‘இன்ஸ்பிரேஷன் கதை’ - தலைமை வங்கி மேலாளர் ஆன இளநீர் விற்பவரின் மகன்!
வறுமையை வென்று இளநீர் கடைக்காரரின் மகன் வங்கி மேலாளரான கதை...
உடல் சூட்டை தணிப்பதற்கு எல்லோரும் இளநீர் குடிப்பது வழக்கம் இளநீர் நம்முடைய உடலை மட்டும் மருத்துவ குணத்தோடு குளுமைப்படுத்துவது எல்லோரும் அறிந்ததே. அந்த ஒவ்வொரு இளநீரும் ஒருவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுத்தது என்றால் அதை நம்புவது கடினம் என்றாலும் இந்த கதை அப்படிப்பட்ட ஒன்று தான்.
இளநீர் கடைக்காரரின் மகன் வங்கி மேலாளரான கதை
விழுப்புரம் அடுத்த ஒருகோடி கிராமம். பெரும்பாலும் யாரும் அறிந்திராத கிராமம் அதைச் சுற்றிலும் 15 கிலோ மீட்டருக்கு பச்சை பசேல் என பச்சைக் கம்பளம் விரித்தார் போல விவசாயம் நடக்கும் பகுதி அது. ஆனால், இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில கட்டிடங்கள் எழும்பி இருந்தாலும் இன்னமும் விவசாயிகள் நம்பிக்கையோடு விவசாயம் செய்து தான் வருகின்றார்கள்.
ஒரு கோடி கிராமத்தில் வசித்து வருபவர் தான் அய்யனார். இப்போது அவருக்கு 68 வயது இருக்கும். விவசாயக் கூலி வேலை, கூரை வீடு, என வாழ்க்கை. எல்லா நாட்களிலும் வேலை இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனாலும், அந்த வேலையை எல்லோரும் செய்து விடவும் முடியாது. அதைவிட அய்யனாருக்கு வேரொரு வேலையும் உண்டு, இளநீர் விற்பது.
கோடை காலங்களில் அதிக அளவு இளநீர் விற்பனையாகும். விழுப்புரத்தைச் சுற்றி உள்ள ஏதாவது ஒரு கிராமத்தில் இளநீர் வாங்கிக் கொண்டு விழுப்புரம் நகரப் பகுதியில் எங்காவது ஒரு மூலையில் சைக்கிளோடு இளநீர் விற்பனை செய்வார் அய்யனார்.
ஒரு இளநீர் எட்டு ரூபாய் அல்லது பத்து ரூபாய்க்கு தான் விற்கும். லாபம் எல்லாம் கணக்கு பார்க்க முடியாது வீட்டுக்கு வேண்டியது வாங்கியது போக மீதம் இருக்கும் காசில் மறுநாள் மீண்டும் இளநீர் வாங்கி விற்பனை செய்ய வேண்டும். ஆனால், அதைவிட அய்யனாருக்கு ஒரு பெரிய பொறுப்பு இருந்தது வீட்டிற்கு சமைக்க ஏதாவது வாங்குகிறோமோ இல்லையோ தன் பிள்ளை சிலம்பரசன் கல்விக்கு என்று காசு ஒதுக்கி வைப்பது தான் அவருடைய அந்த பொறுப்பு.
"ஒவ்வொருவரும் இளநீர் குடித்துவிட்டு நிம்மதியாக செல்லுகின்ற போது அய்யனார் முகத்தில் ஒரு மிகப்பெரிய மலர்ச்சி இருக்கும். அது ஏதோ தன் இளநீருக்கு காசு கிடைத்ததாக அய்யனார் நினைப்பதில்லை. ஒவ்வொருவர் கொடுக்குற காசும் தன் மகன் சிலம்பரசன் கல்விக்கு உதவப் போகும் என்பது தான் அந்த மகிழ்ச்சிக்கு காரணம்."
இப்படியாக ஒவ்வொரு இளநீராக விற்பனை செய்தும், கூரையில் விழல் வேய்தும், கூலிக்கு விவசாய வேலை செய்தும் தன் மகன் சிலம்பரசனை வேளாண் கல்வி படிக்க வைத்தார் அய்யனார்.
அதன் விளைவு இப்போது சிலம்பரசன் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளர். அது பற்றி சிலம்பரசனே சொல்லுகிறார்....
வங்கியில் மேலாளர் ஆனது எப்படி?
எங்க ஊர்ல இருந்து விழுப்புரம் நகரத்துக்கு போக 15 கிலோமீட்டர் ஆகும். அப்போ எல்லாம் ஊருக்குள்ளே பஸ் வருவது கிடையாது. ஊரிலிருந்து நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர் மெயின் ரோட்டுக்கு நடந்தே தான் வர வேண்டும். அங்குதான் பஸ் வரும் அங்கிருந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் வரைதான் பஸ்.
அங்கே இறங்கி இரண்டு கிலோமீட்டர் பள்ளிக்கு நடந்தே தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் இப்படித்தான் பள்ளிக்குச் செல்வேன். புத்தகம் எடுத்து வைக்கிறானோ இல்லையோ மதிய உணவுக்கு தட்டு எடுத்து வைத்துக் கொள்வேன். வீட்டில் எல்லாம் நான் நினைக்கிற மாதிரி உணவு கிடைக்காது பள்ளிக்கூடத்தில் போடும் சத்துணவு தான் எனக்கு உணவு.
நான் மட்டுமல்ல என்னைப் போல எவ்வளவோ பேருக்கு அதுதான் அப்போது உணவாக இருந்தது. என்னை எப்படியாவது படிக்க வைத்து ஒரு அரசாங்க வேலை வாங்கிவிட வேண்டும் என்று என்னுடைய அப்பா பெரிய கனவு கண்டு கொண்டிருந்தார். என்னை மட்டுமல்ல என்னுடைய அக்காவையும் படிக்க வைத்தார்.
அப்போது பத்தாம் வகுப்பில் என்னுடைய அக்கா 450 மதிப்பெண் பெற்றார். எங்களின் அண்ணன் படித்து, போஸ்ட் ஆபீசில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது கொஞ்சம் வருமானமும் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு அக்கா கல்லூரி வரை படித்தார். ஒரு வழியாக அக்கா வேலைக்கு சென்று விட்டாலும் என்னுடைய படிப்புக்கு ஆதார செலவில் கவனம் செலுத்தினார் அப்பா.
நான் பத்தாம் வகுப்பில் 500க்கு 387 மதிப்பெண் பெற்றேன். 2006 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பில் 1200க்கு 730 மதிப்பெண் பெற்றேன். எங்கள் ஊரில் மணிவாசகம் என்று ஒருவர் இருந்தார் அவர் என் மீது அக்கறை கொண்டு நான் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் பிஎஸ்சி அக்ரி படிக்க பரிந்துரை செய்தார்.
அவரே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கில்லி குளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் என்னை கல்லூரியில் சேர்த்து விட்டார். என்னை கல்லூரியில் சேர்த்து விடக் கூட என்னுடைய அப்பா என்னுடன் வரவில்லை. காரணம் அவருக்கு அந்த அளவுக்கு வெளிஉலகம் தெரியாது.
அவருக்கு தெரிந்ததெல்லாம் இளநீர் வியாபாரம் கூலி விவசாயம் இதுதான். அப்பாவாவது நான் கல்லூரியில் படிக்கும் போது ஒன்றிரண்டுமுறை வந்திருக்கிறார் அம்மா ஜெயலட்சுமி அது கூட வந்தது கிடையாது.
நான் தமிழ் மீடியத்தில் படித்ததால் கல்லூரியில் சேர்ந்தவுடன் மற்ற மாணவர்களுடன் இயல்பாக பழக முடியவில்லை. எனக்கு சீனியர் மாணவர்கள் விழுப்புரம் பகுதியில் சேர்ந்தவர்கள் ஒரு சிலர் இருந்ததால் அவர்களோடு பழகி கொஞ்சம் கொஞ்சமாக நான் சக மாணவனாக மாறிப் போனேன். பின்னர்,
”கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கும் அளவிற்கு நான் தயாராகி விட்டேன் அப்போதுதான் எனக்கு இயல்பு வாழ்க்கை எது மக்களோடு சேர்ந்து பயணிக்கக் கூடிய அனுபவங்கள் கிடைத்தது. அது என்னை மேலும் செழுமைப்படுத்தியது இருந்தாலும் எப்படியாவது ஒரு அரசு அதிகாரியாக ஆகிவிட வேண்டும் என்பதில் இருந்து நான் கொஞ்சம் கூட பின் வாங்கவில்லை.”
ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். கல்லூரிக்கு அப்பா எங்கள் ஊர் பகுதியில் உள்ள வங்கியில் கல்விக் கடன் பெற்று தான் என்னை படிக்க வைத்தார். கல்விக் கடன் தருவதற்கு வங்கி மேலாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நான் இப்போது நினைத்து என்னை ஒழுங்குப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.
கடன் வாங்குவதற்கு அப்பாற்பட்ட அவமானங்களை வார்த்தைகளால் கூட சொல்ல முடியாது அவ்வளவு அவமானப்பட்டார் அப்பா. 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே போதுமா? என்றால் போதாது மேற்கொண்டு பல செலவுகள் இருக்கிறது மாதம் ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 வரை செலவாகும் 4 ஆண்டுகளும் இப்படித்தான் ஆனது.
ஒவ்வொரு மாதமும் அப்பாவை பார்க்க வருகின்ற போதெல்லாம் பத்து ரூபாய் நோட்டுக்களை பிரித்து அடுக்கி என்னிடம் கொடுப்பார். அந்த ரூபாய் நோட்டுகளில் இளநீர் விற்ற அவர் வியர்வை வாசம் வீசிக்கொண்டே இருக்கும். 10 ரூபாய் நோட்டுகளைக் கூட ஒன்றாக வைத்து என் அப்பாவிற்கு எண்ணத்தெரியாது.
இப்படியாக ஒரு வழியாக கல்லூரி முடித்தேன். கல்லூரியில் அப்போது வேலைக்கு தேர்வு செய்யும் நிறுவனங்கள் வந்திருந்தது, பெரும்பாலும் அரசு நிறுவனங்கள் தான். அதில், இந்தியன் வங்கி மூலமாக, நான் விவசாயிகள் கள ஆய்வு அதிகாரியாக தேர்வானேன்.
வங்கி மேலாளர் வேலை
திண்டிவனம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் பணி. அதன் பின்னர், ஊத்தங்கரை, நாகை மாவட்டம் தரங்கம்பாடி, திருவாரூர் மாவட்டம் புலிவலம், கும்பகோணம் அருகே உள்ள மதுக்கூர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆகிய இந்தியன் வங்கிக் கிளைகளில் மேலாளராக பணியாற்றினேன்.
எங்கள் வீடு கூரை வீடு தான். வெயில் காலங்களில் இருந்து விடலாம் மழைக் காலங்களில் அதுவும் இரவு நேரங்களில் அங்கங்கே மழை நீர் சொட்டும் நாங்கள் சமைப்பதற்கு பாத்திரங்களை அதிகம் பயன்படுத்தியதை விட மழை நீரை பிடிக்கவே பாத்திரங்களை அதிகம் பயன்படுத்தி இருக்கிறோம்.
காலையில் எழுந்து அதிகாலையில் புறப்பட்டு ஒவ்வொரு ஊராக சென்று இளநீர் பறித்து, அதை சைக்கிளில் கட்டிக் கொண்டு விழுப்பரத்தின் வீதிகளில் இளநீர் விற்று காசு சம்பாதித்த என்னை படிக்க வைத்த அப்பா இனிமேலும் வேலைக்கு போகக்கூடாது என்று முடிவு செய்தேன்.
மழை நேரத்தில் இரவு தூக்கம் இல்லாமல் சொட்டுகிற மழை நீரை பிடிக்கிற வேலையை தூங்காமல் விழித்திருந்து, நாங்கள் எல்லாம் பள்ளியில் சென்று தூங்கி வழிந்த நினைவுகள் என் முன்னால் அவ்வப்போது வந்து நிற்கும்.
இனிமேலும், அது தொடரக்கூடாது என அங்கே கான்கிரீட் வீடு ஒன்றை கட்டினேன். ஆனாலும், என்னுடைய அப்பா அங்கு நிம்மதியாக தூங்குகிறாரா என்று எனக்கு தெரியவில்லை, காரணம் வேலை செய்தே பழக்கப்பட்டதால் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே தான் இருப்பார்.
வேலை கிடைத்து அப்பா அம்மாவை கவனித்துக் கொண்டிருந்த எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். இப்போது மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
என்னை அப்பா சிரமப்பட்டு படிக்க வைத்ததன் விளைவு, என்னுடைய தம்பி கல்வியரசனை என் வருமானத்தைக் கொண்டு நான் படிக்க வைத்து இப்போது அவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றுகிறார்.
நான் இப்போ திருவண்ணாமலையில் முன்னோடி வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறேன். இலவசப் பேருந்தில் பயணித்து, சத்துணவு சாப்பிட்டு கல்வி கற்பதற்காக கடன் வாங்கி ஒரு வழியாக நான் என் கல்வியால் ஒரு வங்கி மேலாளர் பதவிக்கு உயர்ந்து வந்திருக்கிறேன் என்றால் என்னை ஊக்குவித்த என்னுடைய அப்பா அய்யனார்தான் இதற்கெல்லாம் காரணம்.
எல்லோரையும் போல அவர் ஏதோ வந்தால் படிக்கட்டும் என்று விடாமல், படிப்பதற்கு என்ன தேவையோ அதை எல்லாம் எனக்கு பெற்றுக் கொடுத்து படிக்க வைத்தார். இப்போது தூங்கும் போது கூட அப்பாவின் இளநீர் சைக்கிளும் சீவிக் கொடுக்கிற கத்தியும் என் கண் முன்னே வந்து நிற்கும்.
இப்போது கல்வி என்று வருகிற எந்த இளைஞருக்கும் நான் வங்கி மேலாளராக இருக்கும் எந்த வங்கியிலும் கடன் இல்லை என்று சொல்வதில்லை. ஏனென்றால் கல்விக் கடன் பெறுவதற்கு என்னுடைய அப்பா ஒவ்வொரு வங்கியாக படியேறி இறங்கி அவமானப்பட்டது இன்றும் என் முன்னே வந்து நிற்கும்.
கிராமத்தில் என்னை எவ்வளவு பேர் ஏளனம் செய்திருப்பார்கள். அவர்களெல்லாம் தலை குனிந்து நடக்கும் படி நான் நிமிர்ந்து நடந்து செல்லுகிறேன்.
இதற்கெல்லாம் காரணம் நான் என்ன படிக்கிறேன் என்று கூட தெரியாமல் எனக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த என் அம்மா ஜெயலட்சுமி. தேவையில்லாமல் நான் எதையும் கேட்க மாட்டேன், என்று நான் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்த என் அப்பா அய்யனாரையும் உயிர் உள்ளவரை என்னால் மறக்க முடியாது.
கட்டுரையாளார்: ஜோதி நரசிம்மன்
Edited by Induja Raghunathan