'கடின உழைப்பை நம்பினார்; வாரத்தில் 80-90 மணி நேரம் உழைத்தார்’ - கணவர் நாராயண மூர்த்தி கருத்துக்கு சுதா மூர்த்தி ஆதரவு!
இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்த கருத்து இணையத்தில் எதிர்வினையாற்றி வரும் நிலையில், அவரது மனைவி சுதா மூர்த்தி நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்த கருத்து இணையத்தில் எதிர்வினையாற்றி வரும் நிலையில், அவரது மனைவி சுதா மூர்த்தி நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் பங்கேற்று பேசிய இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி,
“நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை அதிகரிக்க இளைஞர்கள் வாரத்தில் சரியாக 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் மட்டுமே சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுடன் இந்தியா போட்டியிட முடியும்,” எனத் தெரிவித்தார்.
இந்த கருத்து ஆதரவாகவும், எதிராகவும் பலரும் சோசியல் மீடியாக்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சில நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏன்? பிரபல மருத்துவர்கள் கூட 70 மணி நேரம் வேலை செய்வது இதயத்தை பாதிக்கும் எனக் கூறிவருகின்றனர்.
குறிப்பாக ஐடி ஊழியர்கள் நாராயண மூர்த்தியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்ஃபோசிஸில் புதிதாக வேலைக்குச் சேருவோருக்கு ஆண்டுக்கு ரூ. 3.5 லட்சம் சம்பளம் கொடுக்கும் போது எப்படி இத்தனை மணி நேரம் வேலை செய்ய முடியும்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் நாராயண மூர்த்தியின் கருத்து ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
அதே நேரத்தில், நாராயண மூர்த்தியின் கருத்துக்கு, இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவரும், பிரபல எழுத்தாளரும், அவரது மனைவியுமான சுதா மூர்த்தி பதிலளித்துள்ளார். தனது கணவரின் கருத்தை ஆதரித்துள்ள அவர், கடந்த காலங்களில் வாரத்திற்கு 80 முதல் 90 மணி நேரம் வரை நாராயண மூர்த்தி வேலை செய்ததாகக் கூறியுள்ளார்.
பிரபல செய்தித்தளத்திற்கு சுதா மூர்த்தி அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
“அவர் வாரத்திற்கு 80-90 மணி நேரம் வேலை செய்தார். அதற்கு மேல் அவருக்கு எதுவும் தெரியாது. அவர் தனது கடின உழைப்பை நம்பினார்; அதில் வாழ்ந்தார். அதனால் தான் நினைத்ததைச் சொன்னார்,” எனக்கூறியுள்ளார்.
கார்ப்பரேட் துறையின் தற்போதைய நிலை குறித்து விளக்கியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்து இருக்கலாம் எனக்கூறினார்.
பல ஆண்டுகளாக நாராயண மூர்த்தியிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று அவளிடம் கேட்டதற்கு,
“நான் நிறைய விஷயங்களை (அவரிடமிருந்து) கற்றுக்கொண்டேன். இலக்கை வைத்து அதற்காக உழைப்பதுதான் நம்பர் ஒன். இடப்பக்கமோ வலப்புறமோ திசை திருப்பாதீர்கள். அவர் ஒரு இலக்கை வைத்திருக்கிறார், அதைச் செயல்படுத்துகிறார். நீங்கள் வேலை செய்யும்போது, எந்த இலக்கையும் அடையாமல் அப்படியே விட்டுவிடாதீர்கள். மூன்றாவது விஷயம் - உங்களுக்கு பெரும் ஆர்வம் இருந்தால் மட்டுமே நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். உங்களின் புத்திசாலித்தனமோ, முட்டாள்தனமான உழைப்போ அல்ல, புத்திசாலித்தனமான கடின உழைப்புதான் உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும்,” என்றார்.
முன்னாள் இன்ஃபோசிஸ் சிஎஃப்ஓ மோகன்தாஸ் பாய் தொகுத்து வழங்கிய 3one4 கேபிட்டலின் பாட்காஸ்ட், தி ரெக்கார்டில் பங்கேற்ற நாராயண மூர்த்தி இந்திய இளைஞர்களின் வேலை உற்பத்தித்திறன் மிகவும் குறைவாக உள்ளதாக கூறினார். அதனால் தான் வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட வாரத்திற்கு 70 மணி நேரமாவது உழைக்க வேண்டும் என்றார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளும் இதையே செய்து வேகமாக முன்னேறியதாக சுட்டிக்காட்டினார்.
‘இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்யணும்’ - இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்து சர்ச்சை ஆனது ஏன்?