ஆஸ்கர் விருது பரிந்துரைக்குத் தேர்வாகிய மீனவக் குடும்பச் சிறுமியின் குறும்படம்!
2020ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலுக்குள் நுழைந்துள்ளது மகளை ஸ்கேட்டராக்க வேண்டும் என்ற மகாபலிபுரத்தைச் சேர்ந்த சுகந்தி மற்றும் அவருடைய மகள் கமலி பற்றிய டாக்குமென்டரி குறும்படம்.
2020ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலுக்குள் நுழைந்துள்ளது பல பேராட்டங்களுக்கு மத்தியில் மகளை ஸ்கேட்டராக்க வேண்டும் என்ற முனைப்பில் கடற்கரையோரம் மீன் விற்று உழைத்து வரும் மகாபலிபுரத்தைச் சேர்ந்த சுகந்தி மற்றும் அவருடைய மகள் கமலி பற்றிய டாக்குமென்டரி குறும்படம்.
55வினாடிகள் ஓடும் குறும்படத்தின் டிரைலரில், காலணிகளற்ற வெற்று கால்களுடன், ஒரு காலில் மட்டும் கட்டிய மந்திரிச்ச கயிறு, எண்ணெய் வழியும் கூந்தல் அழகிய சுருள்களுடன் விரித்திருக்க, கவுன் மாட்டிக்கொண்டு ஸ்போர்ட்ஸ்மேன்களுக்கான எவ்வித லுக்குமின்றி தோன்றும் 9 வயது சிறுமி, ஸ்கேட் போர்டில் லாவகமாய் ஏறி வானை நோக்கிய பார்வையுடன் பறக்கத் தொடங்குவாள். அக்காட்சிகளை காணுகையில், அழகிய சுந்திரியின் கள்ளக்கபடமற்ற வெள்ளந்தி புன்னகையும், நம்பிக்கையும், வானுயர இலக்கைக் கொண்ட அவளது பார்வை மட்டுமே கண்ணில் அகப்படும். அவள், மகாபலிபுரத்தின் லிட்டில் ராக்ஸ்டார் கமலி.
கமலி மற்றும் அவளது கண்ணில் ஜொலிக்கும் பிரகாசத்திற்கான ஜோதியாய் விளங்கும் அவளது தாய் சுகந்தியை சுற்றியதே குறும்படம். வீடியோவின் பின்புலத்தில் கமலி ஸ்கேட்டிங் செய்து கொண்டிருக்க சுகந்தி அவரது வலிகளை ஒவ்வொரு வார்த்தைகளிலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
“எனக்கு மட்டும் கல்யாண லைஃப் நல்லாயிருந்துச்சுனா, அப்படியே வீட்ல வச்சு என்ன வளத்த மாதிரியே கமலியை வீட்டுக்குள்ள பூட்டி வளர்த்து 17 வயதில் கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பேன். நம்ம பொண்ணை நம்மள மாதிரியே கூண்டுக்குள்ளே வளர்க்கக்கூடாது. கமலி ஸ்கேட்போர்ட்டு பண்ணும் போது, கால் உடைஞ்சிருச்சுனா யாரு கல்யாணம் பண்ணிப்பாங்கனு நிறையா பேர் கேப்பாங்க. என் செல்லக்குட்டி கமலிக்கு நான் சொல்ற ஒரே அட்வைஸ் - பயப்படாதே...” என்பதுடன் முடிவடையும் வீடியோவின் தலைப்பு ’கமலி’.
லண்டனில் வசிக்கும் சாஷா ரெயின்போ என்பவரால் இயக்கப்பட்ட இக்குறும்படம் ஏற்கனவே, கடந்த மாதம் அட்லாண்டாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் விருது பெற்றது. அத்துடன் கடந்தாண்டுக்கான மும்பை சர்வதேச குறும்பட விருதில் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுத் தந்தது ’கமலி’. இந்நிலையிலே, 2020ம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலுக்கு தற்போது தேர்வாகியுள்ளது.
இன்று, கமலியை உலகம் அறிவதற்கு ஆதி ஊற்றாய் இருந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கேட்டர் ஜேமி தாமசுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சென்னையில் வசிக்கும் வெளிநாட்டவராக ஐரிஸ். மகாபலிபுரத்திரத்துக்கு ஜேமி வந்திருந்தபோது, கமலிக்கு சில டிரிக்சுகளை கற்றுக்கொடுத்ததுடன் அவரது நிறுவனத்துக்கு ஸ்கேட்போர்ட் ஒன்றையும் பரிசாக அளித்தார்.
அப்போது அவர் கிளிக்கிய புகைப்படத்தை மற்றொரு டாப் பேமஸ் ஸ்கேட்டர் டோனி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட படுவைரலாகியதே, கமலி இன்றைய வெற்றிக்கான அடித்தளத்தையிட்டது.
போராட்டங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றியில் முக்கியப் பங்கு கொண்ட ஐரிஸ் கூறுகையில்,
“சர்வதேச ஸ்கேட்போர்டஸ் சந்திப்புக்காக நாளை கமலியும், சுகந்தியும் ஷாங்காய் செல்ல உள்ளனர். முதல் முறை வெளிநாட்டுக்கு செல்பவர்களது ஃபீல் எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள். அப்படியொரு மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கமலியை எனக்கு 3 வயதில் இருந்தே தெரியும். அவள் குழந்தை தான். ஆனால், சில சமயங்களில் அவள் லாஜிக்கலாக நிறையா யோசிப்பா.
”விளையாட்டு உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை தருவதுடன். மீனவ சமுதாயத்திலிருந்து வரும் ஒரு பெண்ணுக்கு தேவையான வாய்ப்பு எனும் வாசலை விளையாட்டு அளிக்கிறது. அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் அவள். அதனால் தான், நான் ஸ்போர்ட்சை ஊக்குவிப்பேன். எதிர்கால சந்ததியற்கான உதாராணமாய் விளங்க அவள் தயாராகி விட்டாள்,” என்றார்.
படங்கள் உதவி : கமலி ஃபேஸ்புக் பக்கம்