Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வில்லேஜ் விஞ்ஞானி ‘ரோபோ பாலாஜி’ - கண்டாச்சிப்புரம் டூ அமெரிக்கா வரை சாதித்த தச்சர் மகன்!

சிற்றுாரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, ரோபோக்களின் மீதான காதலால், தொடர் முயற்சி செய்து ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர் என ஏழு நாடுகளுக்கு பயணித்து அவருடைய ரோபோ கண்டுபிடிப்புகளின் ஆய்வறிக்கைகளுக்காக 4 சர்வதேச விருதுகளை பெற்றுள்ள 'வில்லேஜ் விஞ்ஞானி' பாலாஜி-யின் நம்பிக்கைக் கதை!

வில்லேஜ் விஞ்ஞானி ‘ரோபோ பாலாஜி’ - கண்டாச்சிப்புரம் டூ அமெரிக்கா வரை சாதித்த தச்சர் மகன்!

Thursday September 30, 2021 , 4 min Read

திருமணங்கள், சுற்றுலாத் தளங்கள், திரைப்படக்காட்சிகள், திருவிழாக்கள், பேரிடர்கள், போராட்டங்கள் என பல இடங்களிலும் கழுகு பார்வையில் படமெடுத்தளிக்கும் ட்ரோன்களை சாதரணமாகப் பார்க்க முடிகிறது. பல்வேறு துறைகளிலும் பயன்பட்டுவரும் அந்நவீன கண்களை 12 ஆண்டுகளுக்கு முன்பாகவே வடிவமைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் தான் 'ரோபோ' பாலாஜி.


இன்று வேகமாக வளர்ந்துவரும் ரோபோட்டிக்ஸ் துறையில் எதிர்கால சந்ததியினர் வலம்வருவதற்காக அவர் தொடங்கிய 'தமிழ் ரோபோட்டிக்ஸ் கிளப்' 10,000 மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளித்துள்ளது. எதிர்காலத்தில் அமெரிக்காவில் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் தொடங்கும் முனைப்போடு செயல்பட்டு வருகிறார் பாலாஜி.

robotics balaji

’ரோபோ’ பாலாஜி

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிப்புரம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி திருநாவுக்கரசு. சிற்றுாரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, ரோபோக்களின் மீதான காதலால், தொடர் முயற்சி செய்து ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர் என ஏழு நாடுகளுக்கு பயணித்து அவருடைய ரோபோ கண்டுபிடிப்புகளின் ஆய்வறிக்கையை சமர்ப்பித்து 4 சர்வதேச விருதுகளை பெற்றுள்ள 'வில்லேஜ் விஞ்ஞானி' பாலாஜியின், நம்பிக்கை பயணம் இது.


"எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி நான். அடிப்படையில் எங்களுடையது தச்சுக் குடும்பம். எங்க அப்பா மர வேலைகள் செய்து வந்தார். விவசாயத்திற்கான ஏர்கலப்பை, மாட்டு வண்டிகள், தவிர கதவு, ஜன்னல் எல்லாம் அப்பா, செய்து கொடுப்பார். சின்ன வயசுல அப்பா எப்படி செய்கிறாங்கனு பாத்திட்டே இருப்பேன்.

ஒரு கட்டத்தில் நான் 6வது படிக்கும் போது, மரக்கட்டைகள் வைத்து ஏர் கலப்பையை ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் வகையில் வடிமைத்தேன். அப்போது தான் (1996ம் ஆண்டு) ஹோண்டா நிறுவனம் மனித உருவத்திலான ரோபோட்களை அறிமுகம் செய்தது. அதை பார்த்ததில் இருந்தே எனக்கு அதே போல ரோபோ செய்யணும்னு ஆசை வந்தது. மரக்கட்டை, அட்டைப் பெட்டியெல்லாம் வைத்து ரோபோ பண்ண ஆரம்பிச்சேன். அப்படி தான் ரோபோட்டிக்ஸ் மீதான ஆர்வம் தொடங்கியது.

ரோபோட்டிக்ஸ் தொடர்பானப் புத்தகங்கள், செய்தித் தாள்களை தேடித் தேடி படிக்கத் துவங்கினேன். ஸ்கூல் படிக்கும் போது, நிறையப் போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொண்டேன். பலமுறை மாவட்ட அளவிலான போட்டிகளில் பரிசு பெற்றது இன்னும் கொஞ்சம் எனர்ஜி கொடுத்தது. 11 ஆம் வகுப்பு படிக்கும் போது, ​​நான் உருவாக்கிய ஹைட்ராலிக் ரோபோவிற்கு அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்தது. 'இளம் விஞ்ஞானி' என்ற விருதும் பெற்றேன்.

balaji
பள்ளி முடித்தபின் குடும்பத்தின் நிதி நிலைமை மோசமாக இருந்ததால், என்னால் கல்லுாரியில் சேர முடியவில்லை. ஒரு வருடம் பிரேக் விழுந்தது. பலருடைய உதவிகளை நாடி கஷ்டப்பட்டு எப்படியோ இன்ஜீனியரிங் காலேஜில் சேர்ந்தேன். காலேஜில் படித்து கொண்டிருந்த போதே, 2009ம் ஆண்டில் இப்போது பரவலாக அறியப்படும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா பறக்கும் வாகனத்தினை வடிவமைத்தேன். வீட்டில் கஷ்டம் இருந்தாலும், எனக்கு ரூ.10,000 பணம் கொடுத்து சப்போர்ட் பண்ணாங்க.

ஆனா, போதிய வழிகாட்டுதல் இல்லாததால், அந்த புராஜெக்ட் தோல்வியில் முடிந்தது. ஆனாலும், நான் முயற்சியை கைவிடவில்லை.

'தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில்' "சூரிய ஆளில்லா வான்வழி வாகன" திட்டத்தின் மேம்பாட்டுக்காக ரூ.10,000 நிதியுதவி அளித்தது. அதற்காக, தமிழக அரசின் 'பெஸ்ட் ஸ்டூடன்ட் புராஜெக்ட்' என்ற விருதும் கிடைத்தது. தொடர்ந்து 2010ம் ஆண்டு, தண்ணீர் மற்றும் காற்றைக் கொண்டு இயங்கக்கூடிய ரோபோ ஒன்றை வடிவமைத்தேன். அந்த புராஜெக்ட் தான் ரோபோட்டிக்ஸ் துறையில் அடுத்த அடுத்தக் கட்டத்திற்கு என்னை கொண்டுச் சென்றது.

ரோபோட்டிக்ஸ் கண்டுப்பிடிப்பில் ஈடுப்பட்டு கொண்டே பொருளாதாரச் சூழல் காரணமாக கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தேன். ஆனால், என் மனம் எப்படியாவது ரோபாட்டிக்ஸ் பற்றிய என் அறிவை மேம்படுத்திவிட வேண்டும் என்று அலைப்பாய்ந்து கொண்டிருந்தது.


என்னுடைய முயற்சிகளுக்கு மீண்டும் ஒருமுறை கைகோர்த்த சிலரால், ரோபோட்டிக்சில் முதுகலைப் பட்டம் பெறமுடிந்தது. சிறு கிராமத்திலிருந்து ஆர்வத்தையும், திறனையும் மட்டும் நம்பி, கல்லுாரியில் சேர்ந்தேன். கல்லுாரியில் படிக்கும்போதே நிறைய புராஜெக்ட் செய்து, பெஸ்ட் பெர்ஃபாமர் விருதும் பெற்றுள்ளேன். அப்போது, விவசாயத்திற்காக ஒரு ரோபோ வடிவமைத்தேன்.

மனித உழைப்பை அதிகம் நம்பியிருக்கும் விவசாயத்திற்காக ரோபோ தயாரிக்கவேண்டும் என்பது என்நீண்ட நாள் கனவு. அதை எண்ணத்தில் கொண்டு விதை விதைப்பது, களையெடுப்பது, நிலத்தின் தண்ணீர் அளவை கணித்து தண்ணீரை தெளிப்பது, நாற்றுநடுதல் என ஒரு விவசாயின் வேலையினை செய்யக்கூடிய ரோபோவினை 2013ம் ஆண்டு வடிவமைத்தேன். அந்த ரோபோவினை போன் ஆப் மூலமாக இயக்கமுடியும்.
robot
ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைகழகத்தில், எனது ரோபோவினை காண்பிக்க விண்ணப்பித்தேன். எனது ரோபோ பற்றி பிரசன்டேஷன் கொடுப்பதற்காக ஜப்பான் பல்கலைகழகம் அழைப்பு விடுத்ததினை மறக்கவே இயலாது. ஏனெனில், அதன்பிறகு மலேசியா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், தைவான், சீனா என 7 நாடுகளுக்கு சென்று ஆய்வறிக்கைகளை சமர்பித்து உரை நிகழ்த்தியுள்ளேன்.

அமெரிக்காவின் ஆராய்ச்சி டாக்டர்கள் கமிட்டி, மலேசியாவில் ஒரு ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியது. ஜப்பானுக்கு அனுப்பியது போன்ற மற்றொரு ஆராய்ச்சி அறிக்கையை ஒரே மாதத்தில் தயார் செய்து அனுப்பினேன். அதுவும் தேர்வு செய்யப்படவே, மலேசியாவிற்கு அழைத்திருந்தனர். அதிலும், சிறந்த ஆராய்ச்சி அறிக்கை என்ற விருதை வாங்கினேன்.


அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேச ரோபோட் ஆய்வுக் கருத்தரங்கில், ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து ஆய்வுக் கட்டுரைக்கான முதல் பரிசையும் ரோபோட் வென்றது.

எளிய மக்களும் பலன் பெறும் வகையில் விதை விதைக்கும் ரோபோ, ஹோம் ஆட்டோமெஷன் ரோபோ, சர்வீஸ் ரோபோ, வெட்டிவேர் அறுவடை செய்யும் ரோபோ ஆகிய ரோபோக்களுக்கு தயாரிப்பு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார்," என்று கடகடவென கடந்துவந்த பாதைகளைப் பகிர்ந்தார் பாலாஜி.
balaji

நான்கு சர்வதேச விருதுகள், 7 நாடுகளுக்கு பயணித்து ஆய்வறிக்கை சமர்பித்தல் என ரோபோட்டிக்ஸ் துறையில் வளர்ந்து வரும் அவருக்கு பல நிறுவனங்களும் வேலை வாய்ப்பை நல்கியது. ஆனால், இந்தியாவில் ரோபோட்டிக்ஸ் துறை வளர்ச்சியில் பங்காகயிருக்க முடிவு செய்துள்ளார்.


அதற்காக அரசுப் பள்ளிகளை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளார் பாலாஜி. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக வழிகாட்டுதலின்றி ரோபோட்டிக்ஸ் துறையில் பயணிக்கத் துவங்கிய பாலாஜியின் நிலையிலே இன்றைய எதிர்கால சந்ததியினரும் முடங்கியிருப்பதை உணர்ந்த அவர், அதற்கான பணிகளின் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டுள்ளார்.

அதன் தொடக்கமாக, தமிழ் மொழியிலே ரோபோட்டிக்ஸை கற்றுக் கொடுப்பதற்காக, "தமிழ் ரோபோட்டிக்ஸ் கிளப்" என்ற கிளப்பைத் தொடங்கியுள்ளார். அதன்படி, கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பயணித்து வொர்க்‌ஷாப் நிகழ்த்தி 10,000 பள்ளிமாணவர்களுக்கு இலவசமாக ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளித்துள்ளார்.
ரொபோடிக்ஸ்

இவை தவிர்த்து 4 வாட்சப் குரூப்களின் வழியே 130 வழிகாட்டியாளர்களுடன் இணைந்து தாய்மொழியில் ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளித்து வருகிறார். அத்துடன், பாலாஜி தொடங்கியுள்ள "வில்லேஜ் டெக்னாலஜி" எனும் மையம், அதன் தனித்துவமான 'லில்லிபாட்' என்ற ரோபோட்டிக்ஸ் கற்றல் கிட் மூலமாக, அனைத்து மாணவர்களுக்கும் ரோபோட்டிக்ஸ் கல்விச் சென்றடைய வழிவகைச் செய்துள்ளது.


"மாணவர்கள் டெக்னாலஜி கற்றுக் கொள்ள வேண்டும். எல்லா மாணவர்களுக்கும் ரோபோட்டிக்ஸ் கிட் கிடைக்க வேண்டும் என்று தான் குறைவான விலையில், அந்த கிட்டை வடிவமைத்தோம். ப்ரான்சைஸ் முறையில் கோவை, மதுரை, திருச்சி, வேலுார் ஆகிய மாவட்டங்களிலும் வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூலை விரைவில் துவங்க உள்ளோம். இன்னும் சில ஆண்டுகளில் டீச்சிங் துறையினை ரோபோக்கள் ஆக்கிரமித்துவிடும். அமெரிக்காவில் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் துவங்குவதற்கான முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறேன்," என்று எதிர்கால திட்டங்களை கூறிமுடித்தார் நம்மூர் வில்லேஜ் விஞ்ஞானி.