இனி ஸ்மார்ட் வாட்ச் மூலம் பணப்பரிவர்த்தனை: சிட்டி யூனியன் வங்கி அசத்தல் சேவை அறிமுகம்!
சிட்டி யூனியன் வங்கி ஸ்மார்ட் வாட்ச் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
சிட்டி யூனியன் வங்கி ஸ்மார்ட் வாட்ச் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதுவரை நாட்டு மக்கள் தங்களிடம் இருப்பதிலேயே அதிக மதிப்புள்ளதாகக் கருதி வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதுதான் அந்த அறிவிப்பு.
மக்களிடம் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தகவல்கள் கிடைக்கப் பெற மக்கள் இரவு, பகல் பாராமல் ஏ.டி.எம் மற்றும் வங்கி வாசல்களில் காத்திருக்க ஆரம்பித்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்திய பொருளாதாரம் ஆன்லைன் வர்த்தகத்திற்கும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பக்கமும் திரும்பியது. அதுவரை கணினி முதல் காய்கறிகள் வரை மொத்தமாக பணம் கொடுத்து வாங்கி வந்த இந்திய மக்கள், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, செயலிகள் பக்கம் திரும்பினர்.
அப்படி. ஆன்லைன் வங்கிச் சேவையை அதிகம் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சிட்டி யூனியன் வங்கி ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கீ செயின் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்ட் வாட்ச் மூலம் பணப்பரிவர்த்தனை:
இந்தியாவில் மிகவும் பழமையான வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி, ஹெல்த்கேர் தொடர்பான ஸ்மார்ட் வாட்ச்களை வடிவமைத்து வரும் GOQii நிறுவனம் மற்றும் நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) ஆகியவற்றுடன் இணைந்து ஃபிட்னஸ் வாட்ச் வடிவில் டெபிட் கார்டு போன்ற பணப்பரிவர்த்தனை செய்யும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான காமகோடி கூறுகையில்,
“எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமகால மற்றும் பாதுகாப்பான முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம். இந்த CUB ஈஸி பே டெபிட் கார்டை ஃபிட்னஸ் வாட்ச்சில் அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக பணம் செலுத்தும் தீர்வை இது வழங்குகிறது,” என்கிறார்.
டெபிட், கிரெடிட் கார்டு மூலமாக பிஓஎஸ் (PoS) கருவிகளை பயன்படுத்துவதைப் போலவே, சிட்டி யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்களும் தங்களது கையில் கட்டியிருக்கும் ஸ்மார்ட் வாட்சை பிஓஎஸ் கருவிகள் முன் காண்பித்து பணம் செலுத்தலாம். பிஓஎஸ் கருவிகள் முன்பு ஸ்மார்ட் வாட்சை காண்பித்த பிறகு, வாடிக்கையாளர்கள் அதன் வேலட்டில் இருந்து பணம் செலுத்தலாம். அந்த குறிப்பிட்ட பணப்பரிவர்த்தை 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும் பட்சத்தில் மட்டும் தங்களது கடவுச்சொல்லைப் பதிவிட்டு பாதுகாப்பான முறையில் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைக்கு 5 ஆயிரம் வரை லிமிட் வழங்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர் விரும்பினால் அதிகரித்துக் கொள்ளலாம் எனவும் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வாட்ச் உடல் நலனையும் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காண்டாக்ட்லெஸ் பேமென்ட்களைச் செய்வதற்குப் பயனுள்ளதாக இருப்பதுடன், இந்த ஃபிட்னஸ் வாட்ச் அணிபவருக்கு அவர்களது ஆக்ஸிஜன் அளவு (Sp02), உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் 18 உடற்பயிற்சி முறைகளைக் கண்காணிக்க உதவுகிறது.
கூடுதலாக, ஆரம்பகால வாடிக்கையாளர்களுக்கு, GOQii தனிப்பட்ட சுகாதார பயிற்சியாளர், மருத்துவர் டெலி-கன்சல்ட் மற்றும் ஆன்லைன் வீடியோ பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று மாதங்களுக்கான இலவச ஹெல்த் பேக்கேஜையும் வழங்குகிறது.
அதுமட்டுமல்லாது வழக்கமான ஸ்மார்ட் வாட்ச்களின் விலை 6,499 ரூபாய் என வைத்துக்கொண்டால், சிட்டி யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள இந்த ‘ஸ்மார்ட் வாட்ச் டெபிட் கார்டு’ விலை 3,499 ரூபாய் மட்டுமே என வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் மற்றும் மொபைல் பணப்பரிவர்த்தனைகளுக்கு அளவை நிர்ணயிப்பதைப் போலவே ஸ்மார்ட் வாட்ச் சேவையிலும் அதற்கான அளவை வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்க முடியும். ஃபிட்னஸ் வாட்ச்சில் இந்த டெபிட் கார்டைப் பயன்படுத்தி செலுத்தப்படும் பணம் மிகவும் பாதுகாப்பானது என்றும், ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுச்செய்தி அனுப்பப்படும் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் ஃபிட்னஸ் வாட்ச் டெபிட் கார்டுக்கான கோரிக்கையை நெட் பேங்கிங்/மொபைல் பேங்கிங் மூலம் பதிவு செய்யலாம் என்றும், அதன் இயக்கத்தை CUB All in One Mobile App மூலம் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே நிர்வகிக்க முடியும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிட்டி யூனியன் வங்கியின் இந்த புதிய ஃபிட்னஸ் வாட்ச் டெபிட் கார்டு சேவை மக்களை மிகவும் கவரும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு- கனிமொழி