலைவு மட்டுமே இருப்பதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது எளிது. சாலை மார்க்கமாகவும் மோர்பி சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது,” என்று எஸ்எம்பிஸ்டோரி உடனான பிரத்யேக நேர்காணலில் 52 வயதான ஜெயேஷ் தெரிவித்தார்.
இதன் காரணமாக ஊழியர்களை பணியிலமர்த்து, மூலப்பொருட்கள் பெறுவது போன்ற செயல்முறைகளுக்கான செலவு குறைவாக இருப்பதுடன் லாஜிஸ்டிக்ஸ் செலவும் குறையும் என்கிறார் ஜெயேஷ்.
அதே ஆண்டு தனது கடிகார தயாரிப்பு வணிகத்தை 'ரித்தி எண்டர்பிரைஸ்’ (Riddhi Enterprise) என்கிற பெயரில் மோர்பி பகுதிக்கு மாற்றினார்.
முதலில் 1,000 சதுர அடி கொண்ட இடத்தை வாடகைக்கு எடுத்து ஊழியர்களை ஒருங்கிணைத்தார். நாள் ஒன்றிற்கு 250 கடிகாரங்களை தயாரிக்கத் தொடங்கினார். ஆனால் விரைவில் இந்த செயல்பாடுகள் போதுமான அளவு இல்லை என்பதை உணர்ந்து 1997-ம் ஆண்டு 15,000 சதுர அடி கொண்டு இடத்தை வாங்கினார்.
தொழில்முனைவு முயற்சியில் ஜெயேஷின் கனவு மேலும் பெரியதாக இருந்ததால் அதற்கேற்றவாறு விரிவாக செயல்பட இந்த இடவசதியும் போதுமானதாக இல்லை. 1998ம் ஆண்டு மோர்பி-ராஜ்கோட் நெடுஞ்சாலையில் இரண்டு லட்சம் சதுர அடி கொண்ட தொற்சாலையில் செயல்பட திட்டமிட்டார்.
2001-ம் ஆண்டு 'சோனம் க்ளாக் பிரைவேட் லிமிடெட்’ என்கிற பெயரில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டு பிரபலமானது.
படிப்பினைகள்
தயாரிப்பின் தரம், விலை, உரிய நேரத்தில் டெலிவரி போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே கடிகார தயாரிப்பாளர்களிடையே போட்டி நிலவியது. சோனம் க்ளாக்ஸ் மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களுக்கு சப்ளையர்களை அதிகம் சார்ந்திருந்திருந்ததால் விலையில் ஏற்ற இறக்கங்கள், பொருட்களின் இருப்பு போன்றவற்றில் சிக்கல்களை சந்தித்தது.
“ஆரம்பத்தில் விற்பனையாளர்களுடன் எந்தவித ஒப்பந்தங்களும் போடவில்லை. ஒவ்வொரு ஆர்டராக கொடுக்கப்பட்டு மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இவற்றின் விலை ஏற்றம் காரணமாக தயாரிப்பு செலவும் அதிகரித்தது,” என்றார்.
ஜெயேஷ் இந்தச் சூழலைப் புரிந்துகொண்டார். விற்பனையாளர்களுடன் நீண்ட கால அடிப்படையில் இணைந்திருந்து பரஸ்பரம் லாபமடையும் நிலையை உருவாக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். இதன் மூலம் சோனம் க்ளாக் விநியோகச் சங்கிலி மேம்படும் என்பதையும் செலவுகள் குறையும் என்பதையும் உணர்ந்தார்.
அதன் பிறகு இந்நிறுவனம் தொடர்ந்து திட்ட மதிப்பீடுகள் செய்யத் தொடங்கியது. தயாரிப்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உரிய நேரத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன. அதேபோல் தேவைக்கேற்ப தொழில்நுட்ப மேம்பாடுகளும் செய்யப்பட்டன.
வணிக மாதிரி
2014-ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் சுவர் கடிகார வணிகத்தில் 70 சதவீதம் ஏற்றுமதி பங்களித்தது.
“உலகளவிலான தேவையில் மந்தநிலை ஏற்பட்டபோது உள்நாட்டு சந்தையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினோம். எங்கள் சுவர் கடிகார விற்பனையில் உள்நாட்டு சந்தை 70 சதவீதம் பங்களிக்கும் அளவிற்கு வளர்ச்சி காணப்பட்டது. 30 சதவீத விற்பனை ஏற்றுமதி மூலம் பெறப்பட்டது,” என்றார் ஜெயேஷ்.
இந்தியாவின் ஒட்டுமொத்த சுவர் கடிகாரங்கள் மற்றும் கடிகார மூவ்மெண்ட்ஸ் ஏற்றுமதியில் சோனம் க்ளாக்ஸ் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
2018-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தையில் இந்நிறுவனம் பட்டியலிடப்பட்டு சந்தையில் 10 கோடி ரூபாய் உயர்த்தியது.
“இன்று 650 ஊழியர்கள் உள்ளனர். இதில் 90 முதல் 95 சதவீதம் பேர் பெண்கள். நாள் ஒன்றிற்கு 12,000 முதல் 15,000 சுவர் கடிகாரங்களையும் 50,000 கடிகார மூவ்மெண்ட்களையும் தயாரிக்கிறோம்,” என்றார்.
150-க்கும் அதிகமான விநியோகஸ்தர்களும் 35,000 சில்லறை வர்த்தகர்களும் இருப்பதாகவும் 27-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிறுவனம் 2018-19-ம் ஆண்டில் 65 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. 2022-ம் ஆண்டில் 150 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.
வளர்ச்சியை சாத்தியப்படுத்தும் விதத்தில் தொழில்நுட்ப மாற்றங்கள் முறையாக கணிக்கப்படுகிறது. புதிய மேம்பட்ட தயாரிப்புகளை சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தும் திறன் உள்ளது. இதுவே நீண்டகால அடிப்படையில் சிறப்பாக போட்டியிட உதவுகிறது என்கிறார் ஜெயேஷ்.
“இன்று இந்நிறுவனம் சிறந்த நிலையில் உள்ளபோதும் தொடர்ந்து பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம். சுவர் கடிகார தயாரிப்புத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ரசனையும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். வாடிக்கையாளர்களை இழந்துவிடாமல் அத்தகைய மாற்றங்களைக் கையாளவேண்டும்,” என்றார்.
தயாரிப்பு வகைகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள்
தற்போது சோனம் க்ளாக்ஸ் பல வகையான டேபிள் கடிகாரங்கள் மற்றும் சுவர் கடிகாரங்களை மிகக்குறைந்த விலையில் தொடங்கி ப்ரீமியம் விலை வரையிலும் வழங்குகிறது.
“எங்களது கடிகாரங்கள் 100 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை கிடைக்கிறது. வழக்கமான கடிகாரங்களுடன் எல்ஈடி டிஜிட்டல் கடிகாரங்கள், எல்சிடி கடிகாரங்கள், லைட் சென்சார் கடிகாரங்கள், பெண்டுலம் கடிகாரங்கள், மியூசிக்கல் கடிகாரங்கள், சுழலும் பெண்டுலம் கொண்ட மியூசிக்கல் கடிகாரங்கள், ஸ்வீப் கடிகாரங்கள், அலுவலக கடிகாரங்கள், டிசைனர் கடிகாரங்கள், அலாரம் கடிகாரங்கள், டேபிள் கடிகாரங்கள் என பல்வேறு வகையான கடிகாரங்களை நாங்கள் வழங்குகிறோம்,” என்றார்.
கார்ப்பரேட் கிஃப்ட் வகையில் பிரத்யேக கடிகாரங்களையும் இந்நிறுவனம் வழங்குகிறது.
சோனம் க்ளாக்ஸ் முக்கியமாக டீலர்கள், சில்லறை வர்த்தகர்கள், கார்ப்பரேட்கள், கிஃப்ட் மற்றும் நாவல்டீஸ் ஸ்டோர்ஸ் போன்றோர்களுக்கு விற்பனை செய்கிறது. இவர்களின் மூலமாகவே இறுதி வாடிக்கையாளர்களைச் சென்றடைகிறது. Sonam, Lotus ஆகிய பிராண்ட் பெயர்களின்கீழ் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. சோனம் கடிகார மூவ்மெண்ட், கேஸ் ஆகியவற்றையும் விற்பனை செய்கிறது.
ஜெயேஷ் தற்போது நிறுவனத்தை விரிவுபடுத்தி வருவாயை உயர்த்த திட்டமிட்டு வருகிறார். செயல்பாடுகளை விரிவுபடுத்த அடுத்த சில ஆண்டுகளில் இந்நிறுவனத்தில் 55 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம் மறையும் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
“சில நாட்களுக்கு முன்னரே தயாரிப்புப் பணியை மீண்டும் தொடங்கியுள்ளோம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி வருகிறோம். ஏற்றுமதி ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன. விரைவில் முக்கிய செயல்பாடுகளுடன் முழுவீச்சில் தயாரிப்பைத் தொடருவோம் என்கிற நம்பிக்கை உள்ளது,” என்றார்.
இன்று வாடிக்கையாளர்கள் கடிகாரங்களின் செயல்பாடுகளைக் கடந்து அதிலுள்ள கைவினைத்திறனை பாராட்டுகின்றனர். மேலும் டிஜிட்டல் கடிகாரங்களுக்கான தேவை அதிகரிப்பதால் பாரம்பரிய அனலாக் சுவர்கடிகாரங்களின் விற்பனை குறைந்துள்ளது.
“இன்றைய காலகட்டத்தில் மருத்துவமனைகள், நிறுவனங்கள் போன்ற இடங்களில் டிஜிட்டல் கடிகாரங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. மேலும் ersatz சீன கடிகாரங்கள் குறைந்த தரத்துடன் இருந்தாலும்கூட மலிவு விலையில் கிடைப்பதால் இந்திய நுகர்வோர்கள் ஈர்க்கப்படுகின்றனர்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா