2021ல் சந்திராயன்-3; ககன்யான் திட்டத்திற்கு 4 விமானப்படை வீரர்கள் தேர்வு!
சந்திராயன் 3 திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன் 3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. அதேபோல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு இந்திய விமானப்படையில் இருந்து நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான பயிற்சி விரைவில் ரஷ்யாவில் துவங்க இருப்பதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
2020-ம் ஆண்டில் சந்திராயன் 3 செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருந்த நிலையில் இஸ்ரோவின் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சந்திராயன் 3 திட்டம் தொடர்பான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் கே சிவன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதிலும் லேண்டர், ரோவர், உந்துவிசை கருவி ஆகியவை இடம்பெற்றிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
சந்திராயன் 3 விண்கலம் செலுத்தும் பணி அடுத்த ஆண்டிற்கு நீட்டிப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சந்திராயன் 3 திட்டப்பணிகளும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டப்பணிகளும் ஒருசேர நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்திராயன் 2 ஆர்பிட்டர் ஏழாண்டுகள் வரை இயங்கும் என்பதால் சந்திராயன் 3 திட்டத்திற்கும் அதையே பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டார். இத்திட்டத்திற்கான செலவு குறித்து சிவன் கூறும்போது,
“சந்திராயன் 3 திட்டப்பணிகளுக்கு 250 கோடி வரை செலவாகும். தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஏவுதளம் அமைப்பது குறித்து சிவன் கூறும்போது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையம் தவிர இரண்டாவது ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது,” என்றார்.
இந்த இடத்தைத் தேர்வு செய்தது குறித்து அவர் கூறும்போது, “எஸ்.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகள் தெற்கு நோக்கி ஏவப்படும்போது இது மிகவும் பயனுள்ளதாக அமையும்,” என்றார்.
ஏவுதளம் அமைக்கப்பட்ட பிறகு முதலில் எஸ்.எஸ்.எல்.வி வகை ராக்கெட்கள் ஏவுவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் பின்னர் பெரிய வகை ராக்கெட்டுகள் ஏவுவதற்கு விரிவுப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வருங்காலத் திட்டங்கள் குறித்து அவர் கூறும்போது,
“2020ம் ஆண்டிற்கு இருபத்தைந்து திட்டப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் திட்டமிடப்பட்டு நிறைவு செய்யப்படாத திட்டப்பணிகளும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவு செய்யப்படும்,” என்றார்.
சந்திராயன் 2 விக்ரம் லேண்டரில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து கேட்டபோது சந்திராயன் 2 லேண்டர் வேகம் குறையாமல் அதே வேகத்தில் சென்று நிலவில் மோதியதால் வெற்றிகரமாக தரையிறக்க முடியாமல் போனதாக தெரிவித்தார்.
சந்திராயன் 2 திட்டம் நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்கான இந்தியாவின் முதல் முயற்சியாகும். இதனை நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால் விக்ரம் லேண்டர் ஹார்ட் லேண்டிங் செய்துள்ளது.
சமீபத்தில் விகரம் லேண்டரைக் கண்டறிந்த சென்னையைச் சேர்ந்த இளைஞரை சிவன் பாராட்டினார். அத்துடன் இவ்வாறு செயலிழந்த மாட்யூலின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்பது விண்வெளி நிறுவனத்தின் விதிமுறைகளில் ஒன்று என்றும் குறிப்பிட்டார்.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு ரஷ்யாவில் இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் பயிற்சி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நான்கு விண்வெளி வீரர்களும் இந்திய விமானப் படையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
ககன்யான் திட்டத்தைப் பொறுத்தவரை 2019ம் ஆண்டில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. பல வடிவமைப்புகள் நிறைவடைந்துள்ளன. விண்வெளி வீரர்களை தேர்வு செய்யும் பணிகளும் முடிவடைந்துவிட்டது. நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,” என்று சிவன் குறிப்பிட்டார்.
ககன்யான் திட்டத்திற்கான ஒத்துழைப்பிற்காக ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. 2018 சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி ககன்யான் திட்டம் குறித்து அறிவித்தார். 2020-21 பட்ஜெட்டில் 14,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு இஸ்ரோ நிறுவனம் மத்திய அரசிடம் கோரியுள்ளது.
தகவல் : பிடிஐ