‘இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிராமம்’ - 2 ஆண்டுகளில் தலைகீழாய் மாறியது எப்படி?
கொள்ளைக்காரியாக இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக மாறிய பூலன் தேவி, மணல் மேடுகள், வித்தியாசமான பாலைவனத் தாவரங்கள் இவை தான் சம்பல் கிராமத்தைப் பற்றி நினைக்கும் போது உங்களுக்கு தோன்றலாம், ஆனால் இப்போது அந்த கிராமம் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிராமங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
கொள்ளைக்காரியாக இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக மாறிய பூலன் தேவி வாழ்ந்த மணல் மேடுகள், வித்தியாசமான பாலைவனத் தாவரங்கள் நிறைந்த இடமே சம்பல். இந்த ஊரைப் பற்றி நினைக்கும் போது பூலன் தேவி ஞாபகம்தான் உங்களுக்குத் தோன்றலாம், ஆனால், இப்போது அந்த கிராமம் தான் ’இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிராமம்’ என்ற பெருமையை கொண்டுள்ளது.
நவீன கிராமம்:
ராஜஸ்தானின் துல்பூர் மாவட்டத்தில் உள்ள சம்பலின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தனோரா, இங்கு 2 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 2014ம் ஆண்டு வரை சுகாதாரம், சாலைகள், குடிநீர் என்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்த கிராமம், தற்போது அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும் அளவிற்கு மாறியுள்ளது.
எங்கு பார்த்தாலும் குப்பைகள், திறந்த வெளியில் மலம் கழிப்பது என அசுத்தம் நிறைந்து காணப்பட்ட கிராமம் இன்று, பளபளப்பான சாலைகள் மற்றும் பசுமையான மரங்களால் சூழப்பட்டுள்ளது. சோலார் விளக்குகளால் ஒளிரும் தெருவிளக்குகள், ஒரே மாதிரி வர்ணம் பூசப்பட்ட வீடுகள், ஒரு திறன் மேம்பாட்டு மையம், ஒரு தியான மையம் மற்றும் ஒரு பொது நூலகம் என ஒரு மினி நகரமாக உருவெடுத்து வருகிறது.
அனைத்து கிராமங்களுக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ள தனோரா கிராமத்தில், ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, கான்கிரீட் சாலைகளுக்கான அணுகல், கழிவு மேலாண்மைக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியன உள்ளன. இங்கு மது உற்பத்தி மற்றும் விற்பனை கூட தடை செய்யப்பட்டுள்ளது.
மாற்றம் நிகழ்ந்தது எப்படி?
இந்த மாற்றத்திற்கான முன்னெடுப்பை ஐஆர்எஸ் அதிகாரியான டாக்டர் சத்யபால் சிங் மீனா தான் எடுத்துள்ளார். அவுரங்காபாத்தில் பதவியில் இருந்தபோது, என்ஜிஓ எகோ நீட்ஸ் அறக்கட்டளை ஏற்பாடு செய்த சுற்றுச்சூழல் புரட்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அவர் அவர்களின் ஸ்மார்ட் கிராமத்தின் கருத்தாக்கத்தால் முற்றிலும் ஈர்க்கப்பட்டார் மற்றும் அவர்களின் உதவியைக் கேட்டார்.
இதைத் தொடர்ந்து, என்ஜிஓவின் நிறுவனர் பேராசிரியர் ப்ரியானந்த் அகலே மற்றும் அவரது குழுவினர் இந்த மாற்றத்திற்கான பயணத்தைத் தொடங்க ஆரம்பித்தனர். சத்யபாலும் ஆலோசனைக் குழுவில் சேர, தன்னார்வலர்களுக்கு உணவு சமைப்பது முதல் கிராம மக்களை அணிதிரட்டுவது வரை, அவரது மனைவி மற்றும் குடும்பம் மாற்றும் பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது.
2014 முதல் 2016 வரை, ஸ்மார்ட் கிராமத்தை வடிவமைக்க செய்யப்பட்டவை:
1) ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை புதுப்பித்தல் அல்லது மாற்றியமைத்தல் மற்றும் அழகுபடுத்துதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்.
2) மறுவளர்ச்சி, இதில் உள்கட்டமைப்பு மேம்பாடு அடங்கும்.
3) கிரீன்ஃபீல்ட், இது சுற்றுச்சூழல் தொடர்பான வளர்ச்சி.
4) E-Pan என்பது மின்னணு திட்டமிடல், தகவல் தொடர்பு மற்றும் மின் கற்றலில் கவனம் செலுத்துதல்.
5) மக்கள் சம்பாதிக்கும் வகையில் கற்றல் மற்றும் திறன்களை வழங்குவதற்கான வாழ்வாதாரத்தை வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டம் குறித்து சத்யபால் சிங் மீனா கூறுகையில்,
“ஸ்மார்ட் கிராம திட்டத்தை உருவாக்க எங்களுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. முதலில் மக்களுக்கு புரிய வைக்க நேரம் எடுத்துக்கொண்டோம். நிறைய கிராம சபை கூட்டங்களை நடத்தி, மக்களுக்கு இத்திட்டம் குறித்து புரிய வைத்தோம். எங்களுக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்பதை உணர்த்தினோம்,” என்கிறார்.
கழிப்பறை மற்றும் சாலைகள்:
450-மிமீ விட்டம் கொண்ட 2 கிலோ மீட்டர் கழிவுநீர் பாதை அமைக்கப்பட்டது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு கழிப்பறையும் மேன்ஹோல்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு சேகரிப்படும் அனைத்து கழிவுநீரும், சுத்திகரிக்கப்பட்டு பாசனத்திற்காக பயன்படுத்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்களின் முழு ஒத்துழைப்போடு 8-10 அடி அகலத்தில் இருந்த சாலைகள் 20-25 அடியாக அகலப்படுத்தப்பட்டன. மேம்படுத்தப்பட்ட இணைப்புக்காக தோடேகாபுரா கிராம பஞ்சாயத்துக்கு கூடுதலாக 2 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டது.
சிலர் சாலை வசதிக்காக தங்களது நிலங்களையும் வழங்க முன்வந்தனர். கிராமத்தை சீரமைப்பதற்காக இதற்கு கிராமத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்கள் மாத சம்பளத்தில் 25 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
தனோராவை மாற்றி அமைக்க தோராயமாக கிட்டத்தட்ட ரூ. 2.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி மத்திய அரசால் வழங்கப்பட்ட கிராம பஞ்சாயத்து நிதி மூலம் செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், கிராம மக்கள் பல ஆண்டுகளாக வீடு வீடாக வசூல் செய்து சுமார் 20 லட்சம் ரூபாய் திரட்டினர். கோகோ கோலா அறக்கட்டளை அதன் CSR பிரிவு மூலம் ரூ.52 லட்சத்தையும், சன் பார்மா ரூ.5 லட்சத்தையும் நன்கொடையாக அளித்தது. உள்ளூர் எம்.எல்.ஏ., எம்.பி., தலா ரூ.15 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கினர். தன்னார்வத் தொண்டு நிறுவனமும் ரூ.15 லட்சத்தை வழங்கியது.
பள்ளி மாணவர்களுக்கு இ-கற்றலை ஊக்குவிக்கும் விதமாக கிராமப் பள்ளியில் கணினிகள் பொருத்தப்பட்டன. மேலும், வாழ்வாதார வாய்ப்புகளுக்காக, திறன் மேம்பாட்டு மையத்தையும் உருவாக்கியுள்ளனர். கிராம விகாஸ் சபா அல்லது கிராம மேம்பாட்டுக் குழு இப்போது தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு நிறுவனங்கள் மூலமாக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வருகின்றன.
இன்று தனோராவின் வெற்றி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல நிறுவனங்களும், தன்னார்வலர்களும் இதுபோன்ற திட்டங்களுக்கு நிதி அளிக்க முன்வந்துள்ளனர். ஸ்மார்ட் கிராமத்தின் கருத்தாக்கத்தில் ஆர்வமுள்ள மற்றும் அதைப் பிரதிபலிக்க விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஆராய்ச்சி இடமாக இந்த கிராமம் மாறியுள்ளது.
இந்த கிராமத்தை மாதிரியாக கொண்டு ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் முழுவதும் 100 கிராமங்களை ஸ்மார்ட் கிராமங்களாக மாற்றக்கூடிய ‘சோச் பத்லோ காவ்ன் பட்லோ’ என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.