அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கதர் சட்டை தைத்து பரிசளித்த பொள்ளாச்சி தாத்தா!
அறிஞர் அண்ணா, காமராசர், மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு இவர் தைத்தச் சட்டைகளை பரிசளித்துள்ளார்.
இந்தியாவிற்கு இரண்டுநாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதிபரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும், இருநாள் பயணத்திலுள்ள நிகழ்ச்சி நிரல்களை கச்சிதமாக்க முடிக்க அரசு முழுவீச்சில் செயல்பட்டு கொண்டிருக்க, சாமானியர்களும் ட்ரம்ப்பை கவர புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிலொருவர் பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (90). தையல் கலைஞரான இவர் கடந்த 1949ம் ஆண்டிலிருந்து தையல் பணி மேற்கொண்டு வருகிறார். அவர் இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சர்ப்ரைஸ் கிப்ட் செய்து டில்லிக்கு அனுப்பியுள்ளார். என்ன கிஃப்ட் அது?
70 ஆண்டுகளாக தையல் பணிபுரிந்து அதில் மாஸ்டராக விளங்கும் 90 வயதான விஸ்வநாதன், இந்தியாவின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கதர் ஆடையை தைத்துள்ளார். ட்ரம்பிடம் அவரது பரிசு சேரும் வகையில், இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கும்படி குறிப்பிட்டு டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு சட்டையை அனுப்பி வைத்துள்ளார்.
டிவியிலும், பத்திரிக்கைகளிலும் பலமுறை ட்ரம்பை பார்த்துள்ள அவர், ட்ரம்பிற்கு கதர் ஆடையை பரிசாக வழங்க வேண்டும் என்று தோணியதாகக் கூறியுள்ளார்.
“கடந்த 70 ஆண்டுகளாக தையல் தொழில் செய்து வருகிறேன். நம் நாட்டின் தேசத் தந்தை மீது எனக்கு ஆழமான மரியாதை உண்டு. கதர் ஆடைகளை மக்கள் பயன்படுத்தி இந்திய குடிமக்கள் என்ற உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு செய்ய விரும்புகிறேன். இதை அதிபர் ட்ரம்பிற்கு வழங்கும் போது, நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் கதர் ஆடையின் பெருமையும் உலகம் முழுவதும் பரவும்,” என்று இந்தியாடிவி நியூசிடம் பகிர்ந்துள்ளார் பொள்ளாச்சி தாத்தா.
இதற்கு முன்னதாக, தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்கள், பிரபலமானவர்களுக்கு கைத்தறியில் ஆடை தயாரித்து வழங்கியுள்ளார் இவர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்களான காமராசர், அண்ணா மற்றும் முன்னாள் ஜானதிபதி ஆர். வெங்கட்ராமனுக்கும் கதர் ஆடையை தைத்து பாரிசாக அளித்துள்ளார்.
முன்பு, பொள்ளாச்சியில் தையல் கடை வைத்து நடத்தி வந்த அவர், வயது முதிர்வின் காரணமாக ஆண்கள், பெண்களுக்கு இலவசமாக தையல் கலை பயிற்சி அளித்து வருகிறார்.