'ஹவுஸ் ஆப் கதர்’ காதி பிரான்ட் ஆன்லைன் விற்பனையை தொடங்கிய கமல் ஹாசன்!
உலக நாயகன் கமல் ஹாசன் கதர் ஆடை விற்பனைக்காக தொடங்கிய KH - House of Khaddar என்ற பிராண்ட் உடைய ஆன்லைன் விற்பனையை குடியரசு தினத்தை முன்னிட்டு தொடங்கி வைத்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாசன் கதர் ஆடை விற்பனைக்காக தொடங்கிய KH - House of Khaddar என்ற பிராண்டின் ஆன்லைன் விற்பனையை குடியரசு தினத்தை முன்னிட்டு தொடங்கி வைத்துள்ளார்.
சினிமா ஷூட்டிங், பிக்பாஸ் நிகழ்ச்சி நெறி ஆளுகை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் பணிகள் என படு பிசியாக இருக்கும் கமல் ஹாசன், புது பிசினஸ் ஒன்றிலும் கால் பதித்தார். வெறும் பொருளாதார ரீதியிலான பிசினஸாக மட்டும் இல்லாமல், கதர் ஆடை விற்பனையாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் கஷ்டத்தை போக்கும் விதமாக கதர் ஆடைக்கு என பிரத்யேக பிராண்ட் ஒன்றை ஆரம்பித்தார்.
2020ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி நாளன்று தனது பிராண்டை அறிமுகப்படுத்திய கமல், சர்வதேச டிசைனர்களை உள்ளடக்கிய இந்த நிறுவனம் கைத்தறி ஆடைகளை ஊக்குவிப்பதாக அறிவித்தார்.
அதுமட்டுமல்லாது கதர் ஆடை என்றாலே வயதானவர்களும், அரசியல்வாதிகளும் அணிந்து கொள்வது என்ற மாய தோற்றத்தை கமல் ஹாசன் மாற்ற விரும்பினார். இதற்காக காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் அம்ரிதா ராம் உடன் கரம் கோர்த்த கமல், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போது விதவிதமான கதர் உடைகளில் வந்து அசத்தினார்.
அத்தோடு கதர் குறித்த தகவல்களையும் மக்களிடம் பகிர்ந்துகொண்டார். மெல்லிய பருத்தி நூலில் கமல் அணிந்திருந்த கோட் சூட் கதர் எனக்கூறியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
KH - House of Khaddar பிராண்டில் கைத்தறி மூலமாக அனைத்து ஆடைகளும் தயாரிக்கப்படும் என்றும், அத்துடன் சேர்த்து WE DYE FOR YOU என்ற சாயமிடும் பிரிவையும் தொடங்கிவைத்தார்.
“வாழ்வாதாரம் இல்லாமல் வாடும் ஆயிரக்கணக்கான நெசவாளர்களுக்காக இப்படியொரு பிராண்டை அறிமுகப்படுத்தியதாகவும், காதி அணியும் பழக்கம் எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் வர வேண்டும்,” என்றும் கோரிக்கை விடுத்தார்.
House of Khaddar ஆன்லைன் விற்பனை தொடக்கம்:
கமல் ஹாசன் தனது சொந்த பேஷன் பிராண்டான KHHK ஆடைகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி அமெரிக்காவின் சிகாகோவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இதனை பிரபலப்படுத்தும் விதமாக ப்ரோமோ டீசரும் வெளியிடப்பட்டது.
அதில், விதவிதமான கதர் உடைகளில் மாடல்கள் தோன்ற, இறுதியாக கம்பீரமான காதி உடையில் கமல் ஹாசன் தோன்றி ரசிகர்களை மிரள வைத்தார். இந்த வீடியோவை தொடர்ந்து கமல் ஹாசனின் கதர் ஆடைகளுக்கான பிரத்யேக பிராண்ட் மீது இளம் தலைமுறையினரின் பார்வை திரும்பியது. இதன் விற்பனைக்காக பலரும் காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது House of Khaddar நிறுவனத்திற்காக ஆன்லைன் விற்பனை தளத்தை கமல் ஹாசன் தொடங்கிவைத்துள்ளார்.
நாடு முழுவதும் 72வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்த அதே நேரத்தில், தியாகிகளும், தேசத் தலைவர்களும் கட்டிக்காத்த கதர் ஆடைகளின் பெருமையை உலகறிய வைக்கும் வண்ணம், கமல் ஹாசன் khkk.in என்ற இணையதள பக்கத்தை தொடங்கிவைத்துள்ளார்.
இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் கமல் ஹாசன் House of Khaddar என்ற வார்த்தைகள் மிளிர்கின்றன. இதுகுறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“இந்திய பாரம்பரியம் மற்றும் மேற்கத்திய வடிவமைப்புகள் மற்றும் நிழற்படங்களுடன் இணைந்த உண்மையான கைத்தறி ஆடை வரிசையாகும். பிளாக் தயாரிப்பாளர்கள், பிரிண்டர்கள் மற்றும் ஜி.ஐ உட்பட மாநிலம் முழுவதும் உள்ள நெசவாளர்கள் மற்றும் பல்வேறு கைவினை சமூகங்களுடன் நாங்கள் நேரடியாக வேலை செய்வோம். சான்றளிக்கப்பட்ட கொத்துகள். மேற்கத்திய நிழற்படங்களை இந்திய நுட்பங்களுடன் கலப்பதுதான் நம்மை வேறுபடுத்துகிறது. KHHK-இல் நாங்கள் ஒன்றாகச் சேர்க்கும் காதி ஆடைகள், பொதுவாகப் பயன்படுத்தப்படுவதற்குப் புத்துணர்ச்சியூட்டுவதாகும்; மந்தமான, சலிப்பான, அல்லது மிகவும் இந்தியத்தன்மை இல்லாது, பாரம்பரியத்திற்குச் செல்வதைத் தவிர்த்து, நேர்த்தியான, கம்பீரமான மற்றும் நவநாகரீகமான முற்றிலும் புதிய வெளிச்சத்தில் துணிகளை மிளிர செய்கிறது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காதி நிறுவனம் தொடங்கப்பட்டதற்கான காரணம் குறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
“காதியின் கலையைக் காப்பாற்றுவதும், காதியை குளிர்ச்சியாகவும், இளம் நகர்ப்புறச் சந்தையுடன் தொடர்புப்படுத்துவதாகவும் மாற்றுவதே இதன் நோக்கம். வேறுபட்ட சந்தையை இலக்காகக் கொண்ட புதிய தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்த சமூகங்களுக்கு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதும் எங்கள் பொறுப்பு. ஹவுஸ் ஆஃப் கதரின் கதை, காதி போன்ற பழமையான நெசவுகளுக்கு சமகால வடிவமைப்பைக் கொண்டுவருவதில் உள்ளது - அது துணியின் வெட்டு, உணர்வு அல்லது பொருத்தம்,” எனத் தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு மட்டுமே ஹவுஸ் ஆஃப் காதர் பிராண்ட் உடைகள் ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், மிக விரைவில் உலகம் முழுவதும் விற்பனை விரிவுபடுத்தப்பட உள்ளதாக கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.