கூலித் தொழிலாளர்களின் மகன் சத்யராஜ் டிஎஸ்பி ஆன இன்ஸ்பிரேஷன் கதை!
குடிசை வீட்டில் கூலித்தொழிலாளர்களின் நான்கு பிள்ளைகளில் ஒருவராக பிறந்த சத்யராஜ், கல்வியால் மட்டுமே வாழ்க்கையின் உயருத்துக்கும், சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழமுடியும் என்று சிறுவயது முதல் அயராது படித்து, டிஎஸ்பி பதவி வரை உயர்ந்துள்ளார்.
12 வயசு இருக்கும் பொழுது அப்பா பெங்களூர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு போயிட்டார். அவருக்கு எவ்வளவு கூலி கொடுக்குறாங்க அப்படிங்கற விபரமே தெரியாது. அவருக்கு தெரிஞ்ச வரைக்கும் கடைசியா வாங்குன அதிகப்படியான கூலி 100 ரூபாய். நான் டிஎஸ்பி ஆவேன்னு யாருமே எதிர்பார்க்கல. ஆனா எனக்கு மட்டும் ஒரு உயர் பதவிக்கு வரணும் அப்படிங்கற அந்த வெறி இருந்துச்சு...
கூலித்தொழிலாளி மகன் டிஎஸ்பி ஆன கதை
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகரத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தூரம் இருக்கும் அகரம் சித்தாமூர். அங்கங்க ஒரு வீடு இப்பதான் தொடர்ச்சியாக வீடுகள் இருக்கிறதா அந்த ஊர்க்காரங்க சொல்றாங்க. இன்னமும் கூட அந்த ஊருக்கு அவசரமா போகணும் அப்படின்னா பாதை இல்ல அப்படிங்கறது அங்க இருக்குற மக்களுடைய பெரிய வருத்தமா இருக்குது.
ராத்திரி நேரத்துல திடீர்னு யாருக்காவது பூச்சி பொட்டு கடிச்சுருச்சுன்னா ஆம்புலன்ஸ் கூட அது உள்ள வர முடியாது அஞ்சு கிலோமீட்டர் சுத்திகிட்டு தான் வரணும். இந்த மாதிரி சூழ்நிலைல தான் இந்த கிராமம் இன்னுமும் இருந்துகிட்டு இருக்கு. அப்படிப்பட்ட கிராமத்தில் படிச்சு தமிழ்நாடு காவல்துறையில் ஒரு டி.எஸ்.பி ஆக உருவெடுத்திருக்கிறார் சத்யராஜ்.
விழுப்புரம் மாவட்டம் அகரம் சித்தாமூர் அப்படி என்கிற கிராமத்தில் வசிக்கிற கலியமூர்த்தி அமிர்தவல்லி ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் தான் சத்யராஜ். அவருடன் பிறந்தவங்க இரண்டு அக்கா ஒரு அண்ணன் கூட பிறந்தவங்க யாரும் பெருசா படிக்கல கலியமூர்த்திக்கு கூலி வேலை பெங்களூர் மார்க்கெட்டில் சுமை தூக்குற வேலை.
கலியமூர்த்திக்கு 12 வயசு இருக்கும் போதே பெங்களூருக்கு மார்க்கெட் வேலைக்கு போயிட்டார். குடும்பம் ரொம்ப வறுமையில் இருந்ததால வெளியூர் போய் எங்கேயாவது பொழப்பு நடத்தி கிடைக்கிற காச கொண்டு வந்து குடும்பம் நடத்துற சூழல் தான் கலியமூர்த்தி குடும்பத்துக்கு.
என்ன சாப்பிடறோம் எங்க படுத்து இருக்கோம் அப்படிங்கற எந்த விவரமும் கலியமூர்த்திக்கு அப்பெல்லாம் தெரியாது வயசு ஆக ஆக வீட்டில கலியமூர்த்திக்கு அமிர்தவல்லியை திருமணம் முடிச்சாங்க. பெருசா எதுவும் குடும்பத்துக்குன்னு சொத்து இல்லை. இருக்கிற கொஞ்ச நிலத்துல ஏதாவது பயிர் செஞ்சு சாப்பாட்டுக்கு தேவையானத எடுத்துக்கிற சூழல் தான் அப்ப இருந்தது.
கலியமூர்த்தி அமிர்தவள்ளிக்கு நாலு குழந்தைங்க ரெண்டு பொண்ணு ரெண்டு பையன். குடும்பம் வறுமையில இருக்கிறதால பிள்ளைகளை படிக்க வைக்கிறது அப்படிங்கறது குதிரை கொம்பா இருந்திருக்கு அவருக்கு. பெண் பிள்ளைகள் இரண்டையும் ஒரு பொண்ணு பத்தாவது வரைக்கும் இன்னொரு பொண்ண நாலாவது வரைக்கும் படிக்க வைத்திருக்கிறார். மூத்த மகன் ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கிறார் அதற்கு மேலே படிக்க வைப்பதற்கு வசதி இல்லை.
நான்காவது மகன் சத்யராஜ் தான் அதிகம் படித்தவர் அந்த வீட்டில் சத்யராஜ் அகரம் சித்தாமூர் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்துள்ளார். அதற்கு பிறகு அனந்தபுரம் அரசு பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
பத்தாம் வகுப்பில் சத்யராஜ் 500 மதிப்பெண்ணுக்கு 422 மதிப்பெண்ணும் பன்னிரண்டாம் வகுப்பில் 1200 மதிப்பெண்ணுக்கு 851 மதிப்பெண்ணும் எடுத்திருக்கிறார்.
அவருடைய கல்வி பயின்ற அனுபவத்த டிஎஸ்பி சத்யராஜ் அவருடைய குரலாகவே பதிவு செய்கிறார்.
கல்வியின் அவசியத்தை உணர்ந்த சத்யராஜ்
ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் சொந்த ஊரிலே படிச்சதால பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லன்னு சொல்லலாம். எல்லாரையும் போலவே பள்ளிக்கூடம் போறதும் வீட்டுக்கு வருவதும் படிக்கிறதுமா இருந்துட்டேன். ஆனாலும் கூட மத்தவங்களை காட்டிலும் படிப்பு மேல கொஞ்சம் அக்கறை எனக்கு சின்ன வயசுல இருந்து அதிகம்.
எங்கள் வீட்டில் அண்ணன் அக்கா எல்லோரும் படித்தாலும் அவங்க வீட்ல படிக்கிற அந்த காட்சியை நான் பார்த்ததே கிடையாது. ஐந்தாம் வகுப்புக்கு அப்புறம் அருகில் இருக்கிற அனந்தபுரம் அரசுப் பள்ளியில் சேர்த்தார் அப்பா. அங்க எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. காரணம் வழக்கமாக வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் போயிட்டு வரும் எனக்கு அங்க போனதுக்கு அப்புறம் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிற அனுபவம்.
வெவ்வேறு ஊரில் இருந்து நிறைய பேர் வருவாங்க என் கூட படிக்கிறவங்க மட்டும் இல்லாம மத்த வகுப்பு படிக்கிறவங்க எல்லாரும் அந்த ஹாஸ்டல்ல இருப்பாங்க. நான் எல்லார்கூடயும் இயல்பா பழகக்கூடியவனா இருந்ததால எல்லோரும் என்கிட்ட அன்பா பழகுவாங்க. சாப்பிடுற நேரம் போக மத்த நேரம் நான் புத்தகமும் கையுமா தான் இருப்பபேன். எனக்கு எப்படியாவது படிச்சு ஒரு அரசு வேலைக்கு போனோம் என்ற ஆர்வம் அங்க தான் அதிகமானது.
படிக்கும் போதெல்லாம் அப்பா அம்மாவை தான் அதிகமா நினைச்சுக்குவேன் கடைசி வரைக்கும் கூலி வேலையே செய்து கொண்டு இருக்கிறது இவங்கள எப்படியாவது உட்கார வைத்து சோறு போடணும் அப்படிங்கிற அந்த ஆர்வம் எனக்குள்ள அதிகமாயிடுச்சு.
அனந்தபுரம் ஹாஸ்டல்ல நான் தங்கி படிக்கும்போது எனக்கு உறுதுணையா என்னை ஆறுதல் படுத்துகிற ’நீ நல்லா வருவ’ அப்படின்னு தட்டிக் கொடுக்கிற ஆசிரியர் குமாரசாமி அவரை நான் மறக்கவே மாட்டேன் எல்லா மாணவர்களிடமும் ரொம்பவும் அன்பா பழகுவார்.
தன்னுடைய சொந்த காசை கூட சாப்பாட்டுக்கு செலவு செய்த ஒரு ஹாஸ்டல் வார்டன் அவர். என் கூட படிச்சவங்க எல்லாருடையும் அன்பா பழகுவார் அவர் பழகுற விதம் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். நான் டிஎஸ்பி ஆனதுக்கு அப்புறம் ஒரு முறை அவரை நேரில் சந்தித்தேன். ரொம்ப சந்தோஷப்பட்டார். என்னுடைய கஷ்ட காலத்திலும் இது மாதிரி நல்ல உள்ளங்கள் அடிக்கடி குறுக்கிட்டு என்ன செழுமைப்படுத்திச்சி அப்படின்னு சொல்லலாம்.
பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து அதுக்கப்புறம் மேல்மருவத்தூர் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.இ. படிக்க தொடங்கினேன். எவ்வளவோ கஷ்டம் இருந்தாலும் எனக்கு படிப்பு மேல இருக்கிற ஆர்வமும், அக்கறையும் எங்க அப்பாவை சோர்வடையாம கடனாவது வாங்கி படிக்க வைக்கணும் அப்படிங்கிற ஒரு எண்ணத்தை உருவாக்கிடுச்சு.
அப்பா காசு பத்தி எல்லாம் கவலைப்படாத நீ மேலும் மேலும் படிக்கணும் அதுக்காக நான் எதையும் இழக்க தயாரா இருக்கேன் அப்படின்னு சொன்னாரு. பி.இ. படிக்க ஆரம்பிக்கும் போது தான் எனக்கு என்னுடைய சில இயலாமைகள் என்னை சீராக்க உதவி செய்தது அப்படின்னு சொல்லலாம்.
ஆமாங்க 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிச்சிட்டு கல்லூரி ஆங்கில வழிக்கு போனதுக்கு பிறகு முதல் ஒரு வருஷம் என்னால சக மாணவர்களுடன் சாதாரணமாக பழக முடியாம போயிடுச்சு அவங்க எல்லாம் நுனி நாக்கில் ஆங்கிலம் உச்சரிக்கிறது ஆசிரியர்கள் கேட்கிற கேள்விகள் ஆங்கிலத்தில் மாணவர்கள் சொல்லுகிற பதில் ஆங்கிலத்திலும் இருந்தது. எனக்கு அவங்க கிட்ட இருந்து இது ஒரு இடைவெளியை ஏற்படுத்துச்சு.
நிறைய நேரம் வகுப்புக்கு போகாம வெளியிலேயே நிப்பேன் ஏன்னா உள்ள நடத்துற விஷயமும் மாணவர்கள் சொல்லுகிற பதிலும் கூட என்னால புரிஞ்சுக்க முடியாத சூழல் இருந்துச்சு காரணம் எனக்கு மொழி அறிவு இல்லாததுதான் அப்படின்னு நான் உணர்ந்தேன்.
ஆனாலும், நான் சோர்ந்துடல முதல் வருஷமே அதற்கான பல முயற்சிகள் எடுத்து நானும் எல்லோரும் போல ஆங்கிலம் பேசுகிற அளவுக்கு என்னை வளர்த்துகிட்டேன். ரொம்ப நாள் வகுப்புகளை கவனிக்காமல் இருந்த நிலையிலும் கூட நான் முதல் வருஷம். அரியர் வைக்காமலே தேர்ச்சிபெற்றேன்.
இது சக மாணவர்கள் மத்தியில ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுக்கப்புறம் எனக்கு ஆங்கிலம் சரளமாக பேசும் எழுதவும் படிக்கவும் வந்துவிட்டது.
ஒவ்வொரு முறையும் நான் சோர்ந்து போகும் போதெல்லாம் எனக்கு முன்னாடி சுவை தூக்குற எங்க அப்பாவும் ஏதாவது ஒரு விவசாய நிலத்துல கூலிக்கு களை எடுக்கிற எங்க அம்மாவுந்தான் தெரிவாங்க. அந்த கஷ்டம் தான் என்ன இந்த அளவுக்கு கொண்டு வந்து சேர்த்துச்சு அப்படின்னு சொல்ல முடியும்.
ஒரு வழியா பொறியியல் படிப்பு படிச்சு முடிச்சேன் 76%-க்கு மேல மார்க் இனிமே எப்படியாவது ஒரு வேலைக்கு போயிடனும் அப்படிங்கிற முடிவில் இருந்த நான் சென்னையில ஒரு கோச்சிங் சென்டரில் சேர்ந்து சிவில் சர்வீஸ் சம்பந்தப்பட்ட படிப்பை படிக்கத் தொடங்கினேன். சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கேற்று ஏதாவது ஒரு அரசு வேலை கிடைக்கும் அப்படிங்கிற எண்ணம் தான் எனக்குள்ள 2012 வரைக்கும் இருந்துச்சு.
அரசு வேலைக்கு முனைப்புடன் உழைத்த சத்யராஜ்
அதற்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கத் தொடங்கினேன். அங்கு எனக்கு கோச்சிங் கொடுத்த கோபு பிரசன்னா, சுபாஷ் சந்திர போஸ், மாதவன் இவங்க எல்லாம் மறக்கவே முடியாது என் மேல தனி அக்கறை எடுத்துக்கிட்டு எனக்காக பயிற்சி கொடுத்தாங்க.
அவங்க கொடுத்த பயிற்சியில நான் தேர்வில் பாஸ் ஆகி தொழிலாளர் நலத்துறையில 2017ம் ஆண்டு 14 ஆயிரம் சம்பளத்திற்கு ஒரு அரசு வேலை கிடைத்தது. ஆனாலும், எனக்கு இதைவிட பெரிய வேலை ஏதாவது செய்யணும் அப்படிங்கற எண்ணத்தில உறுதியாக இருந்ததால வேலைக்கு போயிட்டு மேலும் படிக்கத் தொடங்கினேன்.
அப்படி படிக்கத் தொடங்கின எனக்கு 2018 டிஎன்பிஎஸ்சி தேர்வுல கூட்டுறவுத் துறையில் முதல் நிலை ஆய்வாளர் பணிக்கு தேர்வாகி முப்பதாயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். ஆனாலும் எனக்கு வேறு ஏதோ ஒரு துறையில் சாதிக்கணும் அப்படிங்கிற எண்ணம் மனசுக்குள்ள இருந்துகிட்டு இருந்தது.
2019ல் நடந்த குரூப் ஒன் தேர்வில் பங்கு பெற்று அதுல நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைஞ்சு காவல்துறையில் காவல்துணை கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வானேன்.
2019 வரைக்கும் ஒரு வருஷம் சென்னையில் டிஎஸ்பி பதவிக்கான பயிற்சி முடிந்து, 2020வது வருஷம் கரூரில் பயிற்சி டிஎஸ்பி சேர்ந்த அங்க சாதாரணமா ஸ்டேஷன் வாசல்ல துப்பாக்கியோட காவலுக்கு நிக்கிற காவலர் பணியில் இருந்து ஆய்வாளர் பணி வரைக்கும் பயிற்சி கொடுத்தாங்க. பயிற்சி நல்லபடியா முடிச்சுட்டு 2021ல பழனியில் டிஎஸ்பியா நியமிக்கப்பட்ட அதே வருஷம் எனக்கு யோகேஸ்வரி கூட திருமணம் நடந்துச்சு.
எனக்கு வேலை கிடைச்சதும் நான் செய்த முதல் வேலை எங்க அப்பாவ வேலைக்கு போகக்கூடாது என்று நிறுத்தினது தான். எப்பயும் வீட்டோட தான் அப்பாவும் அம்மாவும் இருந்து ரெஸ்ட் எடுக்கணும்ன்னு சொல்லிட்டேன்.
எங்க அம்மாவுக்கு வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிடுங்கனு சொல்ற பழக்கம் எனக்கு நினைவில் தெரிந்ததில் இருந்து இருக்கு. ஏன்னா எங்களுக்கு சாப்பாடு அப்படிங்கறது ஒரு திருவிழாவில் கலந்து கொள்கிற மாதிரியான காலங்கள் இருந்துச்சு. அதனாலதான் அம்மா யாரு வீட்டுக்கு வந்தாலும் சாப்பிடுங்க அப்படின்னு சொல்ற பழக்கம் வந்துருச்சு.
வாழ்க்கையில கல்வி ரொம்ப முக்கியம் அப்படிங்கிறத நான் ரொம்ப தெளிவா புரிஞ்சுகிட்டேன். எதிர்காலத்தில் நான் பார்க்கிற எல்லா இளைஞர்களும் சொல்லுகிற அறிவுரை என்னன்னா ஒரு லட்சியத்தோட படிங்க நிச்சயம் முன்னேறலாம் அப்படிங்கிறதாங்க, என்றார் சத்யராஜ்.
கட்டுரையாளர்: ஜோதி நரசிம்மன்
‘காய்கறிக்காரர்’-னு கூப்டவங்க ‘டாக்டர் அப்பா’-னு கூப்பிட வெச்சது பெருமை - Dr.சிவகாமியின் இன்ஸ்பிரேஷன் கதை!