இந்தியாவிலேயே முதன் முறையாக 100% ‘டிஜிட்டல் பேருந்து’ மும்பையில் அறிமுகம்!
ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் செல்போன் ஆப்-யை பயன்படுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டை பெறும் டிஜிட்டல் டிக்கெட் முறை மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் செல்போன் ஆப் பயன்படுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டை பெறும் டிஜிட்டல் டிக்கெட் முறை மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மகாராஷ்டிராவில் முழுக்க டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுக்கக் கூடிய பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.
பிரஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து மூலமாக கேட்வே ஆஃப் இந்தியா - சர்ச்கேட் வழித்தடத்தில் டிஜிட்டல் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
பிரஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில்,
பேருந்து டிக்கெட் முறையை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டில் முதன் முதலில் 100 சதவீத டிஜிட்டல் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த வழித்தடத்தில் உள்ள 10 பேருந்துகளிலும் இதை அமல்படுத்துவோம், பின்னர், நகரம் முழுவதும் உள்ள 438 வழித்தடங்களிலும் இதை விரிவுபடுத்துவோம்," எனத் தெரிவித்தனர்.
இந்த முறையில் பயணிகள் தங்களது ஸ்மார்ட் கார்டு அல்லது செல்போன்களில் ‘Chalo’ என்ற ஆப்-யைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும், பேருந்தில் ஒரு தனித்துவமான ‘டேப்-இன் டேப்-அவுட்’ கருவி பொருத்தப்பட்டிருக்கும். பயணிகள் தங்கள் ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தியோ அல்லது தங்கள் ஸ்மார்ட்ஃபோனில் நிறுவப்பட்டுள்ள ‘சலோ’ செயலி மூலமாகவோ பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் டேப் செய்து கொள்ளலாம்.
செயலியை பயன்படுத்தி பயணிகள் டேப் செய்யும் போது, பயணத்தின் முடிவில் பயணியின் செல்போனுக்கு ரசீது அனுப்பி வைக்கப்படும். அவர்கள் ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தினால் அவர்களது டிக்கெட்டையும் பெற்றுக் கொள்ளலாம்.
டப்-இன் டப்-அவுட் சேவை ஆரம்பத்தில் இரண்டு பேருந்துகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த சேவையை நகரத்தில் 200 வழித்தடங்களில் பயன்படுத்த முயல்வதாக பெஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த டிஜிட்டல் பேருந்தில் பயணித்த பயணிகள் பலருமே பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர். பயணமானது முற்றிலும் தொடர்பில்லாதது மற்றும் டிக்கெட் பரிசோதகருடன் எந்த தொடர்பும் இல்லாததால், பயணம் மிகவும் வசதியாகிவிட்டது என மும்பை மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தொகுப்பு: கனிமொழி