கீழடி அகழாய்வு தொடர்ந்து நடக்கக் காரணமாக இருந்த பெண் இவர் தான் தெரியுமா?
மண்ணிற்கு அடியில் புதைந்து கிடந்த பொக்கிஷமான ஆதாரங்கள் கீழடியில் இருந்து கிடைக்கக் காரணமாக இருந்தவர் தான் வழக்கறிஞர் கனிமொழி மதி. கீழடிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?
ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் அந்த குடும்பத்திற்கே கல்வியறிவு கிடைக்கும் என்று பெண்கல்வியை ஊக்குவிப்பதற்காக சொல்லப்பட்டது இது. ஆனால் இந்தப் பெண் பெற்ற கல்வியறிவால் தமிழ்ச்சமூகமே வெளிச்சம் பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.
மனித நாகரீக வளர்ச்சியின் வரலாறு தென்தமிழகத்தில் இருந்தும் தோன்றி இருக்கலாம் என்று உலகமே வியந்து பார்க்கும் வகையில் மண்ணிற்கு அடியில் புதைந்து கிடந்த பொக்கிஷமான ஆதாரங்கள் கீழடியில் இருந்து கிடைக்கக் காரணமாக இருந்தவர் தான் அந்தப் பெண் கனிமொழி மதி.
திண்டுக்கல் மாவட்டம் தேவத்தூர் கிராமத்தை சேர்ந்த கனிமொழி மதி பெரியாரின் புத்தகங்களைப் படித்தே வளர்ந்தவர்.
“நான் +2 வரை திண்டுக்கல்லிலேயே தான் படித்தேன். அப்பா பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர் என்பதால், அதிக புத்தகங்கள் வீட்டில் இருந்தன. வீட்டில் நிறைந்து கிடக்கும் அந்தப் புத்தங்களை படித்து தெளிந்த அறிவை பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு அப்பாவால் எனக்கு கிடைத்தது,” என்கிறார் கனிமொழி.
இளநிலை பாடமாக வரலாற்றுப் பிரிவை படித்தவர் அதனைத் தொடர்ந்து சென்னை அம்பேத்கர் கல்லூரியில் சட்டம் படித்துள்ளார். 8 ஆண்டுகள் மூத்த வழக்கறிஞர்களுடன் பணியாற்றி விட்டு 2009ம் ஆண்டு முதல் தனியாக வழக்குகளை எடுத்து வாதாடி வருகிறார். வழக்கறிஞராக மட்டுமின்றி பெண் உரிமைகளுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளராகவும் விளங்குகிறார் இவர்.
கனிமொழிக்கும் கீழடிக்கும் என்ன தொடர்பு?
தமிழ் ஆர்வலர்களுக்கு ஊக்கம் தருவதாகவும் புறாணங்களில் சொல்வது போல தமிழை சங்கம் வைத்து வளர்த்த இடம் மதுரை என்பதை நிரூபிக்கும் ஆதாரமே, மதுரையை அடுத்த கீழடியில் நடந்த தொல்பொருள் ஆய்வில் தோண்டத் தோண்ட கிடைத்த எச்சங்கள்.
தமிழர்கள் வெறும் பழம்பெருமை பேசுபவர்கள் அல்ல உலகிற்கே முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்கள் என்பதை உணர்த்துவது தான் கீழடி அகழாய்வு என்கிறார் கனிமொழி.
கீழடி, கி.மு. 6ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1ம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கியிருக்க வேண்டும் என்பது பலகட்ட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. வழக்கிற்காக நான் அடிக்கடி மதுரைக்குச் சென்று வந்து கொண்டிருந்த சமயத்தில் கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தன. அடிப்படையில் நான் வரலாற்று மாணவி என்பதால் எதேச்சையாக ஒரு முறை கீழடியை சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என்று சென்றிருந்தேன்.
அங்கு நான் கண்ட வரலாற்று எச்சங்கள் என்னை பிரமிக்க வைத்தது. குழாய்கள் மூலம் நீரைக் கொண்டு செல்ல ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டமைப்பு, குவியல் குவியலாகக் கிடைத்த பானை ஓடுகள், கலைநயம் ததும்பிய பொருட்கள் நிரம்பி இருந்தன. நமது மூதாதையர் ஒற்றுமையோடு வாழ்ந்திருக்கிறார்கள், மெய்ஞான அறிவியலை வைத்தே தொழில் செய்து பிழைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் அவற்றை கண்ட போது உணர முடிந்தது.
அடுத்தது என்ன நாகரீக வளர்ச்சிக்கான புதையல் கீழடியில் இருந்து கிடைக்கப்போகிறது என்று காத்திருந்த சமயத்தில் தான் அந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. கீழடி அகழாய்வு அடுத்து நடத்தப்படாது என்று 2016 செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது. 4ம் கட்ட அகழாய்வுப் பணிகள் சப்பைக்கட்டு காரணங்கள் சொல்லி மூடப்படுவ்தற்கான சூழல் இருந்ததைக் கண்டு என்னுள் ஒரு வித பதற்றம் ஏற்பட்டது.
இனியும் தாமதித்தால் தமிழரின் வரலாறு மறைக்கப்படும் என்பதை உணர்ந்தேன். அகழாய்வு இடங்களை மூடக்கூடாது, அவற்றை ஒரு திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றி உண்மையை உலகறியச் செய்ய வேண்டும் என்று உறுதியெடுத்தேன்.
சட்ட ரீதியில் அணுகலாம் என்று அகழாய்வு தொடர பொதுநல வழக்கைத் தொடர முடிவெடுத்தேன். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுப்பதை விட ஹைகோர்ட் மதுரைக்கிளையில் தொடுத்தால் வழக்கின் சாராம்சம் முக்கியத்துவம் பெறும் என்று மதுரையில் வழக்கை தொடுத்துள்ளார்.
மதுரையில் வழக்கு தொடர்ந்ததால் போக்குவரத்தில் சிக்கல் இருந்தாலும் சொந்த வழக்குகளுக்கு ஆஜராகாவிட்டாலும் இந்த பொதுநல வழக்கில் ஒரு நாள் கூட ஆஜராகாமல் இருந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார் கனிமொழி.
ஏனெனில் இந்த வழக்கில் சரியான அக்கறை காட்டாவிட்டால் அது தனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயத்துக்கே பாதிப்பு என்பதால் மிகுந்த சிரத்தையோடு வழக்கு தொடர்பான அத்தனை தகவல்களைத் திரட்டி நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டி வாதாடி இருக்கிறார்.
கீழடி அகழாய்வுக்காக பொதுநல வழக்கு தொடர்ந்ததை நீதிபதிகளே முதலில் பாராட்டினர். பின்னர் இந்த வழக்கில் சரியான தீர்ப்பை அளிக்க வேண்டும் என்பதால் அவர்கள் நேரடியாக கீழடிக்குச் சென்று ஆய்வு நடத்தி அதன் பின்னர் இந்தியத் தொல்லியல் துறைக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
கீழடியில் 4ம் கட்ட அகழாய்வுப் பணியில் தமிழக அரசும் இணைந்து செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். என்னுடைய முயற்சிக்கு வெற்றியாக கீழடியில் 4ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் கனிமொழி.
தமிழகத்தில் காவிரிபூம்பட்டினம், ஆதிச்சநல்லூர், அழகன்குளம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் ஆவணப்படுத்தப் படவில்லை. கீழடிக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று போராடிய கனிமொழி மதியின் முயற்சி இன்று வெற்றி கண்டுள்ளது.
கீடியில் தொடர்ந்து நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தற்காலிக அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனை தமிழ் மக்கள் மட்டுமின்றி உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் மார்தட்டி பெருமையோடு சொல்லி வருகின்றனர் நாங்கள் தான் மனித நாகரிகத்தின் ஊற்றுக்கண் என்று.
கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கும் பொருட்கள் மனிதர்கள் அந்த காலத்திலேயே யதார்த்தமான, செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. செங்கல்லால் ஆன கட்டுமானங்கள், பானை ஓடுகள், யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டை, கலைநயமிக்க ஆபரணங்கள் யாவும் மனித நாகரீக வளர்ச்சியை தென்முனையில் இருந்து பார்க்க வேண்டும் என்று இதுவரை நாம் படித்து வந்த வரலாற்றையே ஆட்டம் காண வைத்துள்ளது.
ஏனென்றால் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கார்பன் டேட்டிங்கில் கி.மு.3-ம் நூற்றாண்டையும் பின்னோக்கிச் செல்கின்றன. அதவாது சுமார் 2600 ஆண்டுகள் பழமையான பொருட்கள் என்று அறியப்படுகிறது.
வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே என்பது இன்று வடிவேலுவின் நகைச்சுவை வசனமாக மட்டுமே அறியப்படுகிறது. உண்மையில் வரலாற்றை மீட்டெடுப்பது எதிர்கால வாழ்க்கை முறைக்கும் முக்கியமானது.
தற்காலச் சமூகம் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான மூலதனம் தான் வரலாற்றுத் தேடல்கள், அகழாய்வுகள். அதில் நாம் சறுக்கவே கூடாது என்கிறார் கனிமொழி மதி.
கீழடியில் அகழாய்வுக்கு 2016லேயே முற்றுப்புள்ளி வைக்கப்பார்த்த நிலையில் அந்த ஆராய்ச்சி தொடர தொடக்கப்புள்ளியாக இருந்த வழக்கறிஞர் கனிமொழி மதியின் சட்டப் போராட்டத்தால் இன்று உலக அரங்கில் தமிழ் மொழியும் தமிழர் நாகரீகமும் தலை நிமிர்ந்து தனிக்கவனம் பெற்று நிற்கிறது. உலகத் தமிழினமே போற்றும் உண்மையான சிங்கப்பெண் கனிமொழி மதி!.
கட்டுரை தொகுப்பு: இந்துஜா ரகுனாதன்