91 வயது ஆசிரியர்- இவர் தான் இந்தியாவின் மிகவும் வயதான ஆசிரியர்!
உலகின் மிகப் பழைய ஆசிரியரின் கதை!
தற்போது 91 வயதாகும், இந்தியாவின் பெங்களூரில் வசித்து வரும் லட்சுமி கல்யாணசுந்தரம் இந்தியாவின் மிக முதுமையான ஆசிரியர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். பெரும்பாலும், ஆசிரியர் வேலைக்கு பொதுவாக இருபதுகளின் முற்பகுதியிலிருந்து சேருவது வழக்கம். ஆனால், ஆசிரியர் லட்சுமியின் கதை சற்று வித்தியாசமானது.
அவர் ஆசிரியர் பணியில் இணைந்த போது அவரின் வயது 67. ஆம், இந்த வயதில் தான் அவர் தனது கற்பித்தல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
சராசரி ஓய்வூதிய வயதாகக் கருதப்படும் இந்த வயதில் ஆசிரியராக முடிவெடுத்தது சிலருக்கு காலதாமதமாக தோன்றலாம். ஆனால், அந்த வயதில் மூதாட்டி லட்சுமி ஆசிரியராக முடிவெடுத்ததுக்கு சில காரணங்கள் இருக்கின்றன.
14 வயதில் கல்யாண சுந்தரத்தை திருமணம் செய்துகொண்டார். இல்லத்தரசி மற்றும் தாயாக தனது வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியை செலவழித்தார். ஆனால், தனது கணவர் 67 வயதில் இறந்தபோது, தனக்காக சில வாழ்க்கை மாற்றங்களைச் செய்ய இது ஒரு நல்ல தருணம் என்று கருதினார்.
தன்னை சமூகத்தின் அங்கமாக வைத்திருக்க நினைத்த அவர், சிறப்புப் பள்ளியின் ஆசிரியராக மாற முடிவு செய்தார். இளம் பெண்ணாக இருந்தபோது மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டவர் லட்சுமி. இருப்பினும், அப்பொழுது, இந்தியாவில் பெண்களுக்கு மிகக் குறைந்த உரிமைகள் இருந்தன, இது அவரது குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கான திறனைத் தடுத்தது.
ஆனால் 67 வயதாக இருந்தபோது அவரின் உரிமைகளை தடுக்க யாரும் இல்லை. தனது கனவுகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கவே, துணிந்து ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
அப்படி ஆரம்பித்த பயணம் தான் இன்று லட்சுமி இந்தியாவின் மிகவும் வயதான ஆசிரியர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். கடந்த 24 ஆண்டுகளாக ஆசிரியராக கற்பித்து வருகிறார். எப்போதுதான் அவர் ஓய்வு பெற முடிவு செய்வார் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் ஆசிரியர் லட்சுமியோ,
“கடவுள் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியப்படுத்துங்கள், உங்களுக்குத் தெரியும். கடவுள் எதை விரும்புகிறாரோ, அதுதான் நடக்கும் வேறு ஒன்றும் இல்லை," என்று கூறுகிறார்.
இரண்டு தசாப்த கால ஆசிரியர் தனது வேலையை மகிழ்ச்சியாக அனுபவித்து பார்த்து வருகிறார். ஆசிரியர் லட்சுமியின் இந்தப் பயணம், வாழ்க்கையை மாற்ற அல்லது புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் எவருக்கும் ஒரு சிறந்த உத்வேகம்.
இதற்கிடையே, ஆசிரியர் லட்சுமியின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா,
“சேவை செய்ய ஆசை. அதுவே பயனுள்ளதாக இருக்க வேண்டும். இவரின் இந்த வாழ்க்கை உண்மையி சக்தி வாய்ந்தது..." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
வயது ஒருபோதும் தடை கிடையாது என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம் ஆசிரியர் லட்சுமி!
படங்கள் மற்றும் தகவல் உதவி: பிபிசி | தொகுப்பு: மலையரசு