பார்பர் ரமேஷ் பாபு டூ 'ரோல்ஸ்ராய்ஸ்' கார் வைத்திருக்கும் கோடீஸ்வரர்!
"வாழ்க்கையை நீ உன்போக்கில் வாழத் தொடங்கும்போது எல்லாம் மாறும்" என்பார் லியோனார்ட் வில்லோபி.
முடி திருத்துபவராய் இருந்து கோடீஸ்வரனாய் உயர்ந்த ரமேஷ்பாபுவிற்கு இந்த வார்த்தைகள் நன்றாகவே பொருந்தும். தடைகள் தாண்டி சாதனைகள் செய்து சரித்திரம் படைக்கும் நாயகர்களின் கதையை நாம் எத்தனை முறைக் கேட்டாலும் சலிப்பதே இல்லை. நம்மையும் இலக்கை நோக்கி முனைப்போடு முன்னேற வைக்கின்றன இந்த கதைகள்.
1994ல் தன் சேமிப்பை வைத்து ஒரு மாருதி வேன் வாங்கினார் ரமேஷ். 2004ல் ஏழு கார்கள் கொண்ட வாடகை நிறுவனமாக அவரின் உழைப்பு வளர்ந்தது. 2014ல் 200 கார்களை வாடகைக்கு விடும் பிரம்மாண்ட நிறுவனத்தின் முதலாளியாக வளர்ந்து நிற்கிறார் ரமேஷ். அதில் 75 கார்கள் சொகுசு கார்கள்- பி.எம்.டபிள்யூ, ஆடி தொடங்கி அதிசிறப்பு வாய்ந்த ரோல்ஸ்ராய்ஸ் வரை.
ரமேஷின் ஆரம்பகால வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாய் இருந்தது. இன்று உயரங்கள் பல தொட்டிருந்தாலும் மனதளவில் இன்னும் முடி திருத்துபவராகத்தான் இருக்கிறார். தன் தந்தையின் இந்தத் தொழிலை கையில் எடுத்தபோது ரமேஷ் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். இன்றும் இவரின் கைவண்ணத்திற்கு மவுசு இருக்கிறது. இதற்காக நூறு ரூபாய்தான் வசூலிக்கிறார்.
நாடு முழுவதிலுமுள்ள டிவி, பத்திரிக்கைகள் இவரின் கதையை பேசியிருக்கின்றன. இந்த பிரம்மாண்ட வெற்றியும், அவரின் எளிமையான தோற்றமும் இணைந்து அவருக்கு 'மில்லியனர் பார்பர்' என்ற பெயரை வாங்கித் தந்தன. இந்த பெயரைத் தான் Ted Showவில் பேசும்போது அவர் பயன்படுத்தினார். இப்படி நம்பமுடியாத வளர்ச்சியை அடைந்திருக்கும் ரமேஷ்பாபு இதோ தன் கதையை பகிர்ந்துகொள்கிறார் நமக்காக...
கரடுமுரடான தொடக்கம்
ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தந்தை முடி திருத்துபவராக இருந்தார். 1979ல் எனக்கு ஏழு வயது இருக்கும்போது அவர் மரணமடைந்தார். குடும்பச்செலவுகளை சமாளிக்க என் அம்மா அக்கம்பக்க வீடுகளில் வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்தார். என் தந்தை விட்டு சென்ற சலூனை என் மாமா எடுத்து நடத்தத் தொடங்கினார். இதற்காக எங்களுக்கு தினம் ஐந்து ரூபாய் கொடுப்பார். அந்த ஐந்து ரூபாய் எங்கள் செலவுகளை சமாளிக்க போதுமானதாய் இல்லை.
நான், அம்மா, தம்பி, தங்கை எல்லாரும் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உண்டோம். நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது என்னால் முடிந்த சின்ன சின்ன வேலைகள் செய்யத் தொடங்கினேன். பால் போடுவது, பேப்பர் போடுவது என பல வேலைகள் செய்தேன். அப்படியே பத்தாவது முடித்து பி.யூ.சியில் சேர்ந்தேன்.
பொறுமை உடைந்த தருணம்
90களில் நான் பி.யூ.சி படித்துகொண்டிருக்கும்போது என் அம்மாவுக்கும், மாமாவுக்கும் சண்டை மூண்டது. இதனால் அவர் எங்களுக்கு பணம் தருவதை நிறுத்திவிட்டார். நான் அந்த சலூனை நடத்தப்போவதாக என் அம்மாவிடம் சொன்னேன். ஆனால் அவர் நான் படிப்பை தொடரவேண்டும் என்பதில் பிடிவாதமாய் இருந்தார்.
ஆனால் நான் சலூனில் வேலை பார்த்து தொழில் கற்றுக்கொள்ள தொடங்கினேன். பகலில் சலூன், மாலையில் காலேஜ் என உழைத்தேன். பின் மீண்டும் இரவு ஒரு மணிவரை சலூனில் இருப்பேன். அப்போது இருந்துதான் நான் பார்பர் ஆனேன்.
திருப்புமுனை
1993ல் ஒரு மாருதி வேன் வாங்கினேன். என் மாமா ஒரு சின்ன கார் வாங்கினார். உடனே நானும் பெருமைக்காக ஒரு கார் வாங்கினேன். என்னுடைய சேமிப்புகள், கடன் என பலவாறாக பணம் சேர்த்து அவர் காரை விட பெரியதாக ஒன்று வாங்கினேன். என்னுடைய தாத்தாவின் சொத்தை கடனுக்காக அடமானம் வைக்க வேண்டியாக இருந்தது. வட்டி ஆறாயிரத்து எண்ணூறு ரூபாயை நான் கட்டி வந்தேன்.
என் அம்மா வேலை செய்த வீட்டு உரிமையாளரான நந்தினி அக்கா, வெறுமனே காரை வாங்கி மூலையில் போட்டு வைத்திருப்பதற்கு அதை வாடகைக்கு விடலாமே என ஐடியா தந்தார். இந்த தொழிலின் அடிப்படைகளை கற்றுத் தந்தார். அவரை இப்போது வரை என் சொந்த அக்காவாகத்தான் நினைக்கிறேன். அவர் தன் மகளின் திருமணத்திற்கு என்னை விருந்தினராக அழைத்திருந்தார்.
வெற்றிகரமான தொழிலதிபர் ஆனேன்
1994ல்லிருந்து இந்த தொழிலை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினேன். என் முதல் வாடிக்கையாளர் இன்டெல் நிறுவனம். காரணம் அங்கேதான் நந்தினி அக்கா வேலை பார்த்து வந்தார். அவர் மூலமாக அந்த வாய்ப்புக் கிடைத்தது. அதன்பின் ஒவ்வொரு காராக வாங்கினேன்.
2004 வரை ஆறு கார்கள்தான் வாங்கியிருந்தேன். முடிவெட்டும் தொழிலை பிரதானமாக செய்து வந்ததால் அந்த காலகட்டத்தில் வளர்ச்சி மெதுவாகத்தான் இருந்தது. போதாக்குறைக்கு வாடகை கார் பிசினஸில் போட்டியும் அதிகமாக இருந்தது. எல்லாரும் கார்கள் வைத்திருந்தாலும் யாரிடமும் சொகுசு கார்கள் இல்லை. நாம் ஏன் அவற்றை வாடகைக்கு விடக்கூடாது என யோசித்தேன்.
ரிஸ்க் எடு
என்னுடைய முதல் சொகுசு காரை 2004ல் வாங்கியபோது எல்லாரும் நான் பெரிய ரிஸ்க் எடுப்பதாக பயமுறுத்தினார்கள். 40 லட்ச ரூபாய் கார் என்பது பெரிய ரிஸ்க்தானே. நான் முயற்சி செய்து பார்க்கத் தீர்மானித்தேன். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் காரை விற்றுவிட முடிவு செய்தேன். ஆனால் என் முயற்சிக்கு கைமேல் பலன். வேறு யாரிடமும் சொகுசு கார்கள் இல்லாததால் என் ஐடியா வொர்க் அவுட்டானது. சிலர் செகண்ட் ஹேண்ட் சொகுசு கார்கள் வைத்திருந்தாலும் அவற்றின் தரம் மிக மோசமானதாய் இருந்தது. புத்தம் புதிய சொகுசு காரில் முதலீடு செய்த முதல் ஆள் நான் தான்.
நீங்கள் தொழில் செய்ய விரும்பினால் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கவேண்டும். நான் 2011ல் ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கும்போதும் என்னை எல்லாரும் பயமுறுத்தினார்கள். 2004ல் எடுத்த ரிஸ்க் பலனளித்தபோது இப்போது ரிஸ்க் எடுக்க ஏன் பயப்படவேண்டும் என என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன். நான்கு கோடி மதிப்பிலான அந்த ரிஸ்க் நல்ல பலனை அளித்தது. இதோ கடந்த டிசம்பரோடு வண்டிக்கான தவணை முடிந்தது.
மிகப்பெரிய சவால்கள்
எல்லா தொழில்களிலும் சவால்களும் ஏமாற்றங்களும் இருக்கத்தான் செய்யும். கடந்த ஏப்ரல் மாதம் மூன்று கோடி ரூபாயை சாலை வரியாக மட்டும் கட்டினேன். இப்போது நினைத்தாலும் மலைப்பாகத்தான் இருக்கிறது. கடன் வாங்கினேன், அடமானம் வைத்தேன். ஆனால் எல்லா தொழில்களிலும் இந்தவகையான சவால்கள் இருக்கின்றன. அவற்றை சமாளிப்பதில்தான் நம் வெற்றி இருக்கிறது. சாலை வரியை சமாளிப்பது இப்போதைக்கு சிரமமாய் இருந்தாலும் சீக்கிரமே மீண்டுவிடுவேன்.
எதிர்காலத் திட்டம்
முன்பு காலாண்டுக்கு ஒருமுறை வரி செலுத்தி வந்தோம். இப்போது செலவுகள் அதிகமாகிவிட்டதால் விரிவுப்படுத்தும் திட்டங்களை நிறுத்து வைத்திருக்கிறேன். விரைவில் லிமோசைன் வகை கார்கள் வாங்க இருக்கிறேன்.
தொழில் முனைவோருக்கு சொல்ல விரும்புவது
ரமேஷ் பாபு தொழில் முனைவோருக்கு சொல்ல விரும்புவது எல்லாம் ஒரே ஒரு வரிதான்.
கடினமாய் உழையுங்கள், பணிவாய் இருங்கள். மற்றவற்றை அதிர்ஷ்டம் பார்த்துக்கொள்ளும்.