மூளைச்சாவு வரை போய் தன்னம்பிக்கையுடன் மீண்டு தொழில் முனைவராய் சிறகடிக்கும் ரோசி அயன்குட்டி!
சென்னையைச் சேர்ந்த ரோசி அயன்குட்டி 20 வயதில் GBS என்கிற அரிய நோய் பாதிப்பிற்கு உள்ளாகி மற்றவர் துணையின்றி நிற்கவோ நடக்கவோ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தன்னம்பிக்கையுடன் மீண்டெழுந்து ஆளுமை மேம்பாட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
சென்னையைச் சேர்ந்தவர் ரோசி அயன்குட்டி. இவரது வாழ்க்கை 20 வயது வரை உற்சாகமாக, துறுதுறுப்புடனும் கனவுகளுடனும் லட்சியங்களுடன் இருந்து வந்தது. ஆனால்,
திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் கோளாறு இவரை படுக்கையில் முடக்கிப்போட்டது. எழுந்து நிற்பது, நடப்பது, கழிப்பறை செல்வது என எந்த ஒரு வேலையையும் மற்றவர் உதவியின்றி செய்யமுடியாமல் போனது.
இந்த திடீர் சவாலை திறம்பட எதிர்கொண்டார் ரோசி. தன்னுடைய நேர்மறையான சிந்தனைகளாலும் தன்னம்பிக்கையாலும் ஊக்கம் பெற்று நோயிலிருந்து மீண்டெழுந்தார்.
அதுமட்டுமா? இதே பாசிட்டிவ் சிந்தனைகளையும் தன்னம்பிக்கையையும் மற்றவர்கள் மனதிலும் விதைக்கும் வகையில் ஆளுமையை மேம்படுத்தும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இனி ரோசி அயன்குட்டியின் ஊக்கமிகு பயணத்தைப் பார்க்கலாம்….
ரோசி அயன்குட்டி தன்னம்பிக்கை கதை
ரோசி அயன்குட்டி 2006ம் ஆண்டு தனது கேரியரைத் தொடங்கியிருக்கிறார். கல்லூரிப் படிப்பை முடித்த ரோசி, கேரியர் கவுன்சிலிங் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து 2007-ல் ஐடி நிறுவனத்தில் சேர்ந்தார்.
“அது ஒரு கால் செண்டர். வெளிநாட்டு கிளையண்ட்ஸ்கூட இண்டராக்ட் பண்ணணும். நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கணும். எங்க வீட்ல ஆறு ஆம்பளை பசங்க, மூணு பொண்ணுங்க. எல்லாரையும் கம்பேர் பண்ணும்போது நான் மட்டும் எங்க வீட்ல வித்தியாசமானவளா இருப்பேன். நைட் ஷிஃப்ட் வேலை பத்தி சொன்னனும் வீட்ல ஒத்துக்கலை. சேஃப்டி இல்லைன்னு நினைச்சு அம்மா பயந்தாங்க,” என்று அந்த நாட்களை நினைவுகூர்ந்தார்.
வேலைக்கு செல்ல பெற்றோரை சம்மதிக்க வைப்பது கடினமாக இருந்துள்ளது. அதுமட்டுமல்ல அங்கிருந்தவர்கள் மேற்கத்திய பாணியில் பேண்ட், டாப்ஸ் என நாகரீகமாக உடையணிந்திருக்க, அதற்கும் ரோசியின் பெற்றோர் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை.
”எல்லாரும் போடறாங்களே. நான் மட்டும் எப்படி வித்தியாசமா டிரஸ் பண்ணிட்டு போறதுன்னு யோசிச்சேன். ஜீன்ஸ், டாப்ஸ் போடணும்னு வீட்ல அடம் பிடிச்சு ஒத்துக்கவைச்சேன்,” என்கிறார் சிரித்தபடி.
பகலில் தூக்கம். இரவு நேர ஷிஃப்டில் வேலை என 2008ம் ஆண்டு இறுதி வரை நாட்கள் இப்படியே நகர்ந்திருக்கின்றன.
உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
2008ம் ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் சமயத்தில், ரோசி எண்டர்டெயிண்ட்மெண்ட் சப்போர்ட் பிரிவில் இருந்ததால், வேலைப்பளு அதிகம் இருந்துள்ளது. வழக்கமான பணி நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டியிருந்தது. அந்த சமயத்தில் ஒருமுறை திடீரென்று காலில் வலியை உணர்ந்திருக்கிறார் ரோஸ்.
”நான் வழக்கமா சேர்ல உக்கார்ந்தாலும் காலை சம்மணம் போட்டுதான் உக்காருவேன். ஆனா அப்ப என்னால அந்த மாதிரி உக்கார முடியலை. தாங்க முடியாத வலி. வீட்ல வந்து கால் வலிக்குதுன்னு சொல்லிட்டே இருப்பேன். வீக்னெஸ்தான் காரணமாக இருக்கும்னு எல்லாரும் சொன்னாங்க. டாக்டரை பார்த்தாச்சு, வீட்டு வைத்தியம் ட்ரை பண்ணியாச்சு. எதுக்கும் வலி குறையவே இல்லை,” என்கிறார்.
வலி குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் ரோசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
“அப்ப எனக்கு கால் வலி இருந்துது. அப்புறம் டேஸ்ட் பட்ஸ் எதுவும் வேலை செய்யலை. கால் வலி அதிகமாகி ஒருகட்டத்துல ஒருத்தரோட சப்போர்ட் இல்லாம நடக்கவோ, உக்கார்ந்து எழுந்திருக்கவோ முடியாம போயிடுச்சு,” என்கிறார்.
மருத்துவர்களும் பலவீனமாக இருப்பதாலேயே இந்த பிரச்சனைகள் வருவதாக சொல்லியிருக்கின்றனர்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார் ரோசி. ஒருகட்டத்தில் அவர் பேசும்போது வார்த்தைகளைத் தவறாக உச்சரிப்பதுபோல் அவருக்குத் தோன்றியுள்ளது. வாய் குழறியது. அதுமட்டுமல்ல, வாய் சற்று கோணலாக இருப்பதை அவரது அம்மா கவனித்தார்.
“21 வயசு பொண்ணுக்கு இப்படி ஆனதை நினைச்சு எங்கம்மா ரொம்பவே வேதனைப்பட்டாங்க. வேற ஒரு ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. எங்கண்ணன்தான் என்னைத் தூக்கிட்டுப் போய் ஸ்ட்ரெச்சர்ல படுக்க வெச்சாங்க. என்னை அட்டெண்ட் பண்ண வந்த ஒரு நர்ஸுக்கும் வாய் கொஞ்சம் கோணலா இருந்துது. அவங்களைப் பார்த்ததும் எனக்கு சுத்தமா நம்பிக்கையே போயிடுச்சு. இனிமே நாம இப்படியேதான் இருக்கப்போறோம்னு நினைக்க ஆரம்பிச்சிட்டேன்,” என்கிறார்.
நரம்பியல் நிபுணரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்கள்.
“ஸ்கேன் எடுத்து பார்த்தாங்க. 2-3 லட்சம் செலவாகும். 2 இன்ஜெக்ஷன் போடறோம். அவ உடம்பு ரெஸ்பாண்ட் பண்ணா நடக்க சான்ஸ் இருக்கு. இல்லைன்னா இப்படியேதான் இருப்பான்னு சொல்லிட்டாங்க,” என்கிறார்.
ரோசியின் குடும்பம் நடுத்தர வர்த்தகம் என்பதால் சக்திக்கு மீறி சிகிச்சைக்காக அதிகம் செலவு செய்துள்ளனர். ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு ஊக்கமளித்துள்ளனர். குடும்பத்தினரின் ஆதரவுதான் ரோசிக்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளது.
முன்னேற்றத்துக்கு உதவிய தன்னம்பிக்கை
இப்படியே நாட்கள் நகர்ந்தன. வெவ்வேறு மருத்துவமனைகள். வெவ்வேறு மருத்துவர்கள். வெவ்வேறு மருந்துகள். எதுவும் பலனளிக்கவில்லை.
”கடைசியில எனக்கு Guillain-Barre Syndrome (GBS) இருக்கறதைக் கண்டுபிடிச்சாங்க. இது ஆட்டோ இம்யூன் நோய். ரொம்ப அரிய வகையை சேர்ந்தது. இது ஏன் வருதுன்னு காரணமும் தெரியாது. பிராப்பர் மெடிகேஷனும் இல்லை,” என்கிறார்.
ஒருகட்டத்தில் உணவுக் குழாய் மூடிவிட்டது. எதையும் விழுங்க முடியவில்லை. வெண்டிலேட்டரில் இருக்கவேண்டும். இப்படியே நிலைமை மோசமாகிக்கொண்டே போனால் மூளைச்சாவு அடைந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
”நான் ரொம்ப ரிலீஜியஸ் பர்சன். நான் எனக்குள்ளயே பேசிப்பேன். என் வாழ்க்கையோட அர்த்தமே இவ்வளவுதானா? கடவுள் எத்தனையோ அற்புதங்கள் செஞ்சிருக்காருன்னு கேள்விப்பட்டிருக்கேன். பைபிள் படிக்கும்போதெல்லாம் ஏதாவது அதிசயம் நடந்து சரியாகிடாதான்னு யோசிச்சிருக்கேன்,” என்கிறார்.
அவர் மேலும் கூறும்போது,
“ஹாஸ்பிடல்ல இருந்தப்ப நானே கற்பனை பண்ணிப்பேன். எனக்கு குணமாகிட்ட மாதிரியும் என் கதையை எல்லார்கிட்டயும் ஷேர் பண்ணிக்கற மாதிரியும் விஷுவலைஸ் பண்ணிப்பேன். ஒருமுறை திடீர்ன்னு நான் எதிர்பார்த்த அந்த அற்புதம் நடந்துது. என்னால என் எச்சிலை முழுங்க முடிஞ்சுது,” என்று உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டார் ரோசி.
படிப்படியாக உணவு உட்கொள்ள ஆரம்பித்தார். உடனே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய கேட்டுக்கொண்டார். வீட்டுக்கு வந்துவிட்டார். பாசிட்டிவான எண்ணங்களை திரும்ப திரும்ப மனதில் விதைத்துக்கொண்டார். மெல்ல சுவரைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்திருக்கிறார்.
”டாக்டர் நான் நடக்கறதைப் பார்த்து பாராட்டினாரு. பிசியோதெரபி கொடுக்கச் சொன்னாரு. படிப்படியா முன்னேற்றம் இருந்துது. மெல்ல நடக்க ஆரம்பிச்சேனே தவிர மத்த பிரச்சனையெல்லாம் அப்படியேதான் இருந்துது. ஆனாலும் நான் மனசு தளர்ந்து போயிடலை. பழசையெல்லாம் மறந்துட்டு புது வாழ்க்கையை ஃப்ரெஷ்ஷா ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணேன்,” என்கிறார்.
2010-ம் ஆண்டில் நைட் ஷிஃப்ட் வேலையை விட்டுட்டு அருகிலிருந்த நிறுவனம் ஒன்றில் சேர்ந்தார். அதன் பிறகு HP நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது.
“ஆங்கிலத்துல என்னால சரளமா பேசவும் எழுதவும் முடிஞ்சது எனக்கு ஒரு பெரிய பிளஸ். HP நிறுவனத்துலதான் என் ஹஸ்பண்டைப் பார்த்தேன். எங்களோடது இண்டர் கேஸ்ட் மேரேஜ். என் ஹஸ்பண்ட் இந்து, நாங்க கிரிஸ்டியன். 2011-ல அவரை பார்த்தேன். 2014-ல கல்யாணம் முடிஞ்சுது,” என்கிறார்.
தொழில்முனைவிற்கான விதை
மோசமான உடல்நிலை, மாற்று ஜாதியில் திருமணம் என பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே கருவில் குழந்தையை சுமந்திருக்கிறார். அவரது உடல்நிலை காரணமாக பிரசவம் ஆபத்தானது என்றே மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எப்படியோ நம்பிக்கையுடன் சவாலான நாட்களை எதிர்கொண்டு நல்லபடியாக குழந்தையைப் பெற்றெடுத்தார்.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் இரண்டாவது குழந்தையையும் பெற்றெடுத்தார். முதலில் பெண் குழந்தை, இரண்டாவது ஆண் குழந்தை என நார்மல் டெலிவரியில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார் ரோசி.
“குழந்தைங்க பிறந்ததுக்கப்புறம் நான் யோசிச்சேன். நான் வாழ்க்கையில எதுவும் பண்ணலை. பெரிசா எதுவுமே சாதிக்கலையே. ஏதாவது படிக்கலாம்னு யோசிச்சேன்.”
இதுதான் அவரது கற்றல் மற்றும் கற்பித்தலின் ஆரம்பப் புள்ளியாக இருந்துள்ளது. குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு ’இமேஜ் கன்சல்டிங்’ பிரிவு பற்றி ஆராயத் தொடங்கியிருக்கிறார்.
எதற்காக இமேஜ் கன்சல்டன்சி?
“எனக்கு இங்கிலீஷ் நல்லா வரும். ஃபேஷன்ல இண்டரஸ்ட் அதிகம். எனக்கு சர்வீஸ் பேஸ் இண்டஸ்ட்ரில இண்டரஸ்ட் இருந்துது. இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடிச்சேன். சாஃப்ட்ஸ்கில் ட்ரெயினிங்தான் என்னோட கோர். ட்ரெயினர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். இமேஜ் கன்சல்டிங்ல நிறைய ஸ்கோப் இருந்ததால இதை தேர்ந்தெடுத்தேன்,” என்கிறார்.
பல நாட்களாக பேச முடியாமல் இருந்த ரோசிக்கு பேசுவது பிடித்தது. ரோசி கல்லூரிகளுக்கு சென்று தான் கடினமான சூழலிலிருந்து மீண்டு வந்த கதையைப் பகிர்ந்துகொண்டார். இது பலருக்கு உத்வேகம் அளித்திருக்கிறது.
நிறுவனத்தின் செயல்பாடுகள்
ரோசி 2021-ம் ஆண்டு Radical Image Consulting ஆரம்பித்தார். இந்நிறுவனம் மென்திறன் பயிற்சியாளர்கள், இமேஜ் கன்சல்டண்ட்ஸ், தகுதி பெற்ற உளவியலாளர்கள், பெண்களுக்கு சக்தியளிக்கும் பயிற்சியாளர்கள், ஆளுமை மேம்பாட்டு பயிற்சியாளர்கள், ஆங்கில மொழி பயிற்சியாளர்கள் போன்றோரைக் கொண்டு செயல்படுகிறது. இந்த பயிற்சிகளுக்கு சர்வதேச சான்றிதழ் பெற்றுள்ளது.
தனிநபர்களின் திறன்களை மேம்படுத்தி தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணி வாழ்க்கையிலும் சிறப்பிக்க உதவுகிறது. இந்நிறுவனம் 15 நாட்கள் முதல் 6 மாதகால புரோகிராம் வரை வழங்குகிறது. வார நாட்களிலும் வார இறுதியிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
குழந்தைகள், பதின்ம வயதினர், கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள், இளம் தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள், சிஇஓ-க்கள், சிஎஃப்ஓ-க்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வழிகாட்டி இந்நிறுவனம் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கிறது.
ஒவ்வொரு கிளையண்டின் தனிபட்ட தேவையை உணர்ந்து அதற்கேற்ப பயிற்சியளித்து வழிகாட்டுவது இந்நிறுவனத்தின் சிறப்பம்சம்.
“எப்படி பேசணும், பாடி லேங்வேஜ் எப்படி இருக்கணும், ஏன் அசெர்டிவா இருக்கணும் இதெல்லாம் சொல்லுவேன். 360 டைமென்ஷன்ல ஒரு விஷயத்தை அணுகுவேன். மத்தவங்க பண்ற மாதிரி இல்லாம யுனிக்கா இருக்கறதுதான் என்னோட ஸ்பெஷாலிட்டி,” என்று கூறும் ரோசி, “உங்களுக்கும் நீங்க நிர்ணயிச்சிருக்கற இலக்குக்கும் நடுவுல இருக்கற இடைவெளிய நிரப்பறதுதான் எங்களோட நோக்கம்,” என்கிறார்.
முதலீடு மற்றும் வருவாய்
“நான் பிசினஸ்ல முதலீடு பண்ணதைவிட எனக்காகதான் லட்சக்கணக்குல முதலீடு செஞ்சுகிட்டேன். நிறைய படிச்சேன். இண்டர்நேஷனல் சர்டிஃபிகேஷனுக்கு இன்வெஸ்ட் பண்ணேன்,” என்கிறார்.
நிறுவனத்தை பதிவு செய்வது உட்பட ஆரம்பத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் Radical Image Consulting Pvt Ltd தொடங்கியிருக்கிறார். ஆனால், கோர்ஸ் படிப்பதற்கும் சர்வதேச அளவிலான சான்றிதழ்கள் பெறுவதற்கும் 10 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்திருக்கிறார்.
முதல் ஆறு மாதங்களில் 4 லட்ச ரூபாய் வருவாயுடன் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார். இந்த ஆண்டு 25 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டவும் அடுத்த ஆண்டில் 50 லட்ச ரூபாயாக வருவாயை இரட்டிப்பாக்கவும் இலக்கு நிர்ணயித்திருக்கிறார்.
நம்பிக்கை மொழி
“நம்மளை சுத்தி இருக்கறவங்க எப்பவும் ஒரு கேள்வியைக் கேட்டுட்டே இருப்பாங்க, ’ஏன் இப்படி பண்ற?’ ஆனா நம்ம மனசு சொல்றதைக் கேட்டு ஒரு சின்ன போர்ஷன் ரிஸ்க் எடுக்கத் தயாரா இருந்தோம்னா எதுவுமே சாத்தியம்தான்,” என்கிறார்.
அவர் தொடர்ந்து பேசும்போது,
“இப்பவும் எனக்கு பேலன்ஸ் இஷ்யூ இருக்கு. எஸ்கலேட்டர்ல ஏறினா பயமா இருக்கும். அதனால அவாய்ட் பண்ணிடுவேன். இன்னமும் நான் மெடிகேஷன்லதான் இருக்கேன்,” என்கிறார்.
உடலளவில் முழுமையாக குணமடையாவிட்டாலும் அவருடைய முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கை மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்து வருகிறது. வாழ்க்கையில முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக,
“உங்களுக்குன்னு ஒரு இலக்கு இருக்கணும். உங்க பலம் என்னன்னு புரிஞ்சுகிட்டு அதுக்கேத்த இலக்கு நிர்ணயிச்சிக்கோங்க. அச்சீவ் பண்ண முடியாம போனாலும் ஏன் முடியலைன்னு ஆழமா யோசிச்சுப் பாருங்க. நேரம் இல்லைன்னு சொன்னா நான் ஒத்துக்கவே மாட்டேன். முறையா பிளான் பண்ணாலே எல்லா வேலைகளுக்கும் நேரம் ஒதுக்க முடியும்,” என்கிறார்.
வளர்ந்து வரும் பெண் தொழிமுனைவோர்களுக்கு ஊக்கமளிக்கும் ரோசி,
”கற்றலுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். புத்தகம் வாயிலான கற்றலாக இருக்கலாம் அல்லது சக மனிதர்கள் வாயிலான கற்றலாகவும் இருக்கலாம். முயற்சி செய்து பார்க்கத் தயக்கம் காட்டாதீர்கள். மரத்திலிருக்கும் காய் கனியாக காத்திருக்கவேண்டும் அல்லவா? அதேபோல் ஒரு தொழில் செய்யத் தொடங்கும்போது உடனே பலன் கிடைக்காது, ஆனால் அதற்கே உரிய அவகாசம் கொடுத்தால் வெற்றி நிச்சயம்,” என்கிறார் தன்னம்பிக்கையின் மறு உருவமாக நிற்கும் ரோசி அயன்குட்டி.