'இஸ்ரோவுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்கள் லாப நோக்கம் இல்லாதவை' - Techsparks-இல் இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
இஸ்ரோவுடன் இணைந்து செயல்படும் அனுபவத்தால் சப்ளையர் நிறுவனங்கள் உலக அளவில் செல்ல முடிவதாக டெக்ஸ்பார்க்ஸ் 2024 நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் (இஸ்ரோ), விண்வெளி திட்டங்களை குறைந்த செலவில் நிறைவேற்றுவதற்கான காரணம், அதனுடன் இணைந்து செயல்படும் சப்ளையர்கள் லாப நோக்கில் செயல்படாததே, என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
குறைந்த செலவிற்கு எங்கள் துறையே ஒரு முக்கியக் காரணம். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், என்று பெங்களூருவில் நடைபெறும் யுவர்ஸ்டோரியின் முன்னணி நிகழ்ச்சி டெக்ஸ்பார்க்ஸ் 2024ல் பேசிய சோம்நாத் தெரிவித்தார்.
“இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றும் ஒவ்வொருவரும் லாப நோக்கம் இல்லாதவர்கள். நாங்கள் உருவாக்கியுள்ள ஈடுபாடு காரணமாக பெரிய நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து செயல்படுகின்றன என்பதை பெரிய விஷயம் என சொல்வேன்,” என்று தெரிவித்தார்.
இஸ்ரோவுடன் பணியாற்றும் அனுபவத்தால் இந்நிறுவங்கள் வளர்ச்சி அடைந்து உலக அளவில் செயல்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
“இஸ்ரோவுடன் பணியாற்றுவது, திறன், அறிவுடன், மற்ற வாடிக்கையாளர்களுக்கு சிக்கலான திட்டங்களை நிறைவேற்றித்தர தேவையான தகுதியை அளிப்பதால் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுவதை விரும்புகின்றனர்,” என்றும் தெரிவித்தார்.
இது செலவுகளைக் குறைக்க வழி செய்து, அனல்டிகல் மாடலிங் போன்ற சிக்கலான செயல்முறையில் இஸ்ரோ கவனம் செலுத்த உதவுகிறது என்றார்.
விண்வெளி ஸ்டார்ட் அப்கள்
இந்தியாவின் விண்வெளி நுட்ப ஆற்றலை அதிகரிக்க, இஸ்ரோ, உள்நாட்டு ஸ்டார்ட் அப்களுடன், வளங்களை பகிர்ந்து கொண்டு, வழிகாட்டுதல் மற்றும் தொழிநுட்ப அறிவை வழங்கி வருவதாகவும் சோம்நாத் குறிப்பிட்டார்.
ஸ்கைரூட், அக்னிகுல் காஸ்மோஸ் உள்ளிட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்'களுக்கு இஸ்ரோ ஆதரவு அளித்திருப்பதாக அவர் கூறினார்.
“இந்த விண்வெளி ஸ்டார்ட் அப்களில் சிலவற்றுக்கு, நிறுவனத்திற்குள் உள்ள வசதிகள் தேவை. உதாரணமாக, ஸ்கைரூட், அக்னிகுல் ராக்கெட்களை உருவாக்க விரும்பின. அவற்றுக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளம் தேவை. எரிபொருள், தரைக்கட்டுப்பாடு வசதி ஆகியவையும் தேவைப்பட்டன. எங்கள் வல்லுனர்கள் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கினர்,” என்றார்.
ஏவுதல் மற்றும் சிமுலெஷன் நேரத்தில் அந்த செயல்பாடுகளை புரிந்து கொள்ள நாங்கள் உதவினோம். எங்கள் தரப்பில் இருந்து பணம் அல்லது கட்டணம் இல்லாமல் இதை செய்கிறோம், என்றும் கூறினார்.
சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் ஐஐடி மெட்ராஸில் உள்ள நேஷனல் செண்டர் பார் கம்பஷன் ஆய்வு மையத்தில் செயல்படுகிறது. 2017ல் ஸ்ரீநாத் ரவிசந்திரன் மற்றும் எஸ்.பி.எம்.மொயின் இணைந்து துவக்கிய இந்த ஸ்டார்ட் அப் குறைந்த செலவில் சிறிய செயற்கைகோள்களுக்கான ஏவு வாகனத்தை அளிக்கிறது.
2023 ஆகஸ்டில், அக்னிகுல், செலஸ்டா கேபிடல், ராக்கெட்ஷிப் விசி, அர்தா வென்சர் பண்ட், அர்த்தா செலக்ட் பண்ட், மற்றும் பை வென்சர்ஸ், ஸ்பெஷாலே இன்வெஸ்ட் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து 26.7 மில்லியன் பி சுற்று நிதி திரட்டியது.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், 27.5 மில்லியன் திரட்டியது. சிங்கப்பூர் அரசு முதலீடு நிறுவனம் Temasek Holdings இதில் முன்னிலை வகித்தது. நிறுவனம் மொத்தம் 95 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. மார்ச் மாதம், நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்தில், 2 ம் நிலையை ராக்கெட்டை சோதனை செய்தது.
தற்போது, 630 பில்லியன் டாலராக உள்ள உலக விண்வெளி பொருளாதாரம் 2040ல் 1.8 லட்சம் கோடி டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விண்வெளி பொருளாதாரம், 8.4 பில்லியன் டாலர் மதிப்புடன் ஆண்டு அடிப்படையில் 4 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது.
பிரணவ் பாலகிருஷ்ணன், புவனா காமத்
Edited by Induja Raghunathan