75 ஆண்டுகளாக கிராமக் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் 102 வயது ‘பத்மஸ்ரீ நாயகன்’
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 102 வயது முதியவர்!
”மாணவர்களுக்கு போதிப்பது தான் என் வாழ்நாளில் நான் பெற்ற சிறந்த விருது...' என குழந்தை சிரிப்புடன் சொல்கிறார் நந்த கிஷோர் தாத்தா.
ஒடிஷா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சுகிந்தா வட்டத்தின் கந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் 102 வயதான தாத்தா நந்த கிஷோர் பிருஸ்டி. கடந்த 1946 முதலே தனது கிராமத்தில் சாட்டசாலி என்ற பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். அந்த கிராமத்தை ஒட்டியுள்ள ஊரகப் பகுதி பிள்ளைகளுக்கு அந்த பள்ளிக்கூடம் என்றால் கொள்ளை இஷ்டமாம்.
ஏழாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடத்தின் பக்கம் செல்லாத அவர், மாணவர்களுக்கு வாழ்க்கை பாடத்தை போதித்து வருகிறார். அவரது பணியை பாராட்டி பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டுள்ளது.
தனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து பேசிய அவர்,
“பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சில வடமொழி நாளிதழ்கள் சில நிருபர்கள் இந்த விருது குறித்தும் கௌரவத்தைப் பற்றியும் என்னிடம் கூறும் வரை இது பற்றி எனக்குத் தெரியாது. இந்த விருது எனக்கு வழங்கப்படும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை," என்று நந்தா தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சாட்டசாலி பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் காலை 9 மணி வரையும், பின்னர் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வகுப்புகள் நடத்தி வருகிறார்.
அதுமட்டுமின்றி, தனது குழந்தைப் பருவத்தில் ஒருபோதும் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்காத முதியவர்களும் நந்தாவின் மாணவர்கள் தான். அவர்கள் மாலை 6 மணிக்கு மேல் நந்தாவின் வீட்டுக்குச் சென்று கையெழுத்து போடுவது எப்படி என்பதை கற்றுக் கொள்கிறார்கள்.
நந்த கிஷோர் தாத்தாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ள செய்தியை அறிந்ததும் அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்களும், இந்நாள் மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் மருத்துவர், பொறியாளர் மற்றும் அரசு அதிகாரிகளாக பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.
“மாணவர்களுக்குப் போதிப்பது தான் என் வாழ்நாளில் நான் பெற்ற சிறந்த விருது,” என மாறாத குழந்தை சிரிப்புடன் பத்மஸ்ரீ விருது பெற்ற அனுபவத்தை சொல்கிறார் நந்த கிஷோர் தாத்தா.
நான் அவர்கள் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்ப்பேன். அந்த சிறுவர்கள் அனைவரும் கல்வியறிவு அற்றவர்கள். எனக்கு பெரியதாக வேலை இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து அச்சிறுவர்களுக்கு பாடம் சொல்லிகொடுக்க ஆரம்பித்தேன். அந்த காலக்கட்டத்தில் பள்ளிகள் எல்லாம் இல்லை. அதனால் ஆரம்பத்தில் நான் அவர்களைத் தேடி ஓட வேண்டியிருந்தது. பின்னாட்களில் அவர்களே வந்து படிக்க தொடங்கினர், என்று கூறும் அவர், "என் உடல்நலம் அனுமதிக்கும் வரை நான் தொடர்ந்து குழந்தைகளுக்கு கற்பிப்பேன், என்று அத்தனை உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
உண்மையில் பத்மஸ்ரீ விருதுக்கு பொருத்தமானவர் தான் அவர்! வாழ்த்துகள்!!