இளம் கோடீஸ்வரர் ஆன 4 மாதக் குழந்தை - பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்பு பங்குகளை பரிசளித்த நாராயண மூர்த்தி!
தொழில்நுட்ப ஜாம்பவான் நாராயணமூர்த்தி தனது பேரனுக்கு 15 லட்சம் நிறுவன பங்குகளை எழுதி கொடுத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.240 கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ஜாம்பவான் நாராயணமூர்த்தி தனது பேரனுக்கு 15 லட்சம் நிறுவன பங்குகளை எழுதி கொடுத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.240 கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்டி பேரனுக்கு நாராயண மூர்த்தி கொடுத்த பரிசு:
தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தனது பேரனுக்கு மிக விலையுயர்ந்த பரிசை வழங்கியுள்ளார். ஒரே நேரத்தில் 15 லட்சம் பங்குகள் அவரது பேரன் ரோஹன் மூர்த்தியின் மகன் ஏகாக்ரஹ் ரோஹன் மூர்த்தி பெயரில் பதிவு செய்துள்ளார். தற்போது இன்ஃபோசிஸ் பங்கு ரூ.1601 என உள்ள நிலையில், 15 லட்சம் பங்குகளின் மதிப்பு ரூ. 240 கோடிக்கு மேல் இருக்கும் என சந்தை வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏகாக்ரஹ் ரோஹன் மூர்த்தி பிறந்து 4 மாதங்களே ஆகின்றன. தனது குட்டி பேரனுக்கு தாத்தா நாராயண மூர்த்தி 240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்துள்ளது இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் மொத்த பங்கு 0.40 சதவீதமாக இருந்தாலும், சமீபத்தில் அவர் தனது பேரனுக்கு 0.04 சதவீத பங்கை எழுதி கொடுத்துள்ளார். 0.40 சதவீத பங்குகளின் கீழ் மொத்தம் 1.51 கோடி பங்குகளை வைத்திருந்தார். தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு மதிப்பு 0.36 சதவீதத்தை எட்டியுள்ளது.
இளைய கோடீஸ்வரர்களில் இன்ஃபோசிஸ் வாரிசு:
நாராயண மூர்த்தி, சுதாமூர்த்தி தம்பதிக்கு அக்ஷதா மூர்த்தி என்ற மகளும் ரோஹன் மூர்த்தி என்ற மகனும் உள்ளனர். 2009 ஆம் ஆண்டு, மகள் அக்ஷதா மூர்த்தி, பிரிட்டனின் தற்போதைய பிரதமரான ரிஷி சுனக்கை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி பிரபல தொழிலதிபர் வேணு சீனிவாசனின் மகள் லட்சுமியை 2011 இல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2015ல் விவாகரத்து செய்து கொண்டனர். மேலும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2019ல், ரோஹன் மூர்த்தி அபர்ணா கிருஷ்ணனை மணந்தார். இவர்களுக்கு, கடந்த நவம்பர் மாதம் 2023ம் ஆண்டு, ஏகாக்ரஹ் ரோஹன் மூர்த்தி என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நான்கு மாதப் பேரனுக்கு நாராயண மூர்த்தி 15 லட்சம் நிறுவனப் பங்குகளை எழுதிக் கொடுத்தார். இவற்றின் மதிப்பு ரூ.240 கோடியாக இருப்பதால், ஏகாக்ரஹ் ரோஹன் மூர்த்தி நாட்டிலேயே இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.