Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தமிழ் நூல்களை மின்னூலாக்கி தமிழ் மொழியின் வளத்தை பரப்பிடும் ’கணியம் அறக்கட்டளை’

இவர்கள் தொடங்கியுள்ள இணையதளத்தில் தமிழ் தொடர்பான கட்டுரைகளையும், தமிழ் நூல்களையும் பதிவேற்றி மின்னூலாக்கி உள்ளனர். ஆங்காங்கே வாழும் தமிழ் ஆர்வலர்கள் தாங்களாக முன் வந்து தங்களையும் இப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

தமிழ் நூல்களை மின்னூலாக்கி தமிழ் மொழியின் வளத்தை  பரப்பிடும் ’கணியம் அறக்கட்டளை’

Thursday August 01, 2019 , 3 min Read

அனைவரும் ஆங்கில வழியில் படித்துவிட்டு, அவரவர் வேலையைப் பார்க்க போய்விடுகின்றனர். அல்லது பொருளீட்ட வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர். இப்படி இருந்தால் தமிழ் எப்படி வளரும் என இனி யாரும் கவலைப்பட வேண்டாம்.


நாங்கள் படித்தது ஆங்கில வழியாக இருந்தாலும், வெளிநாடுகளில் வசித்தாலும் அன்னை மொழியாம் தமிழை வளர்ப்போம் என களமிறங்கி இருக்கிறது 'கணியம் அறக்கட்டளை' அணி.


காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவ சீனிவாசன், சென்னையில் ஒரு ஸ்டார்ட்-அப்’ல் பணிபுரிகிறார். தன்னுடன் பல்வேறு நண்பர்களையும், தன்னார்வலர்களையும் இணைத்து 'கணியம் அறக்கட்டளை' எனும் பெயரில் அழிவின் விளிம்பில் இருக்கும் நூல்களை டிஜிட்டல்மயமாக்கி காப்பாற்றி வருகிறார்.

கணியம்

கணியம் அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீனிவாசன்

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கடந்த 7 ஆண்டுகளாக kaniyam.com என்ற பெயரில் கணிப்பொறி தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டு வருகிறேன். அப்போது சில தமிழன்பர்கள் தமிழ் தொடர்பான கட்டுரைகள் மற்றும் நூல்கள் பற்றியும் இத்தளத்தில் வெளியிடலாமே என எனக்கு யோசனை தெரிவித்தனர்.


இதையடுத்து, freetamilebooks.com என்ற இணையதளத்தைத் தொடங்கி, அதில் தமிழ் தொடர்பான கட்டுரைகளையும், தமிழ் நூல்களையும் பதிவேற்றி வந்தோம். அப்போது ஆங்காங்கே இருந்த தமிழ் ஆர்வலர்கள் தாங்களாக முன் வந்து தங்களையும் இப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

இதையடுத்து எங்களது பணி சூடு பிடித்தது. நாங்கள் 7 பேர் சேர்ந்து கணியம் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஓன்றை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் மூலம் பல்வேறு நூல்களைப் பதிவேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இப்பணியில் தற்போது எங்களுடன் 50 தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஓவ்வொருவரும் ஓவ்வொரு இடத்தில் இருந்தாலும், தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்களின் தமிழ் பணியை மேற்கொள்வார்கள்.

எங்களுக்குத் தேவையான Apps, Software போன்றவற்றை எங்களது குழுவே தயாரித்துவிடும். மேலும் இவற்றை நாங்கள் open source முறையில் வெளியிடுவதால் இதனை தேவைப்படுவோர் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போதுவரை 550க்கும் மேற்பட்ட நூல்களை இவ்வாறு மின்னூலாக்கம் செய்துள்ளோம். இதனை எந்தவொரு கணினி, செல்போன், டேப்லெட் போன்ற எலெக்ட்ரானிக் கருவிகளில் யார் வேண்டுமானாலும் இலவசமாக download செய்து படிக்கலாம்.

குறிப்பாக, எங்களது புத்தகங்களை டவுன்லோட் செய்து படிப்பவர்கள் அதனை விரும்பியவர்களுக்கு ஷேர் செய்யலாம். எங்களது நூல்கள் அனைத்தும் open source முறையிலானது. ஆனால் நீங்கள் மற்ற தளங்களில் download செய்யும் நூல்களை இவ்வாறு பயன்படுத்த முடியாது என்பதே எங்கள் தளத்தின் சிறப்பாகும் என்றார்.

மேலும், எங்களது அறக்கட்டளை மூலம் சங்க இலக்கியங்களுக்கு என தனி App, புத்தகத்தில் உள்ள பக்கங்களை அப்படியே pdf பண்ணாமல், அந்த எழுத்துக்களை மட்டும் உள்வாங்கி டிஜிட்டல் e-books ஐ உருவாக்கும் App, பக்கங்களில் உள்ளதை அப்படியே ஆடியோவாக மாற்றும் App என பல்வேறு தனித்துவமான App’களை தமிழுக்காக உருவாக்கி இருக்கிறோம்.


மேலும், எங்களது குழுவில் கிராபிக்ஸ், புரூப் நீடிங், அட்டைப் பட டிசைன் என அனைத்து வேலைகளையும் அனைவரும் பகிர்ந்து செய்கிறோம் என்றார்.


இதுகுறித்து கணியம் அறக்கட்டளையைச் சேர்ந்த அன்வரிடம் கேட்டபோது,

“பொதுவாக நாங்கள் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள், பிரபலமானவர்களின் தற்போது பதிப்பில் இல்லாத நூல்கள், தனிநபர்களின் பழமையான தமிழ் நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை e-books ஆக மாற்றி வருகிறோம். சில பதிப்பகங்களின் நூல்களை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க டிஜிட்டல்மயமாக்கி வழங்குகிறோம்,” என்றார்.

இதில், குறிப்பாக எனது பணியானது தொடர்புடைய நூலின் ஆசிரியர் அல்லது பதிப்பகத்தை தேடிச் சென்று அவர்களிடம் இதுதொடர்பாக அனுமதி பெறுவதாகும். அனுமதி கிடைத்த பிறகே அந்த தமிழ் நூலை எங்கள் குழு டிஜிட்டல்மயமாக்கும் பணியைத் தொடங்கும்.


எங்களது குழுவில் என்னைத் தவிர சீனிவாசன், லெனின் குருசாமி, நித்யா, கலீல், கார்க்கி, அருணாசலம் போன்றவர்கள் முக்கிய பங்காற்றி பணியாற்றி வருகின்றனர்.

கணியம்

கணியம் குழு (அன்வர், நித்யா, கலீல் மற்றும் கார்கி)

எங்களது அனைத்து நூல்களையும் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் கருவிகளிலும் அனைவரும் பார்த்து படித்து பயன்பெறலாம்.


எந்தவொரு தமிழ் நூலும் அழிந்துவிடக் கூடாது. மறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட நூல்களை வெளியுலகத்துக்கு கொண்டு வரவேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளாகும். இந்த குறிக்கோளை நோக்கியே எங்களது குழு பயணிக்கிறது என்றார்.


குறிப்பாக இவர்கள் பயன்படுத்தும் e-pub எனும் App மூலம் எவ்வளவு பெரிய திரையிலும் புத்தகத்தை தெளிவாக வாசிக்கும்படி காண்பிக்கமுடியும். இதேபோல, mobi, aA4pdf, 6inchpdf, 4format என எல்லா வகை எலக்ட்ரானிக்ஸ் கருவிகளிலும் புத்தகங்களை படிக்கும் வகையில் e-books உருவாக்கப்படுகின்றன.

டீம்

லெனின் குருசாமி (e-book தயாரிப்பாளர்), அருணாச்சலம் (எழுத்தாளர்)

மேலும், தாங்கள் பெறும் நன்கொடைகள் குறித்த தகவல்களை ஓவ்வொரு மாதமும் அறிக்கையாக பொதுவெளியில் வெளியிடுகின்றனர். இதனை யார் வேண்டுமானாலும் பார்வையிட்டுக் கொள்ளலாம். கணியம் அறக்கட்டளை குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட அவர்களின் இணைப்புகளை பயன்படுத்தலாம்.


வலைதளம்: http://kaniyam.com | http://FreeTamilEbooks.com | https://play.google.com/store/apps/details?id=com.jskaleel.fte | சங்க இலக்கியம் - செயலி https://play.google.com/store/apps/details?id=com.jskaleel.sangaelakkiyangal


மேலும், தமிழுக்காக இணைந்து பணியாற்ற விரும்புவோரையும் கணியம் அறக்கட்டளை இருகரம் கூப்பி வரவேற்கிறது. மேலும் தொடர்புக்கு 9841795468, 8124782351 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.