‘நிராகரிப்புகளால் கிடைத்த உத்வேகம்’ - ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பேச, கேட்க முடியாத ரஞ்சித்!
மிகக் கடினமாக தேர்வுகளுள் ஒன்றான சிவில் சர்வீஸ் தேர்வினை எதிர்கொள்ள சாதாரண நபர்களே, சிரமப்படும் நிலையில் சிறுவயதிலிருந்தே பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைப்பாடுள்ள கோவை இளைஞர், அவரது வாழ்வில் பல சோதனையான கட்டங்களைத் தாண்டி, ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, சாதித்துள்ளார்.
மிகக் கடினமாக தேர்வுகளுள் ஒன்றான சிவில் சர்வீஸ் தேர்வினை எதிர்கொள்ள சாதாரண நபர்களே, சிரமப்படும் நிலையில் சிறுவயதிலிருந்தே பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைப்பாடுள்ள கோவை இளைஞர், அவரது வாழ்வில் பல சோதனையான கட்டங்களைத் தாண்டி, ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, சாதித்துள்ளார்.
கோவை மாவட்டம் காளப்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம்- அமிர்தவள்ளி தம்பதியினரின் இரண்டாவது மகன் ரஞ்சித். சிறு வயதிலிருந்தே பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைப்பாடுடன் பிறந்த அவர், பெற்றோரின் முழு ஆதரவால் படிப்பில் முழு கவனம் செலுத்திவந்துள்ளார்.
பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் நான்காம் இடம் பெற்ற அவர், பன்னிரெண்டாம் வகுப்பில் 1117 மதிப்பெண் பெற்று காது கேளாதோருக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அதற்காக, 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
பள்ளிக்காலத்திலிருந்தே படிப்பில் கெட்டிக்காரராக இருந்த அவர், பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில், மெக்கானிக்கல் படிப்பில் பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து
யுபிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில் இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்று அவரது பெற்றோர் பட்ட கஷ்டங்களுக்கும், அவமானங்களுக்கும் பதலளித்துள்ளார்.
'லிப் ரீடிங்' முறையில் மகனுக்கு கற்பிப்பதற்காக பட்டம்பெற்ற தாய்!
ரஞ்சித்தின் தாய் அமிர்தவல்லி, பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். மகனுக்கு காது கேட்பதில் குறைப்பாடு இருப்பதால், அவருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவே காது கேளாத மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியப் படிப்பை படித்துள்ளார். மகன் கல்விக்காவே ஈரோட்டில் இருந்து கோவைக்கு வந்து காதுகேளாதோர் பள்ளியில் ஆசிரியர் பணியில் இணைந்து, மகனையும் சேர்த்து, தொடர்ந்து அவருக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார்.
"என்னப் பாவம் பண்ணியோ இந்த மாதிரி குழந்தைய பெத்திருக்கனு சொன்னாங்க. கண்ணுத் தெரியலனா கண்ணாடிப் போடுறோம். காது கேட்கலனா ஹீயரிங் எய்ட் போடுறதுல தப்பு இல்ல. அதனால, அவனுக்கு காது கேட்காதுனு அப்போவே நாங்க எல்லார்டையும் ஓபன்னா சொல்லிட்டோம். அவனுக்கு காது கேட்காது, பேச மாட்டான், அப்ப நம்ம தான் ஒவ்வொரு வார்த்தையா அவனுக்கு சொல்லிக் கொடுத்தோம். இருந்தாலும், பார்ப்பவர்கள் சிரிப்பாங்க. பரவாயில்ல, சிரிச்சா சிரிச்சிட்டு போறாங்க, அவங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்னு எல்லா இடத்துக்கு கூட்டிட்டு போய் சொல்லிக் கொடுப்பேன். அன்னிக்கு நடக்கிறதை டைரியில் எழுதுவேன். அதனால, தான் வாக்கியமா பேசமுடிந்தது," என்றார் அமிர்தவல்லி.
"7 மாதக் குழந்தையாக இருக்கும் போது தான் அவனுக்கு காதுக் கேட்பதில் குறைபாடு இருப்பதை கண்டுபிடித்தேன். சத்தம் போட்டு கூப்பிட்டாலோ, கைதட்டினாலோ சப்தம் கேட்டு அவன் திரும்ப பார்க்கலை. அப்பவே, அவனுக்கு காதில் ஏதோ பிரச்னை இருக்குதுனு டவுட் வந்தது. ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போனப்போ, அது கன்பார்ம் ஆகியது.
நம்ம குழந்தைக்கு இப்படியொரு குறைபாடு இருக்குனா அதை ஒத்துகணும். மனதார நம்ம குழந்தைக்கு காது கேட்காது, அந்த குழந்தையும் முன்னுக்கு கொண்டுவர முடியும்னு நம்பி, அதற்கான முழு முயற்சியும் எடுத்து, முன்னேற வைக்கணும். அந்த மனப்பான்மை இருந்தாலே குழந்தைகள் சாதித்து காட்டிவிடுவர். இதில், நம்ம தப்பு ஒன்னுமே இல்லை. இது இயற்கை. ஆனா, இதை சொல்லி நிறைய அவமானப்படுத்தியுள்ளனர். அவமானங்களுக்கான பலனை கடவுள் எங்களுக்கு கொடுத்துவிட்டார்,"
என்ற ரஞ்சித்தின் தந்தை பட்டக்கஷ்டங்களுக்கு கிடைத்த வெற்றி சந்தோஷத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.
சாதிக்கும் உத்வேகத்தை அளித்த நிராகரிப்புகள்!
தேர்வைத் தமிழிலே எழுதி இந்திய அளவில் 750-வது இடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கார் என்றால், அதன்பின் அவரது பெற்றோர் விடாமுயற்சியும், நன்கு படித்தும் பணிக் கொடுக்க மறுத்த நிறுவனங்களின் நிராகாப்புமே காரணம்.
பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் நான்காம் இடம் பெற்றேன். பன்னிரெண்டாம் வகுப்பில் 1117 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடமும், காது கேளாதோருக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றேன். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில், பி.இ. மெக்கானிக்கல் படிப்பில் சேர்ந்தேன்.
படிச்சிட்டு இருக்கும் போது, கேம்பஸில் செலக்ட்டாகி வேலைக்கு போயிரலாம்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால், காது கேட்பதில் குறைப்பாடு இருப்பதால், எந்த நிறுவனம் வேலை கொடுக்கத் தயாராக இல்லை. என் அண்ணன் எல்லோரிடமும் வந்து 'இவர் நன்றாக வேலை செய்வார்' என்று சொல்லிப் புரிய வைத்தபோதும் கூட யாரும் நம்பத் தயாராக இல்லை. இந்நிலையில் தான், நாம் ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டுமென சிவில் சர்வீஸுக்கு தயாராக ஆரம்பித்தேன்.
”வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் இருந்ததால், என்னுடைய சிரமங்கள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. சாதிக்க வேண்டும் என்கிற வெறி மட்டும்தான் என் கண் முன்னே இருந்தது. அதனால்தான் என்னால் இவ்வளவு தூரம் வர முடிந்தது," என்று பெருமையுடன் கூறினார் ரஞ்சித்.
தமிழ்நாடு கொண்டாட வேண்டிய வெற்றி!
பெற்றோரின் உதவியுடன் சுயமாய் கற்று வந்த ரஞ்சித், ஒரு கட்டத்திற்கு மேல் வழிகாட்டுதல் தேவைப்பட்டதால் கோச்சிங் சென்டரில் இணைந்துள்ளார். பொதுவாக, ரஞ்சித்தின் நிலையை பயிற்சி மையங்களில் சொன்னால் யாரும் புரிந்துக் கொண்டு உதவ மாட்டார்கள், ஆனால், ஆசிரியர் சபரிநாதன் உதவியதாக ரஞ்சித்தின் தாயார் ஒன் இந்தியா தமிழிடம் தெரிவித்துள்ளார்.
"வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தாலும், ரஞ்சித்தை மட்டுமே பார்த்து பாடம் எடுக்க வேண்டியது எங்களுக்கு சவாலாக இருந்தது. உதட்டு அசைவுகளை வைத்தே நோட்ஸ் எடுத்துக் கொள்வார். அதனால், வகுப்பின் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். வேற மாணவர்கள் அந்தசீட்டில் உட்காரமாட்டார்கள். அவரால் பேச முடியாது என்பதால், தனித் தேர்வர் வைத்தும் தேர்வை எழுத முடியாது. சொந்த முயற்சியில் அவராக மட்டுமே எழுதி பாஸ் பண்ண வேண்டும்.
அதனால், பொதுவாக ஒரு மணிநேரத்திலே முடிய வேண்டிய வகுப்பு அவருக்காக எக்ஸ்ட்ரா டைம் ஆகும். வகுப்பிலிருக்கும் மற்ற மாணவர்களும் ஒத்துழைத்தனர். விருப்பப் பாடமாகத் தமிழ் இலக்கியத்தை எடுத்திருந்தார். ஜெனரல் ஸ்டடீஸும் தமிழிலேயே எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்.
“தமிழ்நாடு கொண்டாட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக தான் இதை நான் பார்க்கிறேன்," என்று மாணவனின் வெற்றியை எண்ணி சிலிர்த்தார் சபரிநாதன்.
தான் இந்நிலைக்கு அடைந்ததற்கு கல்வியே காரணம் எனும் ரஞ்சித், பணியில் இணைந்தவுடன் கல்விக்கும், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றுவேன் என்று கூறியுள்ளார்.
வாழ்த்துகள் ரஞ்சித்! கலெக்டர் கனவுகளுடன் இருக்கும் இளைய தலைமுறைக்கான முன்னுதாரணம் நீங்கள்...
தகவல் மற்றும் பட உதவி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் விகடன்