நாசாவின் விண்வெளி பயணத் திட்டத்திற்கு தேர்ச்சி பெற்ற இந்திய வம்சாவளி வீரர்!
நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் விண்வெளி பயணத் திட்டங்களுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா ஜான் உர்புத்தூர் சாரி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்வதால் நாசா என்ற பெயரைக் கேட்டாலே வானியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு அன்னாந்து பார்க்கும் பைசா கோபுரமாக இருக்கும். நாசாவில் நாமும் பணியாற்ற வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு, அந்த அரிய வாய்ப்பு இந்திய வம்சாவளி இளைஞருக்குக் கிடைத்திருக்கிறது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு தேர்வு நடத்தியது. இதில் 18 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்களில் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 2 அண்டுகளாக ‘ஆர்டெமிஸ் திட்டம்’ (Artemis program) என்ற பெயரில் நாசா பயிற்சி அளித்து வந்தது.
நாசா பயிற்சி அளித்ததில் 11 பேர் வெற்றிகரமாக கடினமான தேர்வுகளிலும் பாஸாகி வெற்றிகரமாக பயிற்சியை முடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் நாசா வரும் காலங்களில் செயல்படுத்த உள்ள விண்வெளித் திட்டங்களில் இடம்பெற உள்ளனர். குறிப்பாக நிலவு, செவ்வாய் கிரக பயணத்தில் இவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
தேர்ச்சி பெற்ற 11 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா ஜான் உர்புத்தூர் சாரியும் ஒருவர்.
41 வயதாகும் ராஜாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் சாரி, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாத்தில் பொறியியல் படித்து முடித்த ஸ்ரீநிவாஸ் சாரி அமெரிக்காவில் உயர்கல்வி படிக்க வந்து வேலை, திருமணம் என்று அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.
அமெரிக்காவில் பிறந்த ராஜா ஜான் உர்புத்தூர் சாரி, அமெரிக்க விமானப் படை அகாடமியில் படித்து பட்டம் பெற்று, கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப் படை தளத்தில் 461-வது பிரிவில் பணிபுரிந்து வந்தார். அமெரிக்க விமானப் படையில் கர்னலாக பணிபுரிந்து வந்தவருக்கு விண்வெளி வீரராக வேண்டும் என்பது கனவு. தனது கனவை நனவாக்க நாசா நடத்திய தேர்வில் பங்கேற்று தற்போது வெற்றிகரமாக 2 ஆண்டு பயிற்சியை முடித்துள்ளார்.
கடந்த வாரத்தில் புதிய விண்வெளி வீரர்களை வரவேற்று மரபு ரீதியாக பின்பற்றப்படும் நாசாவின் வழக்கப்பட்டி அவர்களுக்கு வெள்ளி நிற பட்டையம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. விண்வெளி வீரர்கள் தங்களது முதல் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர் அவர்களுக்கு தங்க நிற பட்டையம் அளிக்கப்படும்.
நாசாவின் விண்வெளி பயணத்தில் பங்கெடுக்க தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ராஜா ஜான் சாரி,
“என்னுடைய அப்பா அமெரிக்காவிற்கு கல்வியை நாடி ஓடி வந்தார். சிறு வயது முதலே கல்வியின் முக்கியத்துவம் என்ன என்று சொல்லி சொல்லி நான் வளர்க்கப்பட்டவன். அதனால் என்னுடைய கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே இருந்தது. அதுவே என்னுடைய இலக்கை தீர்மானிக்க உதவியது, வெற்றியடைய நிச்சயம் உங்களது முழுமுயற்சியை செலுத்த வேண்டும்,”
என்று அண்மையில் பிடிஐக்கு அளித்துள்ள பேட்டியில் சாரி கூறியுள்ளார். சாரியின் மனைவி ஹொல்லி, செடார் ஃபால்ஸை பூர்வீகமாகக் கொண்டவர், இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
நாசாவின் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஜிம் ப்ரைடென்ஸ்டைன் ஹாஸ்டனின் ஜான்சன் ஸ்பேஸ் மையத்தில் அளித்துள்ள பேட்டியில்
“2020 அமெரிக்க விண்வெளி வீரர்கள் அமெரிக்க ராக்கெட்டி அமெரிக்க மண்ணில் இருந்து புறப்பட்டு சென்று திரும்பி வருவார்கள். ஆர்டெமிஸ் திட்டம் நிலவு மற்றும் விண்வெளி பயணத்தில் முக்கிய ஆண்டாக அமையும். விண்வெளி செல்லும் வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள், விண்வெளியில் நடப்பதற்கான பரிசோதனைகள், சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவை கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்வெளி வீரர்கள் விண்கலன் மேம்பாடு, குழுவினருக்கு ஒத்துழைப்பு தருதல் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். இதுவரை 500 பேர் மட்டுமே விண்வெளி சென்றிருக்கின்றனர், அவர்களுடன் இந்த 11 பேரின் பெயர்களும் இடம்பெறப்போகிறது.
வரும் 2024-ல் நிலவுக்கு முதல் முறையாக பெண் ஒருவரை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 2030ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டிலும் நாசா சார்பில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பயணம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாசா ஆராய்ச்சி நிலையம், விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து 2020 நவம்பர் மாதத்தோடு 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் வரும் 2024-ல் நிலவுக்கு முதல் முறையாக பெண் ஒருவரை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.
அதன் பிறகு 2030 வரை ஒவ்வொரு ஆண்டிலும் நாசா சார்பில் நிலவுப்பயணம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாசா ஆராய்ச்சி நிலையம், விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து 2020 நவம்பர் மாதத்தோடு 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் வரிசையில் 3வது விண்வெளி வீரராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா ஜான் சாரி நாசாவின் விண்வெளி வீரராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவிற்கு அமெரிக்கா, இந்தியாவில் இருந்து பலதரப்பட்டவர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
கட்டுரைத் தொகுப்பு : கஜலெட்சுமி