கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக வேண்டும்: பேனர் வைத்து சிறப்பு வழிபாடு நடத்திய தமிழகக் கிராமம்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் கமலா ஹாரிஸுக்கு, அவருடைய பூர்வீகக் கிராமமான தமிழகத்தில் உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் பேனர்களை வைத்தும், சிறப்பு பூஜைகளை நடத்தியும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலகத்தின் எந்த மூலையில் ஒரு இந்தியர் ஜெயித்தாலும் அதனை தங்களது வெற்றியாகவே கருதும் அன்பான மனப்பாங்கு கொண்டவர்கள் நம் மக்கள். அதிலும் தமிழர் என்றால் கேட்கவே வேண்டாம் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.
தற்போதும் அப்படித்தான், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்படலாம் என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக் குறிப்பாக துளசேந்திரபுரம் கிராம மக்களை பெரிதும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவர் தேர்தலிலும் வென்று அமெரிக்க அதிபராக பதவியில் அமர வேண்டும் என இப்போதே, துளசேந்திரபுரம் கிராம மக்கள் கனவு காண ஆரம்பித்து விட்டனர். அதோடு, தங்களது ஸ்டைலில் கமலா ஹாரிஸுக்கு பேனர்களை வைத்தும், அங்குள்ள கோயிலில் சிறப்பு பூஜைகளையும் நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் அளவிற்கு வளர்ந்துள்ள கமலா ஹாரிஸ் யார்? அவருக்கும் தமிழகத்திற்கும் என்ன தொடர்பு? அவர் வெற்றி பெற வேண்டும் என அக்கிராமத்து மக்கள் ஆசைப்பட என்ன காரணம்? இதோ விரிவாகப் பார்க்கலாம்...
பூர்வீகம் தமிழகம்
1964ம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவின் ஓக்லாந்தில் பிறந்தவர்தான் கமலாதேவி ஹாரிஸ். இவரது தந்தை டொனால்ட் ஹாரீஸ் ஜமைக்காவைச் சேர்ந்தவர். தாய் சியாமளா சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். இதனால் சிறு வயது முதலே சென்னை பெசன்ட் நகரில் உள்ள தாத்தா கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி இவர்கள் வந்து சென்றதுண்டு. கமலா ஹாரிஸுக்கு 7 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் விவாகரத்து செய்து விட்டனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்ற கமலா ஹாரிஸ், பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2004 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரலாக பணியாற்றினார்.
பின்னர், 2011 முதல் 2016ம் ஆண்டு வரை கலிபோர்னியா மாகாணத்தில் அட்டார்னி ஜெனரலாகவும் இருந்தார். அதன்மூலம் கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக செயல்பட்ட முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையும் கமலா ஹாரிஸுக்கு உண்டு. செனட் சபையில் நடந்த விசாரணைகளில் தனது துல்லியமான கேள்விகளால் பலரது கவனத்தையும் ஈர்த்தார் கமலா ஹாரிஸ்.
அரசியல் பிரவேசம்
2012ம் ஆண்டு தேசிய ஜனநாயக மாநாட்டில் இவர் ஆற்றிய உரை இவருக்கான அரசியல் கதவை திறந்தது. 2016ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் இருந்து அமெரிக்க செனட் சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அமெரிக்க செனட் சபைக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வானது அதுவே முதல் முறை.
குறுகிய காலத்திலேயே ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்த அவர், கடந்த 2020ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகவும் தன்னை முன்னிறுத்திக் கொண்டார். அப்போது, அதிபர் டிரம்ப் மீது புள்ளி விவரங்களோடு இவர் வைத்த குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியிலும் இவருக்கான அலையை ஏற்படுத்தியது.
அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜோ பைடனுக்கு கடுமையான நெருக்கடியை கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பொருளாதார சிக்கல்களால் தேர்தலிலிருந்து பின்வாங்கினார் கமலா ஹாரீஸ். பின்னர், அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மீண்டும் அதிபர் வேட்பாளர்?
இந்நிலையில்தான், தற்போது மீண்டும் 2024ம் தேர்தலில், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜோ பைடன் விலகியுள்ளார். இதனால், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்படுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அடுத்த மாதம் ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளர் குறித்து தகவல் வெளியாகும்.
அப்போது கமலா ஹாரிஸ் பெயர் அறிவிக்கப்பட்டால், அவர் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து இந்த அதிபர் தேர்தலை சந்திப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
துளசேந்திரபுரம்
சரி, இப்போது துளசேந்திரபுரம் கதைக்கு வருவோம். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்தான் கமலா ஹாரிஸ். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் சுருக்கெழுத்தராக (ஸ்டெனோகிராஃபர்) வேலை செய்தார். அதன் தொடர்ச்சியாக குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) அதிகாரியாக அவர் பணியாற்றினார்.
பி.வி. கோபாலனை ஸாம்பியா நாட்டுக்கு அகதிகளைக் கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் அனுப்பி வைத்தது. அப்போது அந்த நாட்டுக்குக் குடும்பத்தோடு சென்ற பி.வி. கோபாலன், பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். அதன்பின்னர்தான் அவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவருடன் திருமணம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் பிறந்தார்.
சென்னையில் சித்தி வீடு
தற்போது அமெரிக்காவில் வசித்து வந்தாலும், கமலா ஹாரிஸ் குடும்பத்தின் குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு கமலா ஹாரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விவரம்கூட, அக்கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமலா ஹாரிஸ் குடும்பம் இன்றளவும் தமிழ்நாட்டோடு நெருக்கமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது தூரத்து உறவினர்கள் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர்.
அதனால்தான் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளராகலாம் என்ற தகவலே அக்கிராமத்தின்ரை அதிக மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. எப்படியும் அவர் இந்தத் தேர்தலில் வென்று, அமெரிக்க அதிபராகிவிட வேண்டும் என இப்போதே கனவு காணத் தொடங்கி விட்டனர் துளசேந்திரபுரம் மக்கள்.
கூடவே, அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, துளசேந்திரபுரம் கிராமத்திற்கு வருகை தந்து மக்களை சந்திக்க வேண்டும் எனவும், இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் இப்போதே அன்பாக கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.