ஐடி ஊழியர் டூ பால்காரர்: பசும்பால் விநியோகத் தொழிலில் வெற்றிகண்ட வெற்றிவேல்!
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பாரம்பரியத்தின் அவசியத்தை உணர்ந்த வெற்றிவேல், ஐடி பணியை உதறி விட்டு குழந்தைகளுக்காக தூய்மையான பாலை விநியோகம் செய்யும் ஸ்டார்ட் அப் தொடங்கி இன்று மாதத்திற்கு ரூ. 30 லட்சம் வரை வருமானம் ஈட்டி பலருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறார்.
2017 ஜனவரி மாதம் மெரினாவில் கூடிய இளைஞர்களின் கூட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடந்த போராட்டம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இளைஞர்களின் முயற்சியாக பார்க்கப்பட்டது.
மெரினா ஒன்றுகூடலில் பாரம்பரியத்தையும் தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்நிய குளிர்பானங்கள் அறவே கூடாது, தமிழர் நலன் அவசியம் என்று இளைஞர்கள் பலருக்கு நிலம் சார்ந்த உரிமைகளை ஊட்டும் சத்து டானிக்காக மெரினா புரட்சி அமைந்தது.
அப்போராட்டத்தால் பாரம்பரியத்தின் பால் ஈர்க்கப்பட்ட மதுராந்தகத்தைச் சேர்ந்த வெற்றிவேலும் இவர்களில் ஒருவர் தான். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இயற்கை ஆர்வலர்களுடன் கிடைத்த நட்பு வட்டத்தின் மூலம் தானும் உழைக்கும் சமூகத்திற்கு ஏதேனும் நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று ’விவசாய நாடு’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தொடங்கி விவசாயிகளின் நலனுக்காக செயல்பட்டு வந்துள்ளார்.
சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்ட வெற்றிவேல் படித்ததெல்லாம் அரசுப் பள்ளியில். டிப்ளமோ முடித்துவிட்டு பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றியவர், அதன் பின்னர் பட்டப்படிப்பு படித்துக் கொண்டே வேலை செய்து வந்துள்ளார். தொழில்முனைவுத் திட்டத்தை கையில் எடுப்பதற்கு முன்னர் பிரபல முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் நல்ல பொறுப்பில் மாதம் கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்.
“ஐடி பணியில் ஒரு நிறைவு கிடைக்கவில்லை தற்சார்பு தொழிலை ஸ்டார்ட் அப்பாக தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே 2017ம் ஆண்டின் இறுதியில் சென்னை நகரில் கிடைக்கும் பாக்கெட் பாலின் தரம் எப்படி இருக்கிறது என்ற ஆய்வை செய்தேன்.
”ரசாயனக் கலப்பு இல்லாமல் பால் விநியோகம் செய்யப்படும் நிறுவனங்கள் ஒரு சிலவே என்பது தெரியவந்தது. தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உலகின் சத்தான உணவான பாலில் ரசாயனக் கலப்பு இல்லாமல் கறந்த பாலின் தூய்மை மாறாமல் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போது விழுந்தது ‘உழவர்பூமி பசும்பால்’க்கான விதை,” என்கிறார் வெற்றிவேல்.
நவம்பர் 2017 முதல் பிராண்ட் பெயர் இல்லாமல் வெற்றிவேல் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து பால் சேகரித்து அவற்றை விநியோகம் செய்தும் வந்துள்ளனர். 2018 மார்ச் மாதத்தில் ‘உழவர்பூமி பசும்பால்’ என்ற பிராண்ட் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
நாள் ஒன்றிற்கு 50 முதல் 100 லிட்டர் பால் விநியோகம் என்று தொடங்கி, இன்று நாளொன்றிக்கு 1000 முதல் 1500 லிட்டர் பால் விநியோகம் என்று விருட்சம் பெற்றுள்ளது.
பால் வியாபாரம் என்றதும் கால்நடைகளை வாங்கி வந்து ஒரு பண்ணை அமைத்து பாலைக் கறந்து விற்பனை செய்வது என்று செய்ய வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார் வெற்றிவேல்.
“நாங்கள் புதிதாக போடும் பண்ணையின் மூலம் ஏற்கனவே கால்நடைகளை வளர்த்து வருபவர்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக கிராமங்களில் 10 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்து அவர்கள் மூலம் பால் சேமிப்பு மையங்களை அமைத்தோம்.
“மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுயஉதவிக்குழுவினரின் சேமிப்பு மையங்களில் இருந்து சேகரிப்படும் பால், உழவர்பூமி யூனிட்டிற்கு கொண்டு வரப்பட்டு எந்தவித ரசாயனக் கலப்பும் இன்றி, நிறமூட்டி மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்படாமல் கறந்த பாலின் தூய்மை மாறாமல் 12 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது,” என்கிறார் வெற்றிவேல்.
கறந்த பால் 12 மணி நேரம் கெடாமல் இருக்குமா என்றால் அதனை முறையாக குளிரூட்டி பாதுகாப்பாக சீல் செய்து வைத்தால் கெடாது என்கிறார். உழவர் பூமி பாலின் மற்றொரு சிறப்பாக இவர் சொல்வது யூனிட்டிற்கு கொண்டு வரப்படும் பால் அப்படியே பாட்டிலில் அடைக்கப்படுவதில்லை என்பதே. பால் சேகரிக்கும் மையங்களிலேயே பாலின் தன்மை, கொழுப்புச் சத்தின் அளவைக் கண்காணிக்கும் கருவிகளை உழவர் பூமி நிறுவனத்தினர் அளித்துள்ளனர்.
எனவே கொள்முதல் செய்யப்படும் பால் பரிசோதனை செய்யப்பட்டு அந்த பாலின் தரம் உறுதி செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி உழவர் பூமி யூனிட்டிற்கு கொண்டு வந்த பிறகு ஒவ்வொரு முறையும் பாலின் தன்மையை பரிசோதிக்க அங்கேயே பரிசோதனைக்கூடம் அமைக்கப்பட்டு 15க்கும் மேற்பட்ட சோதனைகளுக்குப் பிறகே பால் பேக் செய்யப்படுகிறது.
இவர்களின் பசும்பால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பாலை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்டதால் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பால் நிறுவனங்கள் செய்யும் தவறை செய்யக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதாகச் சொல்கிறார் வெற்றிவேல்.
பரிசோதனைகள் முடிந்து பசும்பால் 4 டிகிரி அளவிற்கு குளிரூட்டப்பட்டு நன்கு சுத்தம் செய்யப்பட்ட பாட்டிலில் ஊற்றி சீலிடப்படுகிறது. 4 டிகிரி அளவிற்கு பாலை குளிரூட்டுவதால் வாடிக்கையாளரைச் சென்றடையும் 12 மணி நேரத்தில் கெட்டுப் போகாது என்கிறார் வெற்றிவேல்.
உழவர் பூமி அக்ரோ ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 45 முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. தரமான பொருளுக்கு விளம்பரமே தேவையில்லை என்பது இவர்களுக்கு நன்று பொருந்தும் என்று சொல்லும் வெற்றிவேல், நாங்கள் எந்த மார்கெட்டிங்கும் செய்யவில்லை எங்களது வாடிக்கையாளர்களின் வாய்மொழி விளம்பரமே வியாபாரம் விருட்சம் பெற காரணமாக அமைந்தது என்கிறார்.
போட்ட முதலீட்டை இரண்டே மாதத்தில் சம்பாதித்துள்ள இந்த நிறுவனத்தின் மூலம் கால்நடை வளர்ப்பவர்கள் 20 சதவிகிதம் கூடுதல் வருமானம் பெற்றுள்ளனர், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு வருமானம் கிடைத்துள்ளது. சென்னையில் பால் விநியோகம் செய்யத் தொடங்கியதால் 15க்கும் மேற்பட்ட தொழில்முனைவர்கள் உருவாகியுள்ளனர்.
இவர்களின் பசும்பால் சென்னையில்70 சதவிகிதம் பகுதிகளுக்கு டீலர்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. டீலர்கள் வசம் விநியோகம் இருந்தாலும் பாலிற்கான விலை நிர்ணயம் உழவர் பூமி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ வெற்றிவேல் வசமே உள்ளது.
தற்போது ஒரு லிட்டர் பால் ரூ.55 என்ற விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறோம், விலையில் டீலர்கள் எந்த மாற்றமும் செய்வதில்லை பால் டெலிவரிக்காக மாதக் கட்டணமாக ரூ.100 மட்டுமே வாங்கிக் கொள்கின்றனர் என்கிறார்.
சில மாதங்களில் உழவர் பூமி செயலி மூலமே வாடிக்கையாளர்கள் பால் ஆர்டர் கொடுத்து அதிலேயே கட்டணம் செலுத்தும் முறையையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இச்செயலி வடிவம் பெற்று வருகிறது 2 மாதங்களுக்குள் மக்கள் பயன்படுத்தும் விதமாக அறிமுகம் செய்யப்படும் என்கிறார்.
இந்த பசும்பாலை சென்னையில் 100 சதவிகித மக்களிடம் கொண்ட சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் வெற்றிவேல். இது மட்டுமின்றி உழவர் பூமி அக்ரோ ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் விவசாயிகளிடம் இருந்து அரிசி, பருப்பு, சிறுதானியங்கள், கடலை எண்ணெய், எள் எண்ணெய் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயித்து அதை நோக்கி செயல்பட்டு வருகிறார்.
மக்களிடத்தில் இயற்கை பொருட்கள் பற்றிய நல்ல விழிப்புணர்வு இருப்பதால் சமூக நல அக்கறையுடன் கூடிய தொழில்முனைவு மட்டுமே ஜெயிக்க முடியும் இதுவே ஸ்டார்ட் அப் தொடங்க விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்கிறார் முதல் தலைமுறை இளம் தொழில்முனைவர் ஆன வெற்றிவேல்.
லாபம் தரும் தொழிலாக பால் விற்பனை இருந்தாலும் வங்கிகள் கடன் தர மறுப்பதாக வேதனை தெரிவிக்கும் இவர், எனினும் நாங்கள் சோர்ந்து போகவில்லை என்கிறார். லாபம் மட்டுமே எங்களின் குறிக்கோள் அல்ல மக்களிடம் தூய்மையான பாலை கொண்டு சேர்க்க வேண்டும், எங்களின் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் எங்களோடு பயணிக்கத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஃபேஸ்புக் முகவரி: உழவர் பூமி