Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வீட்டைச் சுத்தப்படுத்த நேரமில்லையா? இதோ வந்துட்டது ஸ்மார்ட் வீடுகள்...!

வீட்டைச் சுத்தப்படுத்த நேரமில்லையா? இதோ வந்துட்டது ஸ்மார்ட் வீடுகள்...!

Monday February 18, 2019 , 3 min Read

இந்தியத் தொலைக்காட்சிகள் முற்போக்கான சிந்தனைகளைப் பிரதிபலிப்பதில்லை. தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பார்க்கையில் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். பெரும்பாலும் பெண்கள் சிறந்த இல்லத்தரசியாக காட்சிப்படுத்தப்படுகின்றனர். அதாவது அவர்கள் தங்களது கணவரின் ஆடைகளில் இருக்கும் கறையைப் போக்குவதில் தீவிரம் காட்டுவதாக விளம்பரங்களில் காட்டுகின்றனர். அல்லது மணமகனை எதிர்நோக்கி காத்திருக்கும் பெற்றோருக்குக் கீழ்படியும் சிறந்த மகளாக காட்டுகின்றனர்.

இருபதாண்டுகளுக்கு முன்னர் இருந்த காலகட்டம் மாறுபட்டிருந்த நிலையில் விளம்பரங்களில் பெண்களை ஒரே மாதிரியாக சித்தரிக்கும் போக்கு தற்போதைய சமூகத்தை பிரதிபலிப்பதாக இருப்பதில்லை. பெரும்பாலான பெண்கள் வெளியில் வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலைகள் மட்டுமே அவர்களது முக்கியப் பொறுப்பாக இருந்த காலம் மாறிவிட்டது.

கணவன் மனைவி இருவரும் வருவாய் ஈட்டும் போக்கு காணப்படுவதால் இன்றைய நவீன யுகத்தில் வாழும் இந்தியர்கள் துணிகளைத் துவைத்தல், பாத்திரங்களை சுத்தப்படுத்துதல், வீட்டை சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகளுக்கு மாற்று வழியை ஆராய்ந்து வருகின்றனர்.

அதாவது மனிதர்கள் மேற்கொள்ளும் பணிகளை சாதனங்கள் தானியங்கிமயமாக்கும் ஸ்மார்டான வீடு அவசியமாகிறது. குறிப்பாக நகர்புற நுகர்வோரிடையே ஸ்மார்ட் வீடுகள் பிரபலமாகி வருகிறது. வெகு சிலரே வழக்கமான வீட்டு வேலைகளுக்கு நேரம் செலவிட விரும்புகின்றனர். பெரும்பாலானோர் அதற்கு மாறாக அந்த நேரத்தில் தங்களது வாழ்க்கைப் பாதையை அமைப்பதிலும் பொழுதுபோக்கிலும் கவனம் செலுத்துவே விரும்புகின்றனர்.

கடந்த 6-7 ஆண்டுகளில் ஸ்மார்ட் வீடுகள் கான்செப்ட் பிரபலமாகி வருகிறது. பல வசதிகள் கற்பனையில் மட்டுமே இருந்து வந்த நிலையில் இன்று ரோபோட் வாக்யூம் க்ளீனர், ஸ்மார்ட் விளக்குகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த குரலால் கட்டுப்படுத்தக்கூடிய ஸ்பீக்கர்கள் போன்றவை வீடுகளில் நிரம்பியுள்ளது. எல்ஜி, ஃபிலிப்ஸ் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்துகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் வாங்குவதற்குத் தயாராகவுள்ள ஸ்மார்ட் வீடுகள் ப்ராஜெக்டுகளுக்கு கிடைக்கவுள்ள வரவேற்பு குறித்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாட்டில் ஸ்மார்ட் வீடுகளுக்கான தேவை அதிகரிக்க பல்வேறு காரணிகள் ஒன்றிணைந்துள்ளன. எனினும் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று பணிக்குச் சென்று வருவாய் ஈட்டும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது முக்கியக் காரணமாகும். கணவன் மனைவி இருவரும் அதிக சம்பளத்துடன்கூடிய பணியில் இருக்கும் நிலையில் நவீன இந்தியக் குடும்பங்கள் சாதாரண வீடுகளைக் காட்டிலும் ஸ்மார்ட் வசதி கொண்ட வீடுகளில் முதலீடு செய்வதற்குத் தேவையான பண வசதி படைத்தவர்களாக இருக்கின்றனர்.

இந்தியர்கள் ஸ்மார்ட் வீடுகளில் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

வீட்டில் சௌகரியம் என்கிற அம்சம் முக்கியம் என்கிறபோதும் பாதுகாப்பு அம்சங்களுக்கு இந்தியர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். வீடியோ டோர் கண்காணிப்பு, நைட் விஷன் தொழில்நுட்பத்துடன்கூடிய நகர்வைக் கண்டுணரும் சிசிடிவி கேமிராக்கள், டிஜிட்டல் லாக், ஸ்மார்ட் அலாரம் என வீட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் பலவகையான எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவை இதில் அடங்கும். ஸ்மார்ட் வீடுகளில் ஊடுருவல் சென்சார்கள், நெருப்பு மற்றும் எரிவாயு கசிவைக் கண்டறியும் அமைப்புகளும் இணைக்கப்படுகிறது.

மக்கள் பணிகளை விரைவாக செய்து முடிக்கும் வழிமுறைகளை ஆராயும் இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் வீடுகள் சரியான தீர்வாக அமைந்துவிடுகிறது. உதாரணத்திற்கு ஒட்டடை அடிப்பது, தரையைத் துடைப்பது என வீட்டை சுத்தம் செய்வது அதிக உடலுழைப்பு தேவைப்படும் பணியாகும். உற்பத்தியாளர்கள் பல விதமான ரோபோ வாக்யூம் சாதனங்களை வழங்குவதால் சுத்தம் செய்யும் பணி எளிதாகிவிட்டது. அதேபோல் மற்ற பணிகளுக்கும் நேரம் ஒதுக்க இயலாத இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் வாஷிங் மெஷின் மற்றும் டிஷ்வாஷர்கள் போன்றவை தீர்வளிக்கிறது.

பொழுதுபோக்கைப் பொறுத்தவரை ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ், AV கன்ட்ரோல், கேமிங் கன்சோல் என தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை திட்டமிடல், குரல் கட்டளை பிறப்பித்து சானல்களை மாற்றுதல் போன்ற வசதிகளை வழங்குகிறது ஸ்மார்ட் பொழுதுபோக்கு அமைப்பு. குறிப்பாக இன்றைய தலைமுறையினரும் இளம் தம்பதிகளும் ஸ்மார்ட் வீடுகளில் கட்டாயம் பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்களை இணைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர்.

இந்திய சமூகத்தின் மேல் வர்க்கத்தினர் மட்டுமே அணுகக்கூடிய நிலையில் இருந்த ஸ்மார்ட் வீடுகள் நடுத்தர வருவாய் ஈட்டும் பிரிவினைச் சேர்ந்த வாடிக்கையாளர்களையும் கவர்ந்து வருகிறது. ஸ்மார்ட் சாதனங்களையும் வீட்டு உபயோகப் பொருட்களையும் வாங்கும் திறன் அதிகரித்து வரும் நிலையில் ஸ்மார்ட் வீடுகள் கான்செப்ட் விரைவாகவே பரவி வருகிறது. மேலும் அதிக இந்தியர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களது வீட்டை ஸ்மார்டாக மாற்றுவார்கள் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர் : புலக் சதீஷ் குமார் | தமிழில் : ஸ்ரீவித்யா

(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் சொந்த கருத்துக்கள் ஆகும். எந்த விதத்திலும் யுவர்ஸ்டோரியின் கருத்தை பிரதிபலிக்கவில்லை.)